தூங்கிக் கண்டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார்நிலை சொல்வ தெவ்வாறே.
தூங்காமல் தூங்கும் தியான நிலையில்தான் ஞானிகள் தம்மை அறிந்துகொள்கின்றனர். தம்மை அறிந்துகொண்ட ஞானிகள் சிவலோகத்தையே தமக்குள் தரிசிக்கின்றனர். இப்படித் தூங்கியதால்தான் ஞானிகளுக்குச் சிவயோகம் சித்தித்தது. சிவனோடு ஒன்றியிருக்கும் சிவபோகமும் கிடைத்தது. இவர்கள் யோக நிஷ்டையில் தூங்காமல் தூங்கிக்கொண்டிருப்பதால் அவர்களது நிலையைக் கூறுவதெப்படி என்று திருமூலர் கேட்கின்றார்.
இதனையே – “ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்து
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? “
என்று பத்ரகிரியார் கேட்கின்றார்.
“சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ நாளை வருமோ?” என்று அருட்பிரகாச வள்ளலார் கேட்கிறார்.
இந்தத் தூக்கம், சுகம் என்கின்ற பேரின்பத்தைத் தேடி ஞானிகள் தனியிடங்களுக்கும், வனாந்திரங்களுக்கும், மலைப் பிரதேசங்களுக்கும் செல்கின்றனர்.
ஸ்ரீ சித்தநாத குருநாத சுவாமியும் அந்தப் பேரின்பத்தைத் தேடிப் பொதிகை மலைக்குச் சென்றார். அங்கே தூங்காமல் தூங்கிக்கொண்டிருந்த பாம்பாட்டிச் சித்தரின் தரிசனம் கிடைத்தது. அவரிடம் தீட்சை பெற்று அங்கேயே பல காலம் யோக சமாதியில் ஆழ்ந்துவிட்டார்.
வில்வ வனத்தில் யோகங்கள்
ஒரு காலகட்டத்தில் பாம்பாட்டிச் சித்தர், தம் சீடரையும் அழைத்துக்கொண்டு அருப்புக்கோட்டைக்கு வந்தார். அங்கு வில்வ வனமாக இருந்த சொக்கலிங்கபுரத்தில் சிலகாலம் தங்கியிருந்து யோகங்கள் செய்தனர். அப்போதுதான் ஆத்மானந்த சுவாமிகள், கோட்டூர் குருசாமி சுவாமிகள் ஆகியோர் பாம்பாட்டிச் சித்தரிடம் தீட்சை பெற்றுச் சித்தர்களாக அங்கீகாரம் பெற்றனர்.
பின்னர் பாம்பாட்டிச் சித்தரும், ஸ்ரீ சித்தநாத குருசாமி சித்தரும் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள புலியூரான் என்ற கிராமத்தை அடுத்துள்ள வனப் பகுதிக்கு வந்தனர். அங்கே ஒரு புளிய மரத்தின் கீழ் சிலகாலம் தங்கியிருந்து தவமியற்றிய பின் பாம்பாட்டிச் சித்தர் விடைபெற்றுக் கொண்டார். ஸ்ரீ சித்தநாத குருசாமி சித்தர் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டார். இரவு நேரங்களில் தேவதைகளை அழைத்து அவர்களுக்கு உணவிட்டுப் பூசித்துக்கொண்டிருப்பாராம். அப்போது அவரைச் சுற்றிப் பாதுகாப்புக்காக அனைத்து விஷ ஜந்துக்களும் நடமாடிக் கொண்டிருக்குமாம். இதற்குப் பயந்தே இரவில் ஒருவரும் அங்கு செல்வதில்லை.
