சுவர்ணபுரம் என்று ஒரு காலத்தில் அழைக்கபட்ட கிராமம் பொன்னூர் என இப்பொழுது அழைக்கப்படுகிறது. உலகப் பொதுமறையான திருக்குறள், ஆந்திராவிலுள்ள கொண கொந்தலாவில் பிறந்து, பொன்னூரில் வாழ்ந்தவரால் இயற்றப்பட்டதாகச் சமணர்கள் நம்புகின்றனர். சமண முனிவரான அவர் குந்தகுந்த ஆச்சாரியார் என்றும் ஏலாச்சாரியார் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
பொன்னூரில் கனககிரி என்றொரு சிறு குன்று உள்ளது. அக்குன்றின் மீது கி.பி.12-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட சமணக் கோட்டம் அமைந்துள்ளது.
ஆதிபகவன் கோயிலின் நாயகன்
இவ்வூரில் குந்தகுந்த ஆச்சாரியார் வாழ்ந்ததால் இந்தக் கோயில் மிகவும் சிறப்புப் பெற்றதாகும். குன்றும் கோயிலும் கண்கவரும் விதத்தில் உள்ளன. அசோகமர நிழலில் அமர்ந்து தித்திக்கும் திருவறத்தை உலகம் உய்ய உரைத்த ஆதிபகவன் கோயிலின் நாயகனாக வீற்றிருக்கிறார்.
இவரைப் பற்றிய பாடல் ஒன்றில்,
உன்னுயிரை உள்முகத்தே நோக்கி நின்றால்
உலகமெலாம் உன்னுள்ளே ஒடுங்குமென்ற
பொன்னினொளி உயர்சோதிப்பூமான் மேவும்
பொன்னூரிற் புகுந்திடுதல் எந்தநாளோ?
என்று சமணர்களால் பாடப்படுகிறது.
இச்சிறிய குன்றின் வடக்குத் திசையில் கோயிலுக்குச் செல்லப் படிக்கட்டுகளும் நுழைவாயிலும் உள்ளன. குன்றின் மீது கோயில் கிழக்கு நோக்கி விசாலமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மண்டபத்தில் ஓவியங்கள் அழகுடன் தீட்டப்பட்டுள்ளன. மண்டபத்தில் அழகிய தூண்கள் அமைந்துள்ளன. கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
சமணர்களின் எட்டாவது தீர்த்தங்கரரான பகவான் சந்திரநாதரின் யட்சி சுவாலாமாலினி தேவிக்கு ஒரு சன்னதி இருக்கிறது. வட்ட வடிவிலான தூண்கள் அர்த்த மண்டபத்தைத் தாங்கி நிற்பது அழகாக உள்ளது. நாள்தோறும் நிகழும் பூசை வழிபாட்டுகளுக்கான அருகனின் சிலைகள் மேடை மீது அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஐம்பொறி அடக்கிய அறவோர் தீர்த்தங்கரப் பெருமான்களின் சுதைச் சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.
தண்டமிழுக்கும் வடமொழிக்கும் தலைவராகித் தத்துவமும் தமிழ்மறையும் தந்து நின்ற கொண்டலெனச் சீர்பரவும் குந்தகுந்தாச்சாரியார் தனி மண்டபத்தில் அமர்ந்துள்ளார். இவர் சாரணரித்தி பெற்றிருந்தார் என்று கூறப்படுபவர். குந்தகுந்தர் எண்பத்திநான்கு சிறந்த நூல்களை எழுதியதாகவும் இவ்வூரின் நீலகிரி எனும் மலையில் தவம் செய்ததாகவும் கூறுகிறார்கள். அம்மலையின் உச்சியில் குந்தகுந்த ஆச்சாரியாரின் திருப்பாதங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
குந்தகுந்த ஆச்சாரியார், முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் பண்ணவன் பார்சுவநாதர் மற்றும் யட்சி சுவலாமாலினி மீது மிக்க பக்தி உடையவர். ‘சுவாலாமாலினி கல்பம்’ என்கிற நூல் இங்கு எழுதப்பட்டது. இக்கோயிலில் நவக்கிரகங்கள் அருட்காட்சி தருகின்றன. கலச மேடை ஒன்றும் உள்ளது. ஜினவாணிக்கும் பத்மாவதி அம்மனுக்கும் தனி இடம் அமைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
இந்தச் சமணர் கோயில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ளது.