ஆன்மிகம்

உலகை இயக்கும் சக்கரம் எது?

இரா.நரேந்திர குமார்

பூமியை உள்ளடக்கிய மேலுலகம் ஏழு. பாதாளத்தை உள்ளடக்கிய கீழுலகம் ஏழு. ஆக, ஈரேழு பதினாலு லோகமென்கிறது புராணம். கோலங்களில் விளிம்பிடப்பட்ட கோடுகளை எல்லை மீறாத புள்ளிகள் போல, ஒரு நியதிக்கு உட்பட்டு, ஒன்றுடன் இன்னொன்று மோதிக்கொள்ளாமல் இந்த அண்டங்கள் சுற்றிவருகின்றன. தொங்குவதால் ‘ஞாலம்’, உருளை வடிவில் இருப்பதால் ‘திகிரி’. இந்த அண்டங்களை ‘ஞாலத் திகிரி’ என்று புரிந்துகொள்ளலாம்.

புவியில் நிறைந்த தொன்மைமிகு நீர்ப்பரப்பு, கடல். வயதில் முதிர்ந்த குன்றம் ‘முதுகுன்றம்’. வயதில் முதிர்ந்த நீர்ப்பரப்பு ‘முதுநீர்’ என்று வழங்கப்படுகிறது. இந்த முதுநீரானது ஆவியாகி, மேகவுரு எய்தி, விசும்பிற் துளியாகி, மழையெனப் பொழிந்து, ஆறுகள் வாயிலாகக் கடலடைந்து ஒரு சக்கரச் சுழற்சியை நிறைவு செய்கிறது.

‘ஆழியுள் புக்கு, முகர்ந்து கொடு ஆர்த்தேறி, ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து, ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல் உலகம் உய்யப் பொழிய வேண்டும்’ என்று கோதை ஆண்டாள் இந்தச் சுழற்சியைப் பாடுகிறாள். முதுநீர்ச் சுழற்சியைச் சற்றொப்ப மனித வாழ்வின் பருவச் சுழற்சியும், இயற்கையின் மாறிவருவம் ஆறுவகைப் பருவங்களும் ஒத்துள்ளன.

ஞாலத் திகிரியும் முதுநீர்த் திகிரியும் காலத் தகிரியின் உள்ளே அடங்கியுள்ளன. ‘காலத்திகிரி’ என் எளிய பொருள் ‘காலமாகிய சக்கரம்’. கண்ணுக்குத் தெரியாத சக்கரம்; காலச் சுழற்சியை உணர்ந்துகொள்வதிலிருந்து திரையிடும் சக்கரம்; வியாக்கியான கர்த்தாக்கள் இந்தக் காலத் திகிரியைப் புரியவைக்கப் பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் ஆலமரத்தை உவமிக்கிறார்கள். சின்னஞ்சிறிய விதையினுள் அரிதுயில் கொள்ளும் நுண்ணுயிரைப் பெருவிருட்சமாக ஆக்கியது இந்தக் ‘காலத் திகிரி’ என விளக்குகின்றனர்.

ஒரு சக்கரச் சுழற்சியைச் சார்ந்து இன்னொரு சக்கரச் சுழற்சி. அதைச் சார்ந்து வேறொன்று. அதைச் சார்ந்து மற்றொன்று எனக் கடிகாரங்களில், கரும்பாலைகளில், எந்திரங்களில், வாகனங்களில் ஒன்றைப் பிறிதொன்று சார்ந்த நிலையில் சக்கரங்கள் சுழலும் காலம் இது.

இவற்றையெல்லாம் நியதிக்குட்பட்டுச் சுற்றவைக்கும் உள்மூலச் சக்கரம் எது?

படைப்புக் காலமான தலைநாளில் எம்பெருமான் பாற்கடலைக் கடைந்த வேளை மத்தாகப் பயன்படுத்திய மந்திர மலையான நீலத்திகிரியால் புள்ளியிட்டு, அவனுடைய சிவந்த கரங்களில் வீற்றிருக்கும் சுதர்சனத் திருச் சக்கரமான மூலத் திகிரியால் கோலமிட்டாராம். அதற்குக் கட்டுப்பட்டு ஞாலத் திகிரியும், முதுநீர்த் திகிரியும் நியமம் மாறாது சுழல்கின்றன என்கிறார் பிள்ளை பெருமாள் அய்யங்கார். திரு அரங்கத்து மாலையில் உள்ள பாடல் இது.

ஞாலத் திகிரி, முதுநீர்த் திகிரி, நடாத்தும் அந்தக்

காலத்திகிரி முதலான யாவும்- கடல் கடைந்த

நீலத் திகிரி அனையார், அரங்கர் நிறைந்த செங்கைக்

கோலத் திகிரி தலைநாளினில் கொண்ட கோலங்களே

கோலத் திகிரியான இந்தச் சுதர்சனச் சக்கரம் திருஆழி ஆழ்வார் என மூன்று கண்கள், 16 கைகளுடன் அறுகோணச் சக்கரத்தின் நடுவில் அமைக்கப்பட்டு வணங்கப்படுகிறார்.

பாடலைப் பாடிய திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்கிற அழகிய மணவாளதாசர், பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ராமானுச நூற்றந்தாதி பாடிய திருவரங்கத்தமுதனாரின் பேரன். அஷ்டப் பிரபந்தம் நூல் தொகுப்பில் 751 பாடல்களைப் பாடியவர்.

SCROLL FOR NEXT