ஆன்மிகம்

திருத்தலம் அறிமுகம்: சிவலிங்கத்தைக் காத்த முத்துக்கருப்பணன்

ஆர்.செளந்தர்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலிருந்து, அம்மாபட்டிக்குச் செல்லும் சாலையில் அருள்மிகு முத்துக்கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள குன்றின் மீது இருந்த சிவலிங்கத்தை, மந்திரவாதி ஒருவர் எடுத்துச் செல்ல முன்றபோது முத்துகருப்பணர் அந்த மந்திரவாதியைத் தடுத்து வதம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்பு அவர் நிரந்தரமாக அடிவாரத்திலேயே எழுந்தருளிவிட்டார். பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர் பாறையடி முத்தையா என்றும் அழைக்கப்படுகிறார்.

கதவு தட்டி பூஜை

நெற்றில் நாமம், முறுக்கு மீசையுடன் சுவாமி ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து அவனது தலையைப் பிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதாகும். இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால் விசிறியால் வீசப்படுகிறது.

காலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர் சன்னிதிக் கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்றுகொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டிவிட்டு அதன் பின்பே சன்னதிக்குள் சென்று சுவாமிக்குப் பூஜை செய்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்படுகிறது. பக்தர்கள் இவரை ஐயா என்று அழைக்கின்றனர்.

வாழை மட்டை வழிபாடு

சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. இவரது உக்கிரத்தைக் குறைக்கும் விதமாக அமாவாசையன்று நிழலில் உலர்த்திய தர்ப்பையை தீயில் எரித்துக் கிடைக்கும் சாம்பலுடன் கஸ்தூரி, ஜவ்வாது, புனுகு, பச்சைக் கற்பூரம் மற்றும் ஐந்துவித எண்ணெய் சேர்த்து கலவை தயாரித்து அதனைக்கொண்டு காப்பிடப்படுகிறது.

பவுர்ணமி அன்று வெண்ணெய்க் காப்பு செய்யப்படும். தைலக்காப்பின் போது சுவாமி உக்கிரமாகத் தெரிவார். இந்த நேரத்தில் சன்னதிக்குள் பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. சிவனின் காவலர் என்பதால் சிவராத்திரியன்று நள்ளிரவில் விசேஷ பூஜை நடக்கிறது. திருமணமாகாதவர்கள் சுவாமியின் பாதத்தில் வாழை மட்டை படைத்து வேண்டிக்கொண்டு அதில் பாதியைப் பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர்.

சிவனைப் பூஜிக்கும் அம்பிகை

சுவாமி சன்னதியின் இருபுறமும் தேவபூதகன், ஆகாச பூதகன் ஆகிய இரு காவல் தெய்வங்கள் காட்சி தருகின்றனர். கோவில் எதிரில் நந்தியுடன் அக்னி வீரபத்திரர் தட்சனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் நவக்கிரகம், புற்று வடிவ நாகர் சன்னதி உள்ளது.

கோவிலுக்குப் பின்புறமுள்ள குன்றில் சதுர பீடத்துடன் கூடிய லிங்கமாக சிவன் காட்சி தருகிறார். அருகில் பார்வதி மண்டியிட்டு மலருடன் சிவபூஜை செய்கிறார். இந்தக் கோலத்தைக் காண்பது அரிது என்று கூறப்படுகிறது. குன்றின் அடியில் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது.

SCROLL FOR NEXT