தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு கதலி நரசிங்கப் பெருமாள் திருக்கோவிலுக்குப் பாண்டிய மன்னர் காலத்தில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு திருமலை நாயக்கர் காலத்தில் பல மண்டபங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
தல வரலாறு
இந்தத் திருக்கோவிலின் மூலவர் கதலி நரசிங்கப் பெருமாள். இவர் சிலையுருவாக நிற்கும் இடம், முன்னொரு காலத்தில் நாவல் மரங்களாலும் சம்பைப் புல்லாலும் சூழப்பட்ட புதர்களாய் இருந்துள்ளது. அங்கே வசித்துவந்த ராஜகம்பளத்து நாயக்கமார்களின் மாட்டுத் தொழுவத்தின் அருகில் இருந்த நாவல் மரத்தின் அடியில் புற்று ஒன்று இருந்தது.
அப்புற்றில் குடிகொண்டிருந்த நாகப்பாம்பு கறந்த பாலைப் பருகிவிட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த புற்றை மண்வெட்டியால் வெட்டியபோது அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாகத் தல வரலாறு கூறுகிறது. பதறிய மக்கள் தங்களது தவறை உணர்ந்து புற்றை அகற்றிவிட்டுப் பார்க்கும் போது அங்கு சுயம்பு வெளிபட்டது. வெளிப்பட்ட அந்த சுயம்புவை இன்றும் கர்ப்பக் கிரகத்தில் காணலாம்.
தல சிறப்பு
இக்கோவில் முன் கொடிமரம் அமைந்துள்ளது. பைரவர், ஆஞ்சநேயர், விஸ்வசேனர், துவார பாலகர்கள் சிலா விக்கிரங்கள் அமைந்துள்ளன. கருடாழ்வார், கதலி நரசிங்க பெருமாள், செங்கமல தாயார் ஆகியோருக்குத் தனித்தனியாக சன்னிதிகளும், தல விருட்சமாக நாவல் மரமும் உள்ளன.
பூஜைகள்
கால சந்தி பூஜை காலை ஒன்பது மணிக்கும், சாயரட்சை பூஜை இரவு 7 மணிக்கும் என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினந்தோறும் காலை 7மணி முதல் பிற்பகல் 12மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8மணி வரையிலும் நடை திறக்கப்படுகிறது. சித்திரை திருவிழா, வைகுண்ட ஏகாதசி மற்றும் புராட்டாசி மாதம் நான்கு வார சனிக்கிழமைகளிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.