கார்த்திகை மாதம் 13ஆம் நாள் கிருஷ்ணபட்ச நட்சத்திரம் முதல் அஸ்வினி மாதத்தின் இரண்டாம் நாள் வரும் சுக்லபட்சம் வரை பலம் வாய்ந்த பருவமாகும். இந்த காலகட்டத்தில் நட்சத்திரங்களின் ஆற்றல் முழுவதும் பூமி மீது கவிந்திருக்கும். கார்த்திகை மாதம் அமாவாசை அன்று தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அன்று கடவுளர்களின் அருளாட்சி பூமியில் நிறைந்திருக்கும். கடவுளர்களின் அருளாட்சி நிறைந்த நாள். குறிப்பாக மகாலட்சுமி முழுமையாக அருள்பாலிக்கும் நாளாக தீபாவளி கருதப்படுகிறது. பல்வேறு ஆற்றல்கள் ஒரே இடத்தில் குவிவதால், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான திருப்பங்கள் ஏற்படும் நாள் இது.
நமது பிறப்புக்கு ஒரு தேவை உள்ளது. ஆன்மாவின் விருப்பம்தான் ஒவ்வொரு வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. ஆன்மாவின் ஆழ்ந்த விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலமாகவே நல்லாற்றல்கள் சமநிலைப்படும். தெய்வீக ஆற்றல்களை முழுவதும் நம் உடல் உள்வாங்கி, நமது ஆழ்விருப்பங்களை எளிமையாக நிறைவேற்றக்கூடிய நாட்களில் தீபாவளியும் ஒன்று.
மகாலட்சுமி முன்பு விளக்கு ஏற்றி, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்த இரவுகள் நம் எல்லாருக்கும் ஞாபகத்தில் இருக்கும். தீபாவளியின் சாராம்சமே இருட்டை அகற்றி ஒளியை ஏற்றுவதுதான். நமது உள்ளொளியைப் பெருக்கி, சனாதன க்ரியாவில் ஈடுபட்டு தெய்வங்களின் ஆசீர்வாதத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறுகிறோம்.
மகாலட்சுமிதான் நம்மை காப்பவர். அவர்தான் மாயா என்று அழைக்கப்படுகிறார். செல்வத்தின் கடவுள் அவர்தான். ஆன்மீகச் செல்வம், ஆரோக்கியச் செல்வம் இரண்டையும் வழங்குபவர் மகாலட்சுமி. சரியான நியமங்களுடன், தூய எண்ணத்தையும் ஆகுதியாக்கி மகாலட்சுமியை வணங்கினால் எல்லா செல்வமும் ஆசீர்வதிக்கப்படுவதோடு ஆன்மீக சித்திகளும் நமக்குக் கிடைக்கும்.
நம்மை உடல்ரீதியாக இந்த உலகத்தோடு பிணைத்திருப்பது மாயைதான். அதுதான் காலையிலிருந்து, இரவு வரை நம்மை பிணைத்துள்ளது. ஆசைக்கு முடிவே கிடையாது. ஆசைகளை வாழ்க்கை முழுவதும் நாம் சேகரித்துக் கொண்டே இருக்கிறோம். உடலிலிருந்து உயிர் வெளியேறும் வரை நாம் ஆசைகளை விடுவதேயில்லை. அதனாலேயே அடுத்த ஜென்மத்திலும் பிறந்து ஆசைகளுடன் கட்டுண்டு நாம் வலியோடு வாழ்கிறோம்.
உடல்ரீதியான எந்த அனுபவமும் தற்காலிகமானவை என்பதை மறக்கவேண்டாம். நீங்கள் எவ்வளவு சேர்க்கிறீர்களோ அந்த அளவு வலியும் உங்களுக்காக காத்திருக்கிறது. அதனால் உங்கள் புலன் அனுபவத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள். உங்களைப் படைத்த கடவுளுக்கு திரும்பக் கொடுக்க என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை யோசியுங்கள். பொதுச் சேவையிலும், தர்மகாரியங்களிலும் ஈடுபடுங்கள். அதனால் தீபாவளி அன்று மேலும் மேலும் செல்வத்தைக் கோரிக் கடவுளை வழிபடுவதை விட்டு, “செல்வத்தை எனக்குத் தாருங்கள். அதிலிருந்து விடுதலையையும் எனக்குத் தாருங்கள்” என்று பிரார்த்தியுங்கள். ஏனெனில், இகவாழ்வில் கிடைக்கும் எல்லாமும் தற்காலிகமானதே. நீங்கள் புலன்ரீதியாகக் கிடைக்கும் எல்லா ஆனந்தத்தையும் தாமரை இலை நீர்போல பட்டும்படாமல் அனுபவியுங்கள்.
தீபங்களின் திருவிழாதான் தீபாவளி. ஆனால் வருடத்திலேயே தீபாவளி இரவுதான் மிகவும் இருண்டதும்கூட. வாழ்வின் இரு பக்கங்களை தீபாவளி உங்களுக்குச் சொல்கிறது. அதனால் பொருள்மயமான, புலன்மயமான மயக்க இருட்டிலிருந்து ஆன்மீக ஒளியை இத்தீபாவளியில் பெறுங்கள்.
இந்த தீபாவளி உங்கள் இல்லத்திற்கு அனைத்து ஒளியையும் கொண்டு வரட்டும்.