தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களிலுமே ஒவ்வொரு மாதத்திலும் ஒரு திருவிழா, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மதுரை பத்ரகாளியம்மன் கோயிலில் நடக்கும் வைகாசி திருவிழா மிகவும் பிரசித்தமானது.
மதுரை, திருமங்கலத்தில் ஏறக்குறைய 150 ஆண்டுகள் பழமையான கோயில் என்னும் பெருமையைப் பெற்றது பத்ரகாளி மாரியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா, நவராத்திரி திருவிழா, கார்த்திகை திருவிழா, தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா ஆகியவை மிகவும் பிரசித்தமாக நடைபெறும்.
ஆலயத்தில் மூலவராக ஸ்ரீ மாரியம்மனும் உற்சவராக ஸ்ரீ பத்ரகாளியம்மனும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடக்கும் திருவிழாவைக் காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கூடுகின்றனர். வைகாசி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா, 13 நாட்களுக்கு தொடர்ந்து வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
திருமங்கலம் ஆன கதை
மதுரை மீனாட்சியை சொக்கநாதர் மணமுடிக்கிறார். இந்த வைபவத்துக்கு முன்பே தேவர்களுக்கு சிவபெருமான் மீனாட்சி தம்பதியாக இந்த ஊரில் காட்சியளித்ததாகச் சொல்லப்படுகிறது. சிவபெருமான், மீனாட்சி திருமணத்துக்காக, தேவர்கள் தங்கத்தை உருக்கி மாங்கல்யம் செய்த ஊர் என்பதால், தேவர்கள் இதை `திருமாங்கல்யபுரம்’ என்று அழைத்தனராம். இந்தப் பெயர் நாளடைவில் மருவியே திருமங்கலம் ஆனது என்கிறார்கள் சிலர்.
அம்மன் சிலையின் விசேஷம்
பொதுவாகவே பெரும்பாலான அம்மன் ஆலயங்களிலும் அம்மன் சொரூபத்தின் இடது கால் மடங்கியவாறும் வலது காலை நிலத்தில் ஊன்றியபடியும் இருக்கும். ஆனால் இங்கே அம்மனின் சொரூபத்தில் வலது கால் மடிந்தும் இடது காலைத் தரையில் ஊன்றியும் காட்சி தருவது சிறப்பு.
திருவிழாக் கோலாகலம்
முதல் நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். இரவு சிம்ம வாகனத்தில் மாரியம்மனின் திருவுலா நடக்கும். இரண்டாம் நாள் பூத வாகனத்தில் அம்மன் நகர்வலம் வருவார். மூன்றாம் நாள் அன்ன வாகனத்தில் அம்மன் அருள்பாலிப்பார். நான்காம் நாள் காமதேனு வாகனத்தில் அம்மனின் திருவுலா நடக்கும். ஐந்தாம் நாள் குதிரை வாகனத்தில் அம்மனின் திருவீதி உலா நடைபெறும். ஆறாம் நாள் பெரிய ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருவார் பத்ரகாளி அன்னை. அதோடு, சிறிய ரிஷப வாகனத்தில் மாரியம்மன் வலம் வருவார். அதோடு சமணர் கழுவேற்றும் நிகழ்வு நடத்திக் காட்டப்படும்.
ஏழாம் நாள் பூப்பல்லக்கில் மாரியம்மன் நகர்வலம் வருவார். எட்டாம் நாள் ஊஞ்சல் ஆட்டமும், பூச்சப்பரத்தில் நகர்வலமும் விசேஷம். ஒன்பதாம் நாள் அம்மனுக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்துவந்து வழிபடுவர். நாக வாகனத்தில் அம்மனின் திருவீதி உலா நடைபெறும். பத்தாம் நாள் வெள்ளி சிம்ம வாகனத்தில் பத்ரகாளியம்மனும் சிறிய குதிரை வாகனத்தில் மாரியம்மனும் வீதி உலா வருவர்.
ஆலயத்தின் முன்பாக சூரசம்ஹாரமும் நடக்கும். பதினொன்றாம் நாள் பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சி நடக்கும். பன்னிரெண்டாம் நாள் யானை வாகனத்தில் அம்மனின் திருவீதி உலா நடைபெறும். பதிமூன்றாம் நாள் குண்டாற்றில் ஆயிரம்பொன் சப்பரத்தில் அன்னை எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். அதோடு புராதன மாரியம்மன் கோயிலில் தசாவதாரக் காட்சியும் நடக்கும்.
திருவிழா நடைபெறும் எல்லா நாட்களுமே விசேஷமானதுதான் என்றாலும், ஆறாம் நாள் சமணர் கழுவேற்ற நிகழ்வுக்கும் ஒன்பதாம் நாள் முளைப்பாரி நிகழ்ச்சிக்கும் பத்தாம் நாள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கும் பதிமூன்றாம் நாள் நடக்கும் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆலயத்தின் அம்மனை வழிபட்டால் உடல் நலம் கூடும். சகலவிதமான தோஷங்களையும், துர்குணங்களையும் போக்கும் அருள் கிடைக்கும் என்பது காலம்காலமாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.