விஜய நகர ஆட்சியின் கீழ் மதுரையை ஆட்சி செய்த விஸ்வநாத நாயக்கர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஒரு கோட்டையை எழுப்பி இந்தக் கோட்டைக்குள் அருள்மிகு கம்பராயப்பெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோவில்களை அருகருகே கட்டியுள்ளார்.
இத்திருக்கோவில்கள் கி.பி.1374-ம் ஆண்டுக்கு பின்னர் கட்டி இருக்க வேண்டும் என பிரபல சரித்திர ஆசிரியர் மு.ராகவையங்கார் தனது சோழ சரித்திரத்தில் கூறியுள்ளார். நாயக்கர்கள் ஆட்சியின்போது நாயக்கர் மண்டலம், 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டதில் கம்பம் ஒரு பாளையமாகப் பிரிக்கப்பட்டது.
விஸ்வநாத நாயக்க மன்னர் ஆட்சியின் போது கம்பம் நகரை இரு பிரிவாக்கி கம்பணநாயக்கர், உத்தமநாயக்கர் எனும் இருவர் ஆண்டதாகவும், அதில் முதல் ஜமீன்தாரின் பெயரில் உள்ள கம்பண என்னும் சொல்லே மாறி கம்பம் என்று வழங்கலாயிற்று. கம்பராயப்பெருமாள் கோவிலின் கருவறையில் சரிபாதிக் கம்பம் கிராமத்திலும், மீதி சரிபாதி உத்தமபுரத்திலும் இருக்கும்படி இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்போதும் இவ்விரு கிராமங்களுக்குப் பொது உரிமையாக இருக்குமாறு ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
இன்றைய நில அளவையிலும் அப்பதிவு முறையே நீடிக்கிறது. கிராம எல்லைகளைப் பிரிக்கும் அளவு கற்கள் இன்னும் கோவில் வளாகத்திலும் வரைபடத்திலும் மாறாமல் உள்ளன.
சிவன், விஷ்ணு
கம்பம் நகரின் மையத்தில் வட்ட வடிவமான பழைய கோட்டை பகுதிக்குள் கம்பராயப் பெருமாள் கோவிலும், வடபுறம் சிவனை முதற்கடவுளாகப் போற்றும் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவிலும் அமையப்பெற்று சமய ஒற்றுமைக்கும் சமயப் பொறுமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் இத்திருக்கோவில்கள் தமிழகத்தில் குறிப்பிடத் தக்கவையாக உள்ளன.
திருவிழாக்கள்
ஆனி, கந்த சஷ்டி, சித்திரை, மார்கழி, கார்த்திகை ஆகிய காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. காலசந்தி, அர்த்தஜாமம் என இரண்டு காலப் பூஜைகளும், தினந்தோறும் காலை 7மணி முதல் பகல் 11மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8மணி வரையிலும் நடை திறக்கப்படுகிறது.