ஆன்மிகம்

சகல வளம் அருளும் அஷ்டலட்சுமி

ஜி.விக்னேஷ்

காணும்போது கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி அளிக்கும் மகாலட்சுமி, தனம், தானியம், வெற்றி, நீர், நிலம், காற்று, தீ, உணவு, உடை, உறையுள் ஆகியவற்றில் வாசம் செய்கிறாள். சந்திர சகோதரி என்றபடியால் சந்திரனுக்கு உடன் பிறந்தவள் மகாலட்சுமி. இவளை வணங்குவதற்கு ஒவ்வொரு பெளர்ணமி திதியும் உகந்ததுதான். குபேரன் மகாலட்சுமியிடம் ஐஸ்வர்யத்தைப் பெற்ற நாள் சித்திரை மாதப் பெளர்ணமி என்கிறது புராணம்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி திருக்கோயிலில் உலக மக்கள் அனைவரின் நன்மை வேண்டி சித்திரை மாத பெளர்ணமியன்று ஒரு நாள் முழுவதும் லட்சார்ச்சனை சிறப்பாக நடைபெற்றது.

மகாலட்சுமி திருக்கோயிலைச் சென்னையில் சிறப்புற அமைக்க வேண்டும் என்பது காஞ்சி ஸ்ரீமகா பெரியவரின் எண்ணம். அவர் எண்ணிய அத்திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் நிறைவேற்றினார் என இத்திருக்கோயில் தல புராணம் தெரிவிக்கிறது. கடலில் தோன்றியவள் மகாலட்சுமி என்பதால் கடலுக்கு அருகில் தாயாருக்கு கோயில் எழுப்ப காஞ்சி மகா பெரியவர் விரும்பினார். அதன் விளைவாகவே சென்னை பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி கோயில் உருவானது. ‘வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை’ என்று திருப்பாவையில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். கடலில் பள்ளி கொள்ளும் பெருமாளைக் காண்பது போல மகாலட்சுமி கோயில் கடலை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.

தாயார்கள் மட்டும் தனித்திருத்தல் கூடாது என்பதால் இக்கோயிலின் தரைத் தளத்தில் மகாலட்சுமி உடனுறை லட்சுமிநாராயணர் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கின்றார். இரண்டு அடுக்கு மாடியாக உள்ள இத்திருக்கோயில் ஓம்கார வடிவமாக உள்ளது.

அஷ்டாங்க விமானம்

அன்ன லட்சுமி, திருமடப்பள்ளி நாச்சியார், மோட்ச லட்சுமி, கோலபுர நாயகி, மகுட லட்சுமி, குபேர லட்சுமி, தீப லட்சுமி என லட்சுமி பல திருநாமங்கள் கொண்டவள். இத்திருக்கோயிலில் அஷ்ட லட்சுமிகள் அஷ்டாங்க விமானத்தில் இருந்துகொண்டு அருள்பாலிக்கிறார்கள். இந்த விமானத்தின் நிழல் பூமியில் வீழ்வதில்லை என்பது சிற்பக் கலையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு. கடலை நோக்கியுள்ள கோபுரப் பகுதியில் ஒருபுறம் ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்ரம் சொல்லியதால் மகாலட்சுமி தோன்றி, தங்க நெல்லிக்கனி வர்ஷித்த காட்சியும், மறுபுறம் ஸ்ரீவேதாந்த தேசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க மகாலட்சுமி பொன்மழை பொழிந்த காட்சியும் இடம்பெற்று சைவ, வைணவ ஒற்றுமையைக் குறிக்கின்றன. சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் உள்ள சந்நிதிகளும் அதன் சிறப்புகளும் இன்றும் ஆயிரமாயிரம் பக்தர்களை ஈர்க்கின்றன.

ஆதி லட்சுமி

திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ஆதிநாளில் வந்தவள் என்பதால் இவளுக்கு ஆதி லட்சுமி என்ற காரணப் பெயர். இத்திருக்கோயிலின் தரைத் தளத்தில் தெற்கு முகமாக அமர்ந்துள்ள ஆதி லட்சுமியின் திருப்பாதத்திற்குக் கீழ் பூரண கும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் என்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றுள்ளன. ஆதி லட்சுமியை வணங்குவதால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதாக நம்பிக்கை நிலவுகிறது.

