ஆன்மிகம்

அறம் சொல்லும் திரௌபதி

ப்ரதிமா

சித்திரை வெயிலையும் குளிர்ச்சி யாக்கிவிடுகிற மகத்துவம் திருவிழாக்களுக்கு உண்டு. வட தமிழகப் பகுதிகளில் கொண்டாடப்படும் அக்னி வசந்த விழா எனப்படும் திரௌபதி அம்மன் திருவிழா பிரசித்தி பெற்றது.

பொதுவாக உலக மக்களின் நன்மைக்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் வாழ்வின் நிலையாமையையும், அறமே வெல்லும் என்ற தத்துவத்தையும் திரௌபதி அம்மன் திருவிழா உணர்த்துகிறது. மக்களுக்கு வீரத்தை ஊட்டுவதற்காகப் பாரதக் கதை படிக்கும் வழக்கம் இருந்ததாகவும் அதுவே பின்னாளில் திரௌபதி அம்மன் வழிபாடாகத் தொடர்வதாகவும் சொல்கிறவர்களும் உண்டு. கலையும் பண்பாடும் பக்தியில் சங்கமிக்கும் அற்புதம் இந்தத் திருவிழா.

கொடியேற்றம்

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நடைமுறை என்றாலும் அனைத்து ஊர்களிலும் பாரதக் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். சில ஊர்களில் பத்து நாட்களும் சில இடங்களில் பதிமூன்று நாட்களும் திருவிழா நடக்கும். நெருப்பில் அவதரித்த திரௌபதி, பாஞ்சால நாட்டு மன்னனின் மகள் என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்படுகிறாள்.

கௌரவர்களுக்கு எதிராகப் பாஞ்சாலி எடுத்த சபதத்தை முடித்துவைக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் தீ மிதி திருவிழா கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம் முடிந்த மறுநாள் திருக்கல்யாணம். தீ மிதிக்கும் பக்தர்கள் காப்பு கட்டிக்கொள்வர். ஊர்ப்பொதுவில் ஓதுவார்கள் பாரதக் கதை படிக்க, கிராம மக்கள் கேட்பார்கள்.

பாரதக் கூத்து

திரௌபதி அம்மன் திருவிழாவின் முக்கிய அம்சம் இரவுகளில் நிகழ்த்தப் படுகிற பாரதக் கூத்து. முதல் நாள் வில் வளைப்பு. மறுநாள் சுபத்திரை திருமணம். அதைத் தொடர்ந்து தருமர் யாகம், பகடைத் துகில், அர்ச்சுனன் தபசு, குறவஞ்சி, கீசகன் வதம், கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, அபிமன்யு சண்டை, கர்ண மோட்சம், 18-ம் நாள் போர் ஆகியவை நடக்கும். இரவு நடக்கிற 18-ம் நாள் போரில் சகுனியும் சல்லியனும் கொல்லப்பட, மறுநாள் காலை பத்து மணி வாக்கில் துரியோதனன் படுகளம் நடக்கும்.

துரியோதனன் படுகளம்

பாரதக் கூத்தின் முக்கிய நிகழ்வு துரியோதனன் படுகளம். துரியோதனனின் பிரமாண்ட மண் உருவம் தரையில் வடிக்கப்பட்டிருக்கும். அந்த உருவத்தைச் சுற்றி உயிர்ப் பிச்சை வேண்டித் துரியோதனன் ஓட, திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றுவதற்காகத் துரியோதனனை பீமன் துரத்த நீதிக்கும் அநீதிக்குமான போராட்டமாகவே அது நிகழும். துரியோதனனின் உயிர் தொடையில் அடங்கியிருப்பதாக ஐதிகம் என்பதால் பீமன் வேடமேற்றிருப்பவர் துரியோதனனின் மண் உருவத்தின் தொடைப் பகுதியில் கதாயுதத்தால் அடித்துப் பிளப்பார்.

துரியோதனன் தொடையில் இருந்து வெளிப்படும் உதிரத்தை எண்ணெய்யாகப் பூசி, அவனது எலும்புகளையே சீப்பாகக் கொண்டு பாஞ்சாலியின் கூந்தலை அள்ளிமுடிவார் கிருஷ்ணப் பரமாத்மா. துரியோதனன் படுகளத்தைத் தொடர்ந்து நடைபெறும் காந்தாரியின் ஒப்பாரியை ஊர் மக்கள் அனைவரும் காண்பர்.

தீ மிதி திருவிழா

துரியோதனன் படுகளம் முடிந்த அன்று மாலை தீ மிதித் திருவிழா நடைபெறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பலரும் காப்பு கட்டிக்கொண்டு இதற்காக விரதம் இருப்பார்கள். திரௌபதி அம்மன் கோயிலுக்கு முன்னால் இருக்கும் இடத்தில் மரக்கட்டைகள் குவிக்கப்பட்டுத் தீ வைக்கப்படும்.

மாலை நெருங்கும்போது கட்டைகள் எரிந்து, நெருப்பு கனன்று கொண்டிருக்கும். கரகம் முதலில் செல்ல, அதைத் தொடர்ந்து பக்தர்கள் நெருப்புக் குண்டத்தில் இறங்குவார்கள். பெரும்பாலும் தீ மிதி அன்று மழை பெய்து அந்தச் சூழலைக் குளுமையாக்கிவிடும்.

தீ மிதித் திருவிழா முடிந்த மறுநாள் தருமர் பட்டாபிஷேகம். தீயச் சக்திகளை வென்று தருமமே நிலைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தருமர் பட்டாபிஷேகத்தோடு திருவிழா நிறைவுபெறும்.

SCROLL FOR NEXT