வைணவத்தின் பிரதானக் கடவுளான விஷ்ணுவும், அவரது நாபிக் கமலத்தில் உதித்த பிரம்மனும், சிவனும் உறையும் அழகிய தலம் திருச்சியில் உள்ள உத்தமர் கோயில். சப்தகுரு என்ற ஏழு குரு தெய்வங்களைக் கொண்டது இத்திருத்தலம். பிரம்ம குரு, விஷ்ணு குரு, சிவ குரு, சக்தி குரு, சுப்ரமணிய குரு, தேவ குரு என்ற பிரகஸ்பதி, அசுர குரு என்ற சுக்ராச்சார்யார் ஆகியோர்தாம் அந்த ஏழு குருக்கள். குரு பார்க்கக் கோடி நன்மை. இத்தனை குருக்களைப் பார்த்தால் எத்தனை கோடி நன்மை?
மூன்று தேவியரும், மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள இத்திருக்கோயில் தரிசனம் சப்த குரு தரிசனம் எனப்படுகிறது. புத்திரகாரகன் என்று அழைக்கப்படும் குருவின் அருள் இருந்தால்தான் குழந்தைப்பேறு கிடைக்கும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
நல்லறிவு, ஞானம், உயர் பதவி, நீதி உணர்வு, சொல் வன்மை, கலைகளில் தேர்ச்சி, தயாள குணம், மன மகிழ்ச்சி, சமய தீட்சை, தேவவேதாந்த அறிவு ஆகியவை குரு பகவானின் திருவருளால் கைகூடும் என்கிறது இத்திருத்தலப் புராணம்.
முதல் குரு பிரம்மா
பிரம்மா இத்தலத்தில் குரு பகவானாக விமானத்துடன் கூடிய தனிச் சன்னதி கொண்டுள்ளார். குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர என்கிறது பிரபலமான சுலோகம். அதனால் முதல் குருவாகக் கொள்ளத் தக்கவர் பிரம்மா.
பிரம்மனுக்கு கோவில்கள் அரிது. பிரம்மன் இருப்பிடம் சிவன் கோயில்களில் பிறை மாடமாக மட்டுமே காணப்படும். ஆனால் உத்தமர் கோயிலில் அவருக்குத் தனிச் சன்னதி உண்டு.
ஞானம் அருளும் சரஸ்வதி
பிரம்மனின் இடப்புறம் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறாள் சரஸ்வதி. ஏட்டுச் சுவடியையும், ஜெப மாலையையும் கரங்களில் ஏந்தி அபய, வரத முத்திரையுடன் அருள்பாலிக்கிறாள். ஞானத்தை அருளும் அவளே மாணவர்களுக்கு நல்லறிவு, உயர்கல்வி, அதன் பயனான வேலை ஆகியவற்றை அருளுகிறாள்.
புருஷோத்தமனாகப் பெருமாள்
பிரம்மனுக்குத் தந்தை, அதனால் சரவஸ்வதிக்கு மாமனார் என்ற சிறப்புத் தகுதிகள் கொண்ட பெருமாளுக்கு இங்கு புருஷோத்தமன் என்பது திருநாமம். பெருமாள் அனந்த சயனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
பூரணவல்லி மகாலட்சுமி
புருஷோத்தமப் பெருமாள் சன்னதியின் வெளியில் மகாலட்சுமி தனியாகக் கோயில் கொண்டுள்ளார். இச்சன்னதியில் எழுந்தருளிய தாயார் திருநாமம் பூரணவல்லி. இத்தாயார் அன்னபூரணி அம்சம் என்கிறது தல புராணம். பிச்சாடனர் கையில் இருந்த பிரம்ம கபாலத்தில், இத்தாயார் அன்னமிட்டதால் மட்டுமே நிரம்பி வழிந்ததாம் அன்னம். குறைவு இல்லா அன்னம் அளித்ததால் தாயார் அன்னபூரணி அம்சம் என்கிறார்கள். பூரணமாக அன்னம் அளித்ததால் பூரணவல்லி என்ற காரணச் சிறப்பு பெயர் தாயாருக்கு.
சயனத் திருக்கோலம்
கேட்டவுடன் கொடுக்கும் கடவுளான சிவனுக்கு இங்கு பிச்சாடனர் என்பது திருநாமம். பிரம்ம கபாலத்தை பிட்சை பாத்திரமாக ஏந்தியதால் பிச்சாடனர். சிவபெருமான் மூலவர் சன்னதியில் மூலவருக்கு அருகிலேயே பிச்சாண்டவர் உற்சவ மூர்த்தி உள்ளது. வைகாசி மாதம் இப்பெருமான் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளன்று சேஷ வாகனத்தில் சயனத் திருக்கோலம் கொண்டு திருவீதி உலா வருவது சிறப்பு.
சிவபெருமான் சன்னதியின் வெளிப்புறம் முன் மண்டபத்தில் தனிச் சன்னதியில் செளந்தர்ய பார்வதி என்ற திருநாமத்துடன் அருளாட்சி செய்கிறாள். அன்னை தென்திசை நோக்கி இருப்பதால் சக்தி குருவாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
உத்தமப் பெருமாள் உறையும் உத்தமர் கோயில் தரிசனம் உன்னதம் தரும்.