தான்ய லட்சுமி

பருப்பு வகைகள், உணவுப் பொருட்கள், பழ வகைகள், கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்ய லட்சுமி. இவளுக்கு அன்ன லட்சுமி என்ற பெயரும் உண்டு. தான்ய லட்சுமி கோயிலில் தரைத்தளத்தில் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். சூரியன் பகலில் உற்பத்தி செய்த உணவுகளை அச்சூரியன் மறைந்த நேரத்திலும் காப்பவள் தான்ய லட்சுமி என்ற தத்துவத்தில் இச்சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. பச்சை மாமலை போல் மேனி என்று திருமாலை ஆழ்வார்கள் பாடியுள்ளனர். புல், வயல், மரம், மலை என அனைத்திற்கும் பச்சை வண்ணம் அளித்த இந்தத் தான்ய லட்சுமியே திருமாலுக்கும் பச்சை நிறம் அளித்தவள். பசிப் பிணி போக்குபவள்.

பருப்பு வகைகள், உணவுப் பொருட்கள், பழ வகைகள், கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்ய லட்சுமி. இவளுக்கு அன்ன லட்சுமி என்ற பெயரும் உண்டு. தான்ய லட்சுமி கோயிலில் தரைத்தளத்தில் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். சூரியன் பகலில் உற்பத்தி செய்த உணவுகளை அச்சூரியன் மறைந்த நேரத்திலும் காப்பவள் தான்ய லட்சுமி என்ற தத்துவத்தில் இச்சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. பச்சை மாமலை போல் மேனி என்று திருமாலை ஆழ்வார்கள் பாடியுள்ளனர். புல், வயல், மரம், மலை என அனைத்திற்கும் பச்சை வண்ணம் அளித்த இந்தத் தான்ய லட்சுமியே திருமாலுக்கும் பச்சை நிறம் அளித்தவள். பசிப் பிணி போக்குபவள்.

தைரிய லட்சுமி

வாழ்வில் இன்னல்கள் மூலம் மனத் தைரியத்தை இழந்தவர்கள் இங்கு தைரிய லட்சுமிக்குப் புடவைகள் சார்த்திப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். இத்திருக்கோவிலின் தரைத் தளத்தில் வெற்றித் திக்கான வடக்கு நோக்கி வீற்றிருக்கும் இவளுக்கு எட்டுத் திருக்கரங்கள் உள்ளன. வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகிறாள்.

கஜ லட்சுமி

கஜம் என்ற யானைகள் இருபுறமும் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வது போல அமைந்திருப்பதால் கஜ லட்சுமி என்ற காரணப் பெயர் ஏற்பட்டது என்பர். இந்த லட்சுமியை ராஜ லட்சுமியாகவும், ஐஸ்வர்ய லட்சுமியாகவும் காண்பர். பல நூற்றாண்டுகளுக்கு முன் லட்சுமியின் திருவுருவமே கஜலட்சுமியின் தோற்றத்தில் அமைந்திருந்தது என்றும் குறிப்பிடுகிறார்கள். கோயிலில் கிழக்கு நோக்கித் தாமரையில் வீற்றிருக்கும் கஜ லட்சுமிக்கு, இரு புறமும் ஒரே கல்லிலான இரண்டு யானைகள் திருமஞ்சனம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது சிற்ப நுணுக்கச் சிறப்பு. கஜ லட்சுமியைப் பூஜித்து அனைத்து வகைச் செல்வங்களையும் பெறலாம்.

சந்தான லட்சுமி

சந்தானம் என்ற குழந்தை வரத்தை அளிப்பதனால் சந்தான லட்சுமி என்பது திருப்பெயர். இத்திருக்கோயிலில் சடையுடன் கிரீடத்தைத் தரித்தபடி வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களை அணிந்து காட்சி தருகிறாள். இவள் பீடத்தில் அமர்ந்திருக்க கன்னிப் பெண்கள் சாமரம் வீசியும் விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் நின்றுகொண்டிருக்கின்றனர். திருமண மற்றும் சந்தான பாக்கியம் அளிப்பவள். பித்ரு தோஷத்தை நீக்குபவள்.

