சிவபெருமானால் சனீஸ்வரர் என்று அழைக்கப்பட்ட சனி பகவான் குடிகொண்டுள்ள மிகச்சிறப்பு வாய்ந்த தலம் திருநள்ளாறு. சைவத் திரு முறைகளில் பேசப்படும் இந்த தலம் தேவாரம் பாடிய அப்பர்,சுந்தரர் மற்றும் சம்பந்தர் ஆகிய மூவர்களால் பாடப்பெற்றது. நள்ளாறு என்றால் இரு நதிகளுக்கு (அரிசிலாறு,நூலாறு)நடுவில் உள்ள ஊர் என்று பொருள்.
இவ்வூர் ஆதியில் தர்ப்பைக்காடாக இருந்ததால் தர்ப்பாரண்யம் என்றும் , நான்முகன் வழிபட்டதால் ஆதிபுரி என்றும் , புகவிடங்கராகிய தியாகேசப் பெருமான் எழுந்தருளி இருப்பதால் நகவிடங்கபுரம் என்றும், நளனால் வணங்கப்பட்டு சனியிலிருந்து நிவாரணம் பெற்றதால் நளேச்வரம் என்றும் வழங்கப்படுகிறது.
தீர்த்தங்கள் ஆறு
திருநள்ளாறு கோவிலின் மூர்த்தி தர்பாரண்யேஸ்வரர். ஸ்தல விருட்சம் தர்ப்பை மரம். அம்மன், போகமார்த்த பூண் முலையாள் . செல்வத்தை அள்ளித் தருபவளாகக் கருதப்படுபவள். மூலவருக்கு அருகே நடன த்யாகேசர் சந்நிதி. மற்றொரு சந்நிதியில் மரகத லிங்கம். இதற்கு நடக்கும் அபிஷேகத்தைக் காண்பது நற்சகுனமுள்ளதாக கருதப்படுகிறது. அம்மன் சன்னிதி அருகிலேயே உள்ளது.
கோவிலைச் சார்ந்த தீர்த்தங்கள் ஆறு. அவைகளில் மிகச் சிறப்பு வாய்ந்ததும் பெரியதுமானது நளதீர்த்தம். சனிக்கிழமைகளில் சுமார் 25,000 பேர் தரிசிக்க வருகின்றனர். அனைவரும் அதிகாலையே இக்குளத்தில் நீராடி நான்கு மணிக்கே கோவில் வாசலில் காத்திருப்பார்கள். குளக்கரையில் வினை தீர்த்த விநாயர். நளன் இவரை தரிசித்து விட்டுதான் பிரதான கோவிலுக்கு சென்றானாம். பக்தர்களும் முழுக்கு போட்டு விட்டு இவரை தரிசித்து பக்கத்திலேயே சூரத் தேங்காய் உடைத்துவிட்டு பின் சனீஸ்வரரை தரிசிக்கச் செலலாம். சனி ப்ரீதியாகும் என்பது நம்பிக்கை.
சனி கொடுப்பர் யார் தடுப்பர்
சோழர் கால கோவிலாகிய இதை நாயன்மார்கள் வழிபட்டுள்ளனர். ஐந்தடுக்கு ராஜ கோபுரம். அகண்ட பிரகாரங்களும் அதன் சுவர்களில் நள சரித்திரத்திலிருந்து பல காட்சிகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. சனி பகவான் இங்கு சிவனை வழிபட்டார். கடந்த சில பல வருடங்களாக தர்பாரண்யேஸ்வரரை விட இவருக்குத்தான் கூட்டம் மிகுகிறது.
சனி மந்தமானவர். யமன் இவருடைய காலில் அடித்ததால் ஊனமாகி ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதற்கு இரண்டரை வருடங்கள் ஆகின்றது. அப்படியிருக்கும்போது ஏன் இப்படி எல்லோருக்கும் துன்பம் தருகிறார்? சூரிய பகவானுக்கும் சாயா தேவிக்கும் மகனாகப் பிறந்த இவர் மிகவும் பக்திமானாக இருந்தார். அநேகப் பொழுதுகளை உறக்கத்தில் கழித்தார்.
அதனால் விரக்தியடைந்த சனியின் மனைவி தனக்கு ஒரு சுகத்தையும் அளிக்காத புருஷர் தானும் மகிழ்ச்சியில்லாத வாழ்வைப் பெறட்டும் என்று சபித்தாள் . தானே விசனத்தில் இருப்பவராதலால் தன்னால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் துன்பத்தையே அளிக்கிறார். ஆனால் அது முழு உண்மையும் அல்ல. அவரின் பிடியிளிருக்கும்போது மங்கு சனி. பின்னர் பொங்கு சனி வரும். அப்போது போனதெல்லாம் இரு மடங்காக வந்து சேரும். ‘சனி கொடுப்பர் யார் தடுப்பர் ' என்று கூறுவதுண்டு.
மூலவர் சந்நிதிக்கு வடக்கு திக்கில் சனீஸ்வரரின் கோவில். சிறிய விக்ரகம் கருப்பு ஆடையில் உள்ளது. தங்கக் காகத்தின் மீது எழுந்தருளியுள்ளார். வலது கையில் ஒரு வாள் இடது கை உயர்ந்து அருள் பாலிக்கும் நிலையில் உள்ளது. அதனால் தான் இவர் இங்கு அனுக்ரஹ மூர்த்தி. பிரசாதத்தை எடுத்துச் செல்லலாம். சனி பகவான் நிறைய முடியுள்ளவராகவும் , ஒல்லியான கரிய நிறம் படைத்தவராகவும் விவரிக்கப்படுகிறார்.
வாழ்விலே ஒருமுறை
சனீஸ்வரருக்கு நல்லண்ணை தீபம் ஏற்றி அருகிலுள்ள கோவிலில் வழிபட வேண்டும். நள தீர்த்தம் ஸ்நானம் அவசியம் (தலையில் தெளித்துக் கொள்ளவாவது வேண்டும்). சனிக்கிழமை தரிசனம் சிறப்பு வாய்ந்தது. ஆனால் அன்று நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டி வரும். சனிப்பெயர்ச்சி அன்று லட்சக் கணக்கில் கூடுகின்றனர். காணிக்கையாக பக்தர்கள் கருப்பு துணி, எள் விதைகள், கருமையான குவளை மலர்கள், நீலக்கல் போன்றவற்றை அளிக்கிறார்கள்.
வாழ்வில் ஒரு முறையாவது திருநள்ளாறு வந்து தரிசனம் செய்து வழிபாடுகள் செய்து எள்சாதம் தானம் கொடுக்கலாம்.
சப்தவிடத் தலங்களுள் திருநள்ளாறும் ஒன்றாகும். இந்திரனால் பூஜிக்கப்பட்ட சோமாஸ்கந்த மூர்த்தியை பூலோக மன்னனாகிய முசுகுந்தன் பெற்று தன்னூரான திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். அவன் பெற்றது மொத்தம் ஏழு. மற்றஆறு மூர்த்தங்களை புண்ணிய ஸ்தலங்களில் நிறுவினான்.
இவை நடன தியாகேசர்கள் என்று பெயர் பெற்று சப்தவிடத் தலங்கள் என்றும் கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு இடத்தில் ஒரு நடனத்துடன் காட்சியளிக்கும் இவர் திருநள்ளாற்றில் உன்மத்த நடனத்துடன் காட்சி தருகிறார். நகவிடங்கத் தியாகராஜர் என்பது சிறப்புப் பெயர்.