நமக்குத் தெரிந்த ஆன்மிக ஞானிகள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும் புராணங்களில் வெளிப்படும் பக்தி மணம் கமழும் கருத்துகளையும் 32 பக்கங்களே உள்ள நூலில் எளிமையாக விளக்குகிறார் ஜோதிடர் கவிஞர் வேலூர் இரா.நக்கீரன். சுருங்கச் சொல்லி விளக்குவதில் இருக்கும் நன்மைகளைப் பல தலைப்புகளில் இவர் எழுதியிருக்கும் குறு நூல்களின் வழியாக அறியலாம்.
தமிழிசைப் பாடல்கள் (1956) தொடங்கி 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார் இரா. நக்கீரன். அவதார புருஷர் ஸ்ரீ சீரடி சாயிபாபா உபதேச மஞ்சரி, திருமாலின் 1000 திருநாமங்கள், சுகம் தரும் ஸ்ரீமத் சுந்தரகாண்டம், ஸ்ரீ ராமதரிசனம் உள்ளிட்ட அனைத்து நூல்களையும் கவிதாலயம் வெளியிட்டுள்ளது.
துளசிதாசர் அருளிய ராமசரிதமானசம், அத்யாத்ம ராமாயணத்தை ஒட்டி எழுதப்பட்டுள்ளது. ராமரின் பட்டாபிஷேகத்துடன் பெரும்பாலான ராம கதைகள் முடிந்துவிடும். ஆனால் பட்டாபிஷேகத்துக்குப் பிந்தைய ராமரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அத்யாத்ம இராமாயணத்தில் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.
பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என ஏழு காண்டங்களைக் கொண்டது அத்யாத்ம இராமாயணம்.
இதிலிருந்து தான் படித்துணர்ந்த கருத்துகளையும், மகா பெரியவர் மற்றும் மூதறிஞர் ராஜாஜி ஆகியோர் அருளிய சில கருத்துகளையும் தொகுத்து அளித்துள்ளார் நக்கீரன்.
அத்யாத்ம இராமாயணத்தின் பலன்களாக இவற்றைப் பட்டியடுகிறார் ஆசிரியர்:
தீய எண்ணங்கள், துரோகச் சிந்தனைகள், தெய்வ நிந்தனைகள், போட்டி, பொறாமை, நட்புத் துரோகம், பிரம்மஹத்தி தோஷம் மற்றும் எண்ணற்ற பாவங்கள் அகலும்; அத்யாத்ம இராமாயணத்தைப் படிப்பதாலும், கேட்பதாலும் வேதங்களை ஓதுவதாலும், சாஸ்த்திரங்களை, மற்றவர்களுக்கு விளக்குவதாலும் உலகில் அளவிடற்கரிய நற்பலன்களை அத்யாத்ம இராமாயணத்தை எழுதி மற்றவர்க்கு வழங்குபவர்கள் அடைவார்கள்.
துளசிச் செடி அல்லது அரச மரத்தடியில் இருந்து கொண்டு, ஸ்ரீ இராமஹ்ருதயத்தை அத்யாத்ம இராமாயணத்தைப் படித்தால், செய்த பாவங்கள் தீர்ந்து புண்ணியம் வந்து சேரும். கீதாம்ருதத்தைப் பருகிட மேன்மைகள் உண்டாகும்.
இவ்வாறு நூலாசிரியர் ஜோதிடர், கவிஞர் வேலூர் இரா. நக்கீரன் இந்நூலில் விளக்குகிறார்.
ஸ்ரீ ராமதரிசனம் (அத்யாத்ம ராமாயணத்திலிருந்து தொகுக்கப்பெற்ற அறவுரைகள் மற்றும் ஸ்ரீ நாமராமாயண பாராயணம் ஸ்லோகம் அடங்கியது)
நூலாசிரியர்: ஜோதிடர் கவிஞர் வேலூர் இரா.நக்கீரன்.
விலை ரூ.20.
வெளியீடு: கவிதாலயம் ஜோதிட மையம், 56, திருப்பூர் குமரன்,
இரண்டாவது தெரு, சலவன்பேட்டை, வேலூர் 632 001.
தொலைபேசி: 0416-2223399 செல்போன்: 9994309533.