ஆன்மிகம்

சத்வ குணம் சிறந்ததா?

சைதன்யா

மனிதர்களிடம் இருக்கும் குணங்களை சத்வம், ராஜஸம், தாமஸம் என்று வகைப்படுத்துவார்கள். இவற்றில் தாமஸம் என்பது மந்தம், சோம்பல் ஆகியவற்றைக் குறிக்கும். ராஜஸம் செயல்துடிப்பையும் போராட்டத்துக்கான உத்வேகத்தையும் குறிக்கும். சத்வம், அமைதி, சமாதானம், பணிவு ஆகியவற்றைக் குறிக்கும். சுருக்கமாகச் சொன்னால், சத்வம் அமைதி, ராஜஸம், செயல் வேகம், தாமசம் மந்த நிலை.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது சத்வ குணமே சிறந்தது என்று தோன்றும். ஆனால் இந்த மூன்று குணங்களையும் கடந்த நிலையே ஆன்மிக முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் என்று தத்துவ ஞானிகள் சொல்கிறார்கள்.

இந்த மூன்று குணங்களும் எப்படி ஒருவரைக் கட்டுப்படுத்தும் என்பதை விளக்க ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அழகான கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார்.

ஒரு பெரியவர் காட்டு வழியே போய்க்கொண்டிருந்தார். கையில் கொஞ்சம் பணம் இருந்தது. பையில் சாப்பாடும் சில பொருள்களும் இருந்தன.

கொள்ளையர்கள் வழிமறித்தார்கள். பெரியவர் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சரணடைந்தார். காட்டில் பயணம் செய்யும்போது இது சகஜம்தான் என்பது அவருக்குத் தெரியும். திருடர்கள் பணத்தையும் பையையும் பிடுங்கிக்கொண்டார்கள். பெரியவரால் தங்களைத் தொடர்ந்து வந்து எதுவும் செய்துவிட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். என்றாலும் அவரை அப்படியே விட்டுவிட்டுப் போனால் அந்தக் காட்டிலேயே வசிப்பவர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு தங்களைத் தேடி வரலாம் என்று நினைத்தார்கள்.

அவரை ஒரு மரத்தில் வைத்துக் கட்டிவிடலாம் என்றான் ஒருவன்.

வாயையும் கட்டிவிட வேண்டும் என்றான் இன்னொருவன்.

உடைகளைக் களைந்துவிட வேண்டும் என்று மூன்றாமவன் சொன்னான்.

என்னை விட்டுவிடுங்கள், உங்களைத் துரத்திக்கொண்டு வர மாட்டேன் என்று பெரியவர் எவ்வளவோ கெஞ்சியும் திருடர்கள் மசியவில்லை.

தங்கள் யோசனைகளைச் செயல்படுத்தினார்கள்.

பெரியவர் செய்வதறியாமல் திகைத்து நின்றார்.

திருடர்கள் ஊர் எல்லையை அடைந்ததும் பணத்தைப் பங்கு பிரித்துக்கொண்டார்கள். உணவையும் சாப்பிட்டார்கள். “அந்தப் பெரியவர் பாவம், சாப்பிட்டிருக்கக்கூட மாட்டார்” என்று அப்போது ஒருவன் சொன்னான்.

அதைக் கேட்ட ஒருவன் அலட்சியமாகச் சிரித்தான். “மற்றவர்களுக்குப் பாவம் பார்த்தால் நம் பிழைப்பு நடக்காது” என்றான்.

மூவரும் பிரிந்தார்கள். பேசாமல் இருந்த திருடனின் மனம் கனத்திருந்தது. திருடியதோடு நில்லாமல் சாப்பாட்டையும் பிடுங்கிக்கொண்டு உடைகளையும் பிடுங்கிக்கொண்டு வந்துவிட்டோமே என்று வருந்தினான். மனம் கேட்கவில்லை.

கொஞ்சம் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் போனான். வாடி நிற்கும் பெரியவருக்கு உடை அணிவித்து உணவைக் கொடுத்தான். ஆனால் அவரை விடுவிக்கவில்லை. மீண்டும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டு வந்தான்.

சத்வ குனம் நல்ல குணம்தான். ஆனால் அது அந்த மூன்றாவது திருடனைப் போல. அது ஓரளவுக்கு நம் வளர்ச்சிக்கு உதவும். ஓரளவு காப்பாற்றும். ஆனால் நாம் முற்றிலுமாக விடுதலை பெற அதுவும் உதவாது. குணங்களைக் கடந்த நிலைதான் முக்திக்கு வழி வகுக்கும் என்கிறார் பரமஹம்ஸர்.

SCROLL FOR NEXT