உலகையும் மனிதனையும் கடவுள் படைத்ததில் தொடங்குகின்றன விவிலியக் கதைகள். பழைய ஏற்பாட்டின் முக்கிய அங்கமாக இருக்கும் இக்கதைகள் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான நட்புறவை மையப்படுத்தி நமக்கு வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தருகின்றன. தன் சாயலாக மனிதனைப் படைத்த கடவுள் அவனுக்கு துணையாக ஏவாளைப் படைத்தார்.
ஆனால் சாத்தானின் தூண்டுதலில் உந்தப்பட்டு ‘எதைச் செய்யக் கூடாது’ என்று கடவுள் சொன்னாரோ அதைக் கட்டுடைத்து மீறுகிறாள் ஏவாள். தன் துணையான ஏவாளை நம்பியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகிறான் ஆதாம்.
பூமியின் ஆதி நந்தவனமாக இருந்த ‘ஏதேன்’ தோட்டத்தில் வசிக்கும் தகுதியை இழக்கிறார்கள். அங்கிருந்து அனுப்பப்படும் அவர்கள் கொடும் விலங்குகள் நிறைந்த அடந்த காட்டுக்கும், பரந்த நிலவெளிக்கும் இடையில் அல்லாடுகிறார்கள். இயற்கை என்றாலே இனிமை, அமைதி என்று அனுபவித்துவந்த அந்த ஆதிப் பெற்றோர். அதன் பிறகு இயற்கையுடன் போராட வேண்டிய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள்.
ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்ட அவமானமும் களைப்பும் கடவுளின் அருமையை அவர்களுக்கு உணர்த்துகிறது. கடவுளுக்கு எதிராக இழைத்த தவறுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தான் ஆதாம். நாற்பது நாட்கள் நோண்பிருந்து தன் உடலை வருத்திக்கொண்டான். அந்த நோன்பு அவனுக்குத் தெளிவைத் தந்தது. பூமியில் மனிதனின் குடும்ப வாழ்க்கை தொடங்கியது.
முதல் பொறாமை
ஆதாம்- ஏவாலுக்கு காயின், ஆபேல் என்று இரு மகன்கள் பிறந்தனர். காயின் முரடனாயிருந்தான். அவனுக்கு நேர் மாறாக ஆபேல் அமைதியும் அன்பும் கொண்டவனாக இருந்தான். இருவருக்கும் கடவுளை நேசிக்கக் கற்றுக்கொண்டுத்திருந்தனர். நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி நின்றபோது ஆபேல் மீதான காயினின் கோபம் அதிகரித்தது.
அது பொறாமையால் விளைந்தது. பூமியின் முதல் பொறாமை அதுவே என்கிறது விவிலியம். அந்தப் பொறாமைக்குக் காரணம் ஆபேலிடம் குவிந்திருந்த செல்வமும், அவன் செலுத்தும் பலிகளைக் கடவுள் உடனுக்குடன் ஏற்றுக்கொண்டதும்தான். இதனால் ஆபேலை வெறுக்கத் தொடங்கினான். உடன் பிறந்த சகோதரனை நேசிக்காத காயினின் காணிக்கையை ஏற்றுக்கொள்ளக் கடவுள் மறுத்துவிட்டார்.
ஆனால் ஆபேலோ கடவுளை நேசித்ததைப் போலவே தன்னுடைய சகோதரன் காயினையும் நேசித்தான். ஆகவே கடவுளும் அவனுடைய காணிக்கையை ஏற்றுக்கொண்டார். அவனுடய உழைப்பிற்கு ஏற்ற பலனையும் அபிரிமிதமாய் அளிக்க ஆபேல் மென்மேலும் செல்வந்தனான்.
முதல் கொலை
மனம் புழுங்கிய காயின் ஒரு நாள் தன் சகோதரன் ஆபேலைச் சந்தித்து, ‘நானும் உன்னைப்போல்தான் உழைக்கிறேன். நீ செல்வந்தனாய் இருக்கிறாய். ஆனால் நானோ வறியவனாய் இருக்கிறேன். நீ என்மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆகவே உன்னுடைய சொத்தில் பாதியை எனக்குத் தா. அப்போது நானும் செல்வந்தனாகிவிடுவேன்.” என்றான். ஆனால் ஆபேல் மறுத்தான்.
“இவை என் உழைப்பால் விளைந்தவை. தூய்மையான உள்ளத்துடன் உழைத்து வா. கண்டிப்பாக உன் உழைப்பு பலன் தரும். நீயும் செல்வந்தனாவாய்” என்று அறிவுரை தந்தான்.
ஆத்திரமடைந்த காயின், ஆபேலை அன்புடன் தனிமையில் அழைத்து சென்றான். அவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவனைக் கொன்றுபோட்டான். பூமியில் முதல் கொலை விழுந்தது. தன் முன் பிணமாய் கிடந்த ஆபேலின் உடலைக் கண்டு தன்னுடைய செயலின் தீவிரத்தை உணர்ந்த காயின் கடவுளின் கோபத்திற்கு பயந்து ஓடி ஒளிந்தான். கடவுளோ அவனை விடவில்லை. “உன் சகோதரனின் ரத்தம் என்னை நோக்கி அழுகிறது. அவன் எங்கே?” என்றார். காயினோ, “என்னை ஏன் கேட்கிறீர். நான் என்ன அவனுக்கு காவலாளியா?” என்று தன் கொடுஞ்செயலை மறைத் தான். எல்லாம் அறிந்த கடவுளோ
“உன் கையால் உன் சகோதரனின் ரத்தத்தை நிலத்தில் சிந்த வைத்தாய். ஆகவே. பூமியில் நாடோடியைப் போல் அலைந்து திரிவாய்.” என்று சபித்தார்.
முக்கிய கட்டளை
காயினுக்குப் பிறகு இந்த பூமியில் மனித இனம் பல்கிப் பெருகிறபோது கடவுள் தந்த கட்டளைகளில் ‘கொலை செய்யாதிருப்பாயாக’ என்பது முக்கியக் கட்டளையாக அமைந்தது.
ஆதியாகமத்தின் இந்தக் கதை நமக்குச் சொல்ல வருவது என்ன? நம்மை எல்லாத் தீமைகளுக்கு இட்டுச் செல்லும் முதல் புள்ளியாக இருப்பது பொறாமை என்பதை எடுத்துக் காட்டுகிறது. கடவுளுக்கு உகந்த வழியில் உள்ளன்புடன் உழைக்காவிட்டால் நீங்கள் செல்வந்தர் ஆக முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறது.
சகோதரனின் செல்வமே என்றாலும் அவர் மனமுவந்து உங்களுக்குத் தரமுன்வராவிட்டல் அவற்றை கவர நினைப்பது உங்களைக் கொலை பாதகனாக்கும் என்பதைச் சொல்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, சக உயிரை பறிக்கும் அதிகாரம் உங்களுக்குத் தரப்படவிலை என்பதைச் சொல்கிறது. இதை மீறும் யாரும் வாழ்வின் எல்லா நிலைகளில் இருந்தும் வெளியேற்றப்படுவர்கள். அவர்களால் ஒரு இடத்தில் ஒளிந்து வாழக்கூட வாய்ப்பில்லை..
பொறாமை சாத்தானின் குணம். அதை உள்ளத்தில் வளரவிடாதே என்பதையே காயின் ஆபேல் கதை நமக்குப் பாடமாக உணர்த்துகிறது.