ஆன்மிகம்

வைணவம் வளர்த்த தமிழ் மாமுனி

ஸ்ரீ நிவாஸ்

ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி. காட்டுமன்னார்கோயில் வீரநாராயணப் பெருமாள் ஆலயம். வெளியூர்களிலிருந்து வந்திருந்த அடியவர்கள், பாசுரங்கள் சிலவற்றைப் பாடி, பெருமாளைத் தொழுதுகொண்டிருந்தனர்.

“ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே, நீராய் அலைந்து, கரைய உருக்குகின்ற நெடுமாலே…”

என்று தொடங்கிய அவர்கள், இறுதியில்

“…குருகூர்ச் சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்…” என்று முடித்தனர்.

பாசுரங்களைக் கேட்டான், அர்ச்சகர் ஈஸ்வரபட்டரின் மைந்தன். அவற்றின் அழகிலும், இனிமையிலும் அவன் உள்ளம் உருகியது. கண்ணீர் மல்கியது. பாசுரங்கள் சிலவற்றை மட்டுமே கேட்ட அவனுக்கு, அனைத்தையும் கேட்கும் பேரவா எழுந்தது.

பாசுரங்களைத் தேடி

எப்பாடுபட்டேனும் இந்த அழகிய பக்திக் கருவூலங்கள் முழுவதையும் கண்டெடுத்து உலகுக்கு அளிப்பேன் என்று புறப்பட்டான் அவன். வைணவ உலகும், தமிழ் உலகும் ஒருங்கே போற்றும் மகான் நாதமுனிகள்தான் அந்தப் பையன்.

இளமையில் திருமால் பக்தி

கிபி 824-ம் ஆண்டு ஆனி மாதம், அனுஷ நட்சத்திரத்தில், காட்டுமன்னார்கோயில் என்ற சிற்றூரில் பிறந்தவர் நாதமுனிகள். இளமையிலிருந்தே, திருமாலின் மீது ஆழ்ந்த பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்டு வளர்ந்தவர்.

பாசுரம் குறிப்பிட்ட திருக்குருகூர் என்ற ஆழ்வார்திருநகரி, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருந்தது. அங்கு சென்ற அவர், பாடல்களைத் தேடி பெரிதும் அலைந்து திரிந்தார். பயனில்லை.

குருகூர்ச் சடகோபன்

சடகோபர் என்ற நம்மாழ்வாரின் நேரடி சீடர் மதுரகவியாழ்வார். அவருடைய சீடர் பராங்குசதாசர். நாதமுனிகளுக்கு இந்த அடியவரின் அறிமுகம் கிடைத்தது. தேடினால் கிடைக்கும் என்று ஆறுதல் அளித்தார் பராங்குசதாசர்.

அவருடைய குரு மதுரகவியாழ்வார், தம் குருவான நம்மாழ்வார்மீது பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்கியானத்தை உபதேசம் செய்து, பக்தியுடன் ஓதினால் நம்மாழ்வாரின் அருளைப் பெறலாம் என்று அறிவுறுத்தினார். முழு நம்பிக்கையுடனும், ஈடுபாட்டுடனும், ஊன் உறக்கம் இன்றி, அப்பாசுரங்களை இடைவிடாது ஓதத் தொடங்கினார் நாதமுனிகள்.

நாதமுனிகளுக்குக் காட்சி தந்த ஆழ்வார்

ஆழ்வாரின் உள்ளம் கனிந்தது. நாதமுனிகளுக்குக் காட்சி தந்தார். தமது பாடல்கள் மட்டுமின்றி, பன்னிரு ஆழ்வார்களின் 4,000 பாசுரங்களையும் கொடுத்து அருளினார்.

நம்மாழ்வாரின் தரிசனத்தால் நாதமுனிகள் உள்ளம் சிலிர்த்தது. தேடியலைந்த பொக்கிஷத்தைப் பெற்றதால் மனம் பரமானந்தத்தில் நிறைந்தது.

திருமால் பக்தி தழைக்கவும், தமிழ்க் கவிதைச் சிறப்பை உலகம் அறியவும் பெருந்தொண்டாற்றிய இம்மாமுனியை, முதல் ஆச்சார்யர் என்று நன்றியுடன் வணங்குகிறது தமிழ்ப் பக்தி உலகம்.

SCROLL FOR NEXT