கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்,
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்,
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே.
ஆச்சாரியர் நம்மாழ்வார் என்று சொன்னாலே என் நாவு இனிக்கும் என்று இப்பாசுரத்தின் மூலம் பாகவத பக்தியே சிறந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டார் மதுரகவியாழ்வார். இனிமையாகக் கவி பாட வல்லவரான இவருக்கு மதுரகவி என்று சிறு வயதிலேயே காரணப் பெயர் உண்டானது.
வடமொழியும், தென் மொழியும் கற்ற பின் வடநாட்டு திவ்ய தேசங்களைக கண்டு வரப் பயணம் மேற்கொண்டார் இவர். அப்போது அயோத்தியில் சிலாரூபமாய் உள்ள ஸ்ரீராமபிரானையும் சீதாப்பிராட்டியையும் காண விழைந்தார். அவர்களை வழிபட்டு அங்கேயே தங்கி இருந்தார். இந்த நிலையில் அங்கிருந்தே திருக்கோளூர் பெருமாளை வணங்க வேண்டி தென்திசையில் வானம் நோக்கிக் கைகளைக் குவித்தபோது, பேரொளி ஒன்று கண்ணுக்குத் தெரிந்தது. அதிசய ஒளியைக் கண்ட அவர் அதனை நோக்கி அப்போதே செல்லத் தொடங்கினார்.
பகலில் சூரிய ஒளியில் இணைந்துவிடும் நட்சத்திர ஒளி போல, இவ்வொளியும் மறைந்து இருந்தது. அதனால் மதுரகவி ஆழ்வார் பகலில் தூங்கி இரவில் தெரியும் புது ஒளி நோக்கிப் பல நாட்கள் நடந்து சென்றார். பின்னர் ஒளி தோன்றிய இடத்தைக் கண்டார். அங்கு புளிய மரப்பொந்தில் பத்மாசனம் இட்டு, சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார் நம்மாழ்வார். கண்ட மாத்திரத்தில் அவர்பால் ஈர்க்கப்பட்ட மதுரகவி அவருக்கு கைங்கரியம் செய்யத் தொடங்கிவிட்டார்.
இப்படியாகப் பலகாலம் சென்றது. நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவற்றை உபதேசித்தார். மதுரகவி ஆழ்வாரும் இந்தப் பிரபந்தங்களைப் பட்டோலை யில் எழுதி வைத்தார்.
திருநாடு எய்திய நம்மாழ்வரை சிலாரூபம் செய்து பூஜித்துவந்தார். அதனையொட்டி கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பெயரில் பதினோரு பாசுரங்களை இயற்றினார். இவரது கொள்கை பாகவத பக்தியே சிறந்தது என்பதாகும். நம்மாழ்வாரைச் சிறந்த பாகவதராகக் கொண்டு அவரையே வணங்கி இருந்தார். நம்மாழ்வார் போதித்த பாசுரங்களையும், தான் இயற்றிய கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களையும் பக்தர்களிடையே இசையோடு பாடிப் பரப்பிவந்தார்.
ஆச்சார்யனுடைய கைங்கர்யமே பரமபதத்திலும் பேறு அளிப்பதாகும். அந்த ஆச்சார்யன் மீது கொள்ளும் பக்தியே அதைப் பெறுவதற்கான வழியும் ஆகும் என்பதுதான் கண்ணிநுண் சிறுத்தாம்பு அளிக்கும் விளக்கமாகும்.