தீண்டிய அரவம்
இதனை அறிந்த யோகீஸ்வரர் என்பவர், ஆர்வம் மேலிட்டு சுவாமிகள் என்னதான் செய்கிறார் என்று பார்ப்பதற்காக இரவில் அங்கு சென்றார். சுவாமிகள் பூசை செய்வதை மறைந்திருந்து பார்த்த போது, அரவம் ஒன்று அவரைத் தீண்டியது. விஷம் உடல் முழுவதும் பரவ, அவர் மயங்கி விழுந்தார். அந்தச் சப்தத்தைக் கேட்டு அங்கு வந்த சித்தர், சிறிது தீர்த்தத்தை அவர் மீது தெளித்தார். யோகீஸ்வரரின் உடலிலிருந்த விஷம் உடனே முறிந்தது. மயக்கம் தெளிந்து எழுந்த அவர், தன்னருகே சித்தரைக் கண்டதும் அவரது கால்களில் விழுந்து, மன்னிப்புக் கோரியதுடன், தம்மை அவரது சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். ஆனால் யோகீஸ்வரருக்குச் சித்தராக ஆவதற்குக் கொடுப்பினை இல்லை என்று கூறிய சித்தர் அவரைத் தன்னுடனே இருந்து கொள்ள அனுமதித்தார்.
ஸ்ரீ சித்தநாத குருசாமி சித்தர், தாம் இந்த உடலைவிட்டு நீங்கும் காலம் வந்துவிட்டதை அறிந்து, தாம் தங்கியிருக்கும் இடத்தில் சமாதிக் குழியைத் தோண்டச் செய்தார். பின்னர் யோகீஸ்வரரை அழைத்து, நீயும் உன் பரம்பரையும் என் பெயரைக் கூறித் தீர்த்தம் அளித்தால் எந்தவித விஷக்கடியும் குணமாகும் என்று வரம் கொடுத்தார்.
தாம் உபாசனை செய்த தேவதைகளைத் தமது ஜீவசமாதியைச் சுற்றி ஸ்தாபிதம் செய்து தினமும் தவறாது பூசை செய்து வர வேண்டும் என்று கூறிவிட்டுச் சமாதிக் குழிக்குள் இறங்கி ஜீவ சமாதியானார். (இது பல நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. யோகீஸ்வரரின் மகன், சித்தரைப் பற்றியும், தமது தந்தையைப் பற்றியும் ஓர் ஓலைச்சுவடியில் எழுதிவைத்திருந்த குறிப்புகளே இதற்கு ஆதாரமாக உள்ளன. ஆனால் சித்தர் ஜீவசமாதி அடைந்த காலத்தைப் பற்றிய தகவல் ஏதும் இல்லை).
ஸ்ரீ சித்தநாத குருநாத சித்தர் ஜீவசமாதியடைந்த பின் யோகீஸ்வரர் சமாதிப் பீடத்தின் மீது சித்தரின் கற்சிலையை ஸ்தாபிதம் செய்தார். சித்தர் பூசித்த தேவதைகளை, ஜீவசமாதியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்தார். அவரது பரம்பரையினர் சித்தரின் ஜீவசமாதியை ஆலயமாக எழுப்பிப் பராமரித்து வருகின்றனர். கருவறை மற்றும் முன் மண்டபத்தின் சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பழக்கம் இல்லை. இதற்கென்று தயாரிக்கப்பட்ட மூலிகைச் சாற்றைச் சந்தனத்துடன் கலந்து சுவர்களில் பூசிப் பராமரித்து வருகின்றனர்.
யோகீஸ்வரரின் பாரம்பரியத்தில் வந்த பூசாரிகள் சித்தரின் பெயரைக் கூறி மந்தரித்துத் தீர்த்தம் அளித்தால், அனைத்து விஷக்கடிகளும் குணமாகின்றன என்பதுதான் இந்த ஸ்தலத்தின் விசேஷமாகும். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்களின் இங்கு வந்து தீர்த்தம் பெற்றுச் செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக ஜீவசமாதி ஆலயம் காலை 7.00 மணிமுதல் இரவு 7.00 மணி வரை திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.