ஆன்மிகம்

முழங்கிப் புறப்பட்ட பூவை பூவண்ணன்

என்.ராஜேஸ்வரி

நரசிம்ம ஜெயந்தி மே 2

முனிவர் சாபம் பெற்ற பெருமாளின் துவார பாலகர்களான ஜெய விஜயர்களே இரண்யனும் இரண்யகசிபுவும். இந்தப் பெயர்களில்தான் அவர்கள் நரசிம்மாவதாரத்தில் தோன்றினார்கள். விஷ்ணுவின் ராமாவதாரத்தில் அவர்கள் ராவணனும் கும்பகர்ணனுமாய்ப் பிறந்தார்கள். அவர்களே கிருஷ்ணாவதாரத்தில் தந்த வக்த்ரனும் சிசுபாலனாகவும் பிறந்தார்கள் என்கிறது பாகவதம்.

விஷ்ணு, கணத்தில் தோன்றி அருள்பாலித்தது நரசிம்ம அவதாரத்தில்தான். அதனால் ஆண்டாளும் நரசிம்மருக்கு என்றே ஒரு பாசுரம் பண்ணி இருக்கிறாள். “மாலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்” எனத் தொடங்கும் பாடல் அது. “இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிளவாய் முன் கீண்டாய் குடந்தை கிடந்த என் கோவே” என்கிறது பெரியாழ்வார் பாசுரம்.

பசியால் அழும் குழந்தை குரல் கேட்டு, போட்டது போட்டபடி பதறிக்கொண்டு ஓடி வரும் தாயைப் போன்ற அன்புள்ளம் கொண்ட தயாபரன் ஸ்ரீ நரசிம்மன். தன் பக்தன் பிரகல்லாதன் என்ற குழந்தையைப் பாடாய்ப் படுத்தும் இரண்யனை வதம் செய்யத் திருவுளம் கொண்டான் எம்பெருமான்.

`நாராயணாய’ என்று சொல்லாதே `இரண்யாய` என்று சொல்லி உயிர் பிழைத்துப் போ என்கிறான் இரண்யன் பிரகல்லாதனிடம். பிரகல்லாதன் அதனை மறுக்கிறான். எங்கே உன் நாராயணன் என இரணியன் கோபத்துடன் கேட்க, என் ஐயன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று விஷ்ணுவின் விசுவரூபத்தைப் புரிய வைக்க முயலுகிறான் பிரகல்லாதன். பக்தனின் இந்த வார்த்தையைக் கேட்டுத் துணுக்குற்றது விஷ்ணுதான். வாயு வேகம் மனோ வேகம் என்பார்கள். எந்தத் திக்கை நோக்கி அந்தக் குழந்தை கை காட்டும் என்பது தெரியாது. பக்தன் வாக்கைக் காப்பதற்காகத் தூணிலும் துரும்பிலும் வியாபித்தான் எம்பெருமான்.

வெடித்துச் சிதறிய தூண்

இங்கே இருப்பானா உன் நாராயணன் என்றபடியே ஒரு தூணைச் சுட்டிக்காட்டிக் கேட்டான் இரண்யன். அப்போது தூண் பிளக்கவில்லை. மீண்டும் உச்சகட்ட கோபத்துடன் கேட்டான் இந்தத் தூணில் இருப்பானா உன் நாராயணன்? என்று தன் கதையால் தொட்டுக் கேட்டபோதும் தூண் பிளக்கவில்லை. ஆம் என்று பிரகல்லாதன் தலை ஆட்டிய கணம், வெடித்துப் பிளந்தது தூண். எட்டுக் கைகள், இரண்டு கால்கள், கோபமுற்ற சிங்க முகம் ஆகியவற்றுடன் தோன்றினான் நாராயணன். உலகம் கிடுகிடுத்தது. வானம் இடி மின்னலுடன் மழை பொழிந்தது. சூறாவளி சுழன்று வீசியது.

மணிவண்ணன் மாலை

பெருமாளுக்குத் துளசி மாலை விசேஷம் என்பார்கள். தாயார் அவருக்கு இட்டு மகிழ்ந்த மாலைகள் ஏராளம். மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, சம்பங்கிப்பூ, முல்லைப்பூ, இருவாட்சிப்பூ என சூடிக் கொடுத்த மாலை உட்பட அவை பலவகைப்படும். ஆனால் பெருமாள் தானே விரும்பிப் போட்டுக்கொண்ட மாலை குடல் மாலை. இரணியனின் நீண்ட குடல் அது.

`மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய` என்று ஆண்டாள் கூறியது போல வீரத்தின் பொருளான எம்பெருமான், இரண்யனின் குடலை உருவி மாலையாகச் சூட்டிக்கொண்டான். அது அந்தி நேரம். அவதாரம் எடுத்ததோ அஹோபிலம் மலைக் காடு. அங்கே அரக்கன் இரணியனை மாய்த்த எம்பெருமான் ஹூங்காரம் எழுப்பினான்.

அன்புப் பார்வை

பிறகு எம்பெருமான் பார்வை பிரகல்லாதனை நோக்கித் திரும்பியது. பார்வையில் உஷ்ணம் தணிந்து, குளுமை பரவியது. தாய்ப் பாசம் மீதுற பிரகல்லாதன் அருகே செல்ல விழைந்தான் எம்பெருமான். சுற்றி இருந்த தேவாதிதேவர்களும் லட்சுமி தேவியும் அவரது உக்கிர உருவைக் கண்டு நடுநடுங்கினார்கள்.

பிரகல்லாதனை நோக்கித் திரும்பிய அவரது பார்வையில் கனிவு ததும்பியது. பிரகல்லாதனும் நரசிம்மரின் அன்புப் பார்வைக்கு இணையான பார்வை கொண்டு நோக்க, பக்தனும் பரந்தாமனும் பரஸ்பரம் கட்டுண்டார்கள். விஷ்ணுவின் குறுகிய கால அவதாரம் குன்றின் விளக்காய் ஒளிர்கிறது.

SCROLL FOR NEXT