எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பர். தலைகுனிந்து தலைவனை (இறைவனை) சேவிப்பவர்களுக்குத் தலைக்கனம் நீங்கும். சிரசில் தொடங்கி பாதம் வரையிலான உடலின் அனைத்துப் பாகங்களையும் காப்பாற்ற வேண்டி முருகனை வரவேற்கும் பாடல்களைக் கொண்டதே கந்த சஷ்டி கவசம். பாலதேவராயன் என்னும் முனிவரால் எழுதப்பட்ட இந்தக் கவசமே கவசங்களில் சிறந்ததாக ஆன்மிகப் பெரியோர்களால் கருதப்படுகின்றது.
கவசங்கள் ஆறு
உயிரையும் உடலையும் பல்வேறு துன்பங்களிலிருந்து பாதுகாக்க இறைவனை வேண்டும் முக்கியமான கவசங்கள் ஆறு. அவை, சிவ கவசம், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், சக்தி கவசம், விநாயகர் அகவல், நாராயண கவசம்.
சிரகிரி வேலா சீக்கிரம் வருக!
ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உள்ள சென்னிமலை, ஊதிமலை, வட்டமலை, சிவன்மலை, திருமுருகன்பூண்டிமலை போன்றவற்றில் தலையாயது சென்னிமலை. சென்னி என்னும் சொல்லுக்கே தலை என்னும் பொருள் உள்ளது. இந்த மலைக்கு சிரகிரி, சென்னியங்கிரி, புஷ்பகிரி, சிகரகிரி ஆகிய பெயர்களும் உண்டு.
கந்த சஷ்டி கவசத்தில் `சிரகிரி வேலா சீக்கிரம் வருக!’ என முருகனை அழைப்பார் தேவராய சுவாமிகள். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் கந்த சஷ்டி கவசம், `உடலின் ஒவ்வொரு உறுப்பையும் காக்க’ என்னும் வரிகளைக் கொண்டிருக்கும். இந்த வரிகளைப் படிக்க மன சாந்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.