ஆன்மிகம்

நின்னைச் சரணடைந்தேன்...

சி.ஹரி

சரணாகதி என்றாலே வைணவம்தான் நினைவுக்கு வரும். அந்தத் தத்துவத்தால் வைணவத்துக்கு மகத்துவம் என்பதைவிட, வைணவம் என்றாலே ‘சரணாகதி'தான் என்றும் சொல்லிவிடலாம்.

சரணாகதி தத்துவம் என்பது என்ன?

ஜீவாத்மாக்கள் ஒரு புறம்; அவற்றைப் படைத்த பரமாத்மா மறு புறம். ஜீவாத்மா பரமாத்மாவை அடைய வேண்டும் என்றால் பரமாத்மாவைச் சரண் புக வேண்டும் என்பதுதான் சரணாகதி.

ஆனால், இந்த சரணாகதியை நேரடியாக ஒருவரால் அடைய முடியாது. ஆசார்யன் என்ற வழிகாட்டி அவசியம். அவர்தான் பரிபூரண பிரம்மத்தை அனுபவிப்பதற்கான சாதனை வழிமுறைகளைச் சொல்லித் தர முடியும்.

இறைவனைச் சரண்புகுவதன் நோக்கமே பிறப்பு - இறப்பு என்ற இடையறாத சங்கிலித் தொடரிலிருந்து விடுதலை பெறுவதுதான். இதை மோட்சம் என்பார்கள். மோட்சத்தை விரும்புகிறவர்களை முமுக்ஷு என்பார்கள். அவர் தன்னைப் போன்ற மோட்ச விரும்பிகளுடன் சேர்ந்து இறைவனுக்கு மேலுலகில் கைங்கர்யம் செய்வர்.

'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம்... உமக்கே நாம் ஆட் செய்வோம் ' என்று திருப்பாவை பாசுரத்தில் சரணாகதியைச் சுருக்கமாகத் தெரிவிக்கிறார் கோதை நாச்சியார்.

மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்' என்றும் ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்' என்றும் வள்ளுவர் சரணாகதி என்பது அடிபணிவது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |

அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு ச: ||

தர்மங்களை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து என்னை (ஒருவனையே) சரணமடைக. நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன்

என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார்.

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்” என்னும் விவிலிய வாசகத்தையும் இங்கே நினைவுகூரலாம்.

பகவத் கீதையில் வரும் இன்னொரு ஸ்லோகமும் சரணாகதி தத்துவத்தைத் தெளிவாக எடுத்துரைக்கிறது:

அனன்யாஸ் சிந்தயந்தோமாம் யே ஜனா: பர்யுபாஸதே

தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்.

“என்னைத் தவிர வேறு எதனையும் எண்ணாமல், என்னிலே உறைந்து, என்னையே சார்ந்து வாழ்கிறவனுக்குத் தேவைப்படுகிற அனைத்தையும் நான் அளித்துவிடுகிறேன்.”

(கீதை 9-22)

SCROLL FOR NEXT