ஆன்மிகம்

விவேகானந்தர் மொழி: நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் பொய்

செய்திப்பிரிவு

துன்பங்களை நான் அறிவேன். அவை ஏராளம். நம்முள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஊக்கம் குன்றி, துணிவை இழந்து துன்ப நோக்கு உடையவர்களாகிவிடுகிறோம். நேர்மையிலும், அன்பிலும், கம்பீரமாகவும், மேன்மையாகவும் உள்ள அனைத்திலும் நம்பிக்கை இழந்துவிடுகிறோம்.

ஆக, வாழ்வைப் புதிதாகத் தொடங்கும்போது மன்னிப்பவர்களாக, அன்புடையவர்களாக, எளிமையானவர்களாக, கள்ளம் கபடம் அற்றவர்களாக இருந்த மக்கள் வயது முதிரும்போது பொய்மையே பூண்ட போலிகளாகிவிடுவதைக் காண்கிறோம். அவர்களுடைய உள்ளங்கள் சிக்கல் நிறைந்தவை ஆகிவிடுகின்றன. பார்வைக்கு அவர்கள் மிகவும் அமைதியாக இருக்கலாம். அவர்கள் சீற்றம் கொள்வதில்லை. அவர்கள் ஒன்றும் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் சீற்றம் கொள்வதும் பேசுவதும் அவர்களுக்கு நல்லது.

நமது குழந்தைப் பருவம் முதலே, காலமெல்லாம், நமக்கு வெளியேயுள்ள ஏதோ ஒன்றின்மீது பழி சுமத்தவே நாம் முயன்றுவருகிறோம். நாம் எப்போதும் பிறரைத் திருத்தத்தான் கங்கணம் கட்டுகிறோமே தவிர, நம்மையே திருத்திக்கொள்ள முயல்வதில்லை. நமக்குத் துயரம் வந்தால், ஆ! இது என்ன பேய் உலகம்! என்கிறோம். பிறரைச் சபிக்கிறோம். என்ன முட்டாள் பைத்தியங்கள் என்கிறோம். நாம் உண்மையிலே அவ்வளவு நல்லவர்கள் என்றால் அத்தகைய பேயுலகில் நாம் ஏன் இருக்க வேண்டும்? இது பேய்களின் உலகம் என்றால் நாமும் பேய்களே.

இல்லாவிடில் நாம் ஏன் இங்கே இருக்க வேண்டும்? இந்த மனிதர்கள் எவ்வளவு சுயநலம் பிடித்தவர்கள் என்றால் அவர்களது கூட்டத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும் சற்றே சிந்தியுங்கள். நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம். உலகம் கெட்டது. நாம் நல்லவர்கள் என்று சொன்னால் அது பொய். அப்படி ஒருபோதும் இருக்கமுடியாது. அது நமக்கே நாம் சொல்லிக்கொள்ளும் ஒரு பெரும் பொய்.

கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடம் இதுவே. வெளியிலுள்ள எதையும் சபிக்காமலும் வெளியிலுள்ள ஒருவர் மீதும் பழி சுமத்தாமலும் இருக்கத் தீர்மானியுங்கள். மனிதனாக இருங்கள். எழுந்து நில்லுங்கள். பழியை உங்கள் மீதே சுமத்திக்கொள்ளுங்கள். எப்போதும் அதுவே உண்மை என்பதை அப்போது காண்பீர்கள். உங்களையே வசப்படுத்திக் கொள்ளுங்கள்.

நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும். பிறரைக் கவனிப்பதைச் சிறிது காலம் விட்டுவிட வேண்டும்.

SCROLL FOR NEXT