ஆன்மிகம்

ஆன்மிக நூலகம்- 18.06.2015

நா.சி.சிதம்பரம்

நமக்கு இந்த உடம்பும் கருவிகளும் உலகமும் உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்களும் இறைவனால் தரப்பட்டவை என்றாலும் அவையும் நமக்குக் கட்டாகவே (பந்தமாகவே) அமைகின்றன.

இந்த உடம்பில் நாம் கட்டுண்டிருப்பது மட்டுமின்றி, அவ்வாறு கட்டுண்டு இருக்கின்றோம் என்பதையும் அறியாமல் இருக்கின்றோம். கட்டினால் உண்டாவது துன்பமே ஆகும். ஆனால், அந்தத் துன்பத்தை நாம் இன்பமாக எண்ணுகிறோம். கட்டு நிலைக்கும், துன்பத்துக்கும் அறியாமையே காரணம். அதிலிருந்து நீங்க வேண்டுமானால் அந்த அறியாமையாகிய அஞ்ஞானம் அல்லது தவறான அறிவு நீங்க வேண்டும்.

அது உண்மை அறிவாகிய ஞானம் பெற்ற பொழுதே நீங்கும். ஞானம் ஆகிய மெய்யறிவு பொருள்களின் உண்மை இயல்பை நமக்கு உணர்த்துவது ஆகும். அந்த ஞானத்தைப் பெறுவதற்கு உரிய பக்குவம் வந்த காலத்தில்தான் நாம் அதனை உணர முடியும்.

பக்குவம் என்பது நம் உடம்பிலோ அல்லது வெளியிலோ நிகழ்வது அன்று. அது நம் அறிவில் நிகழ்வது. எனவே, ஒருவர் பக்குவ நிலையை எய்தியதைப் பிறர் அறிந்து கொள்ள முடியாது.

நம் அறிவில் அறிவாகி நிற்கின்ற இறைவனே அறிவின் பக்குவ நிலையை அறிய முடியும். அவன்தான் நம் நிலை உணர்ந்து தக்க தருணத்தில் ஞான குருவாக எழுந்தருளி வந்து நமக்கு ஞானத்தை உணர்த்த முடியும்.

‘சைவ சித்தாந்த சாரம்’ நூலிலிருந்து…

SCROLL FOR NEXT