விஜய லட்சுமி

வெற்றியை அருளுபவள் விஜயலட்சுமி. எடுத்த காரியம் யாவினும் வெற்றியைத் தரும் விஜய லட்சுமிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. கோயிலில் மேற்கு முகமாக அன்னப் பறவையின் மீது வீற்றிருக்கிறாள் விஜய லட்சுமி. இவள் அனைத்து வெற்றிகளையும் மங்களத்தோடு அளிக்கும் சர்வ மங்களை என்னும் நாமம் பெற்ற நாராயணி. தொழிலில் வெற்றி பெற விஜய லட்சுமிக்குப் புத்தாடை அணிவித்துக் குங்கும அர்ச்சனை செய்யலாம்.

வித்யா லட்சுமி

கல்விச் செல்வத்தை வழங்குவதால் இவளுக்கு வித்யா லட்சுமி என்று பெயர். சரஸ்வதியை வித்யா லட்சுமி ரூபமாகப் பாவித்து வழிபடுகின்றனர். தரைத் தளத்தில் பக்தர்கள் வல்வினை போக்கி வாழ வைக்க வடக்கு நோக்கிக் குதிரை வாகனத்துடன் கூடிய தாமரைப் பீடத்தில் வீற்றிருக்கிறாள். கல்வி, வித்தைகளில் சிறக்க, வித்யா லட்சுமிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்திக்கலாம்.

தன லட்சுமி

தனம் என்ற செல்வ வளத்தை அளிப்பவள் தன லட்சுமி. தன லட்சுமியின் அருள் கிடைத்தால் செல்வங்கள் குவிகின்றன என்று நிகமாந்த தேசிகன் கூறுகிறார். தன லட்சுமி இத்திருக்கோயிலின் இரண்டாவது தளத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணத்தில் அருள் பாலிப்பவள். வறுமை போக்கும் தன்மை கொண்டவள்.

இத்திருக்கோயிலுக்குள் சென்றால் மேலும் பல சந்நிதிகளைக் காண முடிகிறது. அவை கருடாழ்வார், கமல விநாயகர், தசாவதாரம், குருவாயூரப்பன், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆஞ்சனேயர், தன்வந்திரி ஆகியோருக்குத் தனிச் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு சிறப்புப் பெற்ற இந்தத் திருக்கோயிலுக்கு வெளியே வங்கக் கடலும், உள்ளே பயனைடைந்த பக்தர்கள் கூட்டமும் அலை மோதுகிறது.

கடலில் தோன்றிய லட்சுமி

அமிர்தம் பெறுவதற்காகப் பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தார்கள். அப்போது பல மங்களகரமான பொருட்கள் தோன்றின. அஷ்ட ஐஸ்வர்யமும் அளிக்கும் லட்சுமியும் அப்பாற்கடலில் தோன்றினாள். அப்போது அங்கு இருந்த மகாவிஷ்ணுவைக் கண்ணுற்றாள். அவரது மயக்கும் புனித அழகில் கவர்ந்திழுக்கப்பட்டு அவரது திருமார்பில் கட்டுண்டாள் தாயார்.

அப்போது அசுரர்களும், மன்னர்களும், தேவர்களும் மட்டுமல்ல முனிவர்களும் அங்கு இருந்தனர். தாயார் செய்த இந்தச் செயல் அங்கிருந்த அனைவரையும் துணுக்குறச் செய்தது. கேள்விகள் கேட்க முனிவர்களுக்கு உரிமை உண்டல்லவா? எனவே ஆண்கள் பல பேர் இருக்க இப்படி நடந்துகொள்ளலாமா என்று தாயாரிடம் விளக்கம் கேட்டார்கள்.

மகாவிஷ்ணு மட்டுமே தனக்கு ஆணாகத் தெரிந்தார் மற்றவர்கள் அனைவரும் தனக்குப் பெண்ணாகவே தெரிந்தார்கள் என்பதால் இதில் வெட்கப்பட ஏதுமில்லை என்றாளாம் தாயார்.

SCROLL FOR NEXT