ஆன்மிகம்

வளம் தரும் வரதராஜ பெருமாள் கோயில்

ச.கார்த்திகேயன்

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள 108 வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலும் ஒன்று. வரதராஜ பெருமாள் அஷ்ட நட்சத்திரத்தில் பிறந்தவர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அஷ்ட நட்சத்திரம் பிறக்கும் தேதியில் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கும். இவ்விழா 10 நாள்கள் நடைபெறுகிறது.

கொடியேற்றம்:

வைகாசி மாதம் அஷ்ட நட்சத்திரம் பிறக்கும் நாளில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். அன்று அதிகாலை 3 மணிக்கு மூலவருக்குத் திரு ஆராதனை செய்யப்படும். தொடர்ந்து வரதராஜ பெருமாள், மலையில் இருந்து கீழே இறங்குவார். பின்னர் அதிகாலை 4.15 மணிக்கு கொடி மரத்தில் கொடி ஏற்றப்படும். இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு களிப்பர். தொடர்ந்து 4.30 மணி அளவில் தங்க சப்பரத்தில் தேவி, பூதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் 4 மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.

கருட சேவை

பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாள் கருட சேவை நடைபெறும். இதையொட்டி அதிகாலை 4.30 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுவார். அப்போது கோபுர தரிசனமும் நடைபெறும். பின்னர் நான்கு ராஜ வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கருட சேவை உற்சவத்தின்போது, உற்சவப் பெருமாளுக்கு முன்பாக வேத பாராயண கோஷ்டியினர் வேத பாராயணத்தைப் பாடியவாறு செல்வர்.

தேரோட்டம்

பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாள் அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் எழுதந்தருளுவார். பின்னர் வரதராஜ பெருமாள், கோயிலில் இருந்து காந்தி சாலை தேரடிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு நிலையில் இருக்கும் தேரில் அதிகாலை 5.15 மணிக்கு அமர்த்தப்படுவார்.

இதைத் தொடர்ந்து தேரின் மீது அமர்ந்திருக்கும் வரதராஜ பெருமாளை, தேரின் மீது ஏறிச் சென்று வழிபட அதிகாலை 5.15 முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பின்னர் 6 மணிக்குத் தேர் புறப்பாடு நடைபெறும். தேரோட்டத்தைக் காணப் பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுப்பர். இதனால் அன்று காஞ்சிபுரம் நகரத்தின் அனைத்துச் சாலைகளிலும் மக்கள் வெள்ளத்தையே காணமுடியும். இத்தேர் காந்தி சாலையில் இருந்து காமராஜர் சாலை வழியாக சென்று காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 4 ராஜ வீதிகளிலும் வலம் வந்து நிலைக்கு வரும்.

அன்னதானம்

அன்று பக்தர்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் சார்பில் தேரோட்டத்தைக் காண வரும் வெளியூர் பக்தர்களுக்கு மோர், பழரசம், வெண் பொங்கல், தயிர் சாதம், புளி சாதம் ஆகியற்றை வழங்குவர்.

தீர்த்தவாரி

பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாள் இக்கோயிலில் தீர்த்தவாரி நடைபெறும். அதையொட்டிக் கோயில் உள்புறம் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் தேவி, பூதேவி சகிதமாய் வரதராஜ பெருமாள் எழுந்தருளுவார். அங்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். பின்னர் அங்கிருந்து வரதராஜ பெருமாள் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாகச் சென்று குளத்தில் இறங்குவார். அப்போது அவருக்குப் படைத்த பிரசாதம் குளத்தில் வீசப்படும். வரதராஜர் குளத்தில் நீராடியதைத் தொடர்ந்து, அங்கு குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் இறங்கி நீராடி மகிழ்வர். பின்னர் வரதராஜர் பக்தர்கள் புடைசூழ உற்சவர் அறைக்குப் புறப்பட்டுவார்.

நிறைவு

பிரம்மோற்சவ விழாவின் 10-வது நாள் கொடி இறக்கப்பட்டு, அன்றுடன் விழா நிறைவு பெறும். பத்து நாள் பிரம்மோற்சவ விழாவில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு நாளும் வரதராஜ பெருமாள், தங்க சப்பரம், சேஷ வாகனம், தங்கப் பல்லக்கு, சிம்ம வாகனம், சூரிய பிரபை, ஹனுமந்த வாகனம், சந்திரப் பிரபை, யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், புண்ணியகோடி விமானம், வெட்டிவேர் சப்பரம் ஆகியவற்றில் வலம் வருவார். இந்த 10 நாள் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் காஞ்சிபுரத்திற்கு வந்தவண்ணம் இருப்பர். இப்பிரம்மோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எல்லா வளங்களையும் பெருமாள் வழங்குவார் என்பது ஐதீகம்.

புடைப்படக் கண்காட்சி

இந்த ஆண்டு நடைபெற்ற பிரம்மோற்சவத்தின்போது, புதுமையான நிகழ்வாக 19-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் நகரில் எடுக்கப்பட்ட கோயில்களின் புகைப்படங்கள் இடம்பெற்ற கண்காட்சி கச்சபேஸ்வரர் கோயில் அருகில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் மற்றும் காஞ்சிபுரம் கைத்தறி பட்டு ஜரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இக்கண்காட்சியில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் இருந்து பெறப்பட்ட அரியவகைப் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. முதியோர்களைப் பழங்கால நினைவுகளை அசைபோட வைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT