ஆன்மிக பூமியாய் விளங்கிவரும் நமது பாரதத் திருநாட்டில் பல்வேறு மகான்களும், சித்தர்களும் அவ்வப்போது தோன்றி மனித சமுதாயத்திற்குத் தேவையான வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்பித்தும், வாழ்ந்தும் காட்டியுள்ளனர்.
அந்த வரிசையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஷீர்டி கிராமத்தில் அடையாளம் காட்டப்பட்ட தீர்க்கதரிசிதான் பாபா. இவர் தனது பதினாறு வயதினில் ஞானநிலை அடைந்து மக்களுக்காக வாழ்ந்துவந்தார்.
இவர் ஜாதி, மத, பேதம் இன்றி அனைவரிடமும் அன்பு காட்டி, தமது ஜாதியையோ, மதத்தினையோ வெளிக்காட்டாது வாழ்ந்து காட்டினார். இவரது முக்கிய கோட்பாடு சமத்துவம். தனக்கென்று சீடர்கள் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை.
தான் குருவாக இருக்கவும் சம்மதித்ததில்லை. தமக்கு தேவையான பணிகளை அவரே செய்துகொள்வார். அனைத்துக் காரியங்களையும் சமத்துவ முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என விரும்பினார். இதனால், பாபா நவீன இந்தியாவின் தீர்க்கதரிசி என்று அடையாளம் காணப்படுகிறார்.
ஷீர்டி வைத்திய சாயி திருக்கோவில்
உடல் நலம், மனவளம், தீய பழக்கங்களில் இருந்து விடுதலை, குடும்பநலம், பொருளாதார பிரச்சனைகளை சமாளித்தல் உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு வேண்டுதல்களை சாயிபாபா உடனுக்குடன் நிறைவேற்றி வருவதால் தென்காசியில் வைத்திய சாயி பாபா எனும் பெயரில் அவருக்குக் கோயில் கட்டி பக்தர்கள் வழிபாடு செய்துவருகின்றனர்.
தென்காசியில் உள்ள களக்கோடி தெருவில் 2013-ம் ஆண்டு சாய்பாபா பக்தர்கள் சிறிய அளவிலான தியான மண்டபம் ஒன்றை கட்டி அங்கு பாபாவின் சிறிய அளவிலான சிலையை நிறுவி வழிபாடு செய்து வந்துள்ளனர்.
பக்தர்களே பாபாவின் சிலைக்கு தங்கள் கையாலே ஆரத்தி எடுத்து, தங்களின் வேண்டுதல்களை பாபாவிடம் மனமுருகி வேண்டி வந்துள்ளனர். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதால், இதே இடத்தில் பாபாவிற்கு திருக்கோவில் ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஷீரடியிலிருந்து கடந்த ஆண்டு, ஏப்ரல் 11-ம் தேதி, வைத்திய சாயிபாபாவின் திருவுருவச்சிலை தென்காசிக்குக் கொண்டுவரப்பட்டது.
தியான மண்டபம்
சுமார் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் விசாலமாக அமைந்துள்ள வைத்திய சாயிபாபா திருக்கோவிலின் வடக்குப் பகுதியில் தியான மண்டபம் அமைந்துள்ளது. பளிங்குக் கற்களால் ஆன பிரமாண்டமான முகப்பு வழியே உள்ளே சென்றால், ஐந்தாயிரம் பேர் ஒரே சமயத்தில் நின்று வழிபாடு செய்யும் வகையில் உள்ளது திருக்கோவில்.
ஷீரடியில் உள்ள பாபா திருக்கோவில் போன்ற தோற்றத்துடன் தென்காசி வைத்திய சாயி திருக்கோவில் அமையப்பெற்றது சிறப்பம்சமாகும். மூன்று நுழைவாயில்கள் போன்று கட்டப்பட்டுள்ள திருக்கோவிலில் வலபுறம் மற்றும் இடப்புறத்தில் நம்பிக்கை, பொறுமை என்றும் பாபா சன்னதியியில் ஓம்சாயி ஸ்ரீசாயி ஜெய ஜெயசாயி என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்றடி உயரமுள்ள பீடத்தில் ஐந்தரை அடி உயரமுள்ள பளிங்கால் ஆன சாய்பாபா உருவம் நிறுவப்பட்டுள்ளது.
அமர்ந்த நிலையில் மலர்ந்த புன்னைகையுடன் அன்பொளி வீசும் கண்களுடன் ஷீரடி வைத்திய சாயிபாபா பக்தர்களுக்கு அருள்மழை பொழிகிறார்.