உண்மையிலேயே எதையும் அறிந்து கொள்ள தீவிர ஆர்வமுடையவராக நான் இருந்தால், ஏன் இத்தனை உணர்வுநிலை பயங்களும் ஆழ்மனப் பயங்களும் உள்ளன என்பதைக் கண்டறிய விருப்பம் கொள்வேன். ஏன் இந்தப் பயம் வந்தது, இந்தப் பயத்தின் மையக் காரணி எது என்ற கேள்விகளோடு சுய விசாரணை செய்வேன். எப்படி விசாரணை செய்வது என்பதை இங்கு உங்களுக்குச் சுட்டிக்காட்ட முயற்சி செய்கிறேன்.
என் மனம், நான் பயப்படு கிறேன் என்பதை அறிவேன் என்று சொல்கிறது. இருட்டைப் பார்த்தால் பயம், தண்ணீரைப் பார்த்தால் எனக்குப் பயம்; நான் உயரமாய், அழகாய் இருக்க வேண்டும் என்று ஆசை ஆனால், அப்படி இல்லையே- அதனால் பயம். நான் இப்போது அவற்றைப் பற்றி விசாரணை செய்து கொண்டிருக்கிறேன். ஆக, எனக்கு நிறைய பயங்கள் உள்ளன. ஆழ்மனப் பயங்களும் மேலோட்டமான பயங்களும் எனக்கு இருக்கின்றன என்பதும் எனக்குத் தெரியும். அவை இரண்டைப் பற்றியும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவை எப்படி இருப்பு கொள்கின்றன, அவை எப்படித் தோன்றுகின்றன, அவற்றின் வேராக இருப்பது எது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண முற்படுகிறேன்.
பயத்தைப் பற்றி எப்படி அறிந்துகொள்வது? பயத்தைப் பற்றிய ஆய்வில், ஒவ்வொரு படியாக மெதுவாக ஏறி முன்னேறப் பார்க்கலாம். முதல் படியாக, பயந்துகொண்டு வாழ்வது என்பது மன இறுக்கத்தோடு பதற்றத்தோடு இருப்பது மட்டுமல்ல, மிகுந்த அழிவையும் அது கொண்டு வருகிறது என்ற உண்மையை மனம் முதலில் பார்க்க வேண்டும்.
நான் மன இறுக்கத்துடன் இருப்பதையும், அதன் காரணமாக, பதற்றமான செயல்பாடுகள் தொடர் வதையும் அவை அழிவைக் கொண்டு வருவதையும் மனம் பார்க்க வேண்டும். பயந்து போயிருக்கும் மனம், ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளாது. கெட்டியாகப் பற்றிக் கொள்ள ஏதோ ஒரு அனுபவத்தை அல்லது ஒரு கற்பனையைக் கண்டுபிடித்து, பயந்த மனம் அதைப் படித்துக் கொள்ளும். ஆக, பயம் இருக்கும்வரை, துன்பம் இருக்கும் என்பதை முழுமையாக, தெளிவாக நான் பார்க்க வேண்டும். நீங்கள் அவ்வாறு பார்க்கிறீர்களா? அவ்வாறு பார்த்தல், முதல் தேவையாக இருக்கிறது. அதுவே முதலாம் உண்மையாகவும் இருக்கிறது. பயம் இருக்கும் வரை, இருள் இருக்கும்; இருளில் இருந்துகொண்டு நான் செய்வதெல்லாம் இருளாகவே இருக்கும், குழப்பமாகவே இருக்கும். இவ்வுண்மையைத் தெளிவாக, முழுமையாக நான் பார்க்கிறேனா?
ஏற்றுக்கொள்வதோ மறுப்பதோ பிரச்சினை இல்லை. நீங்கள் இருட்டில் வாழ்கிறீர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? ஆமோதித்தீர்களென்றால், அதனுடன் வாழுங்கள். நீங்கள் போகுமிடமெல்லாம் இருளைச் சுமந்து செல்கிறீர்கள், இருளில் வாழ்கிறீர்கள், அவ்வளவுதான். அதோடு திருப்தி அடைந்துவிடுங்கள்.