அரசமர சுயம்பு விநாயகர்
சென்னை: சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலவிநாயகர் கோயிலில், 38-வது ஆண்டு லட்சார்ச்சனை விழா, நேற்று தொடங்கியது. சென்னை சாலிகிராமம், பரணி காலனியில் ஸ்ரீபால விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று லட்சார்ச்சனை விழா தொடங்கியது.
இவ்விழா ஜன. 26-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதுதொடர்பாக கோயில் அறங்காவலரும், ஸ்ரீ பாலவிநாயகர் சேவா டிரஸ்ட் தலைவருமான குருஜி சுப்பிரமணியன் கூறியதாவது: 1983-ம் ஆண்டு நானும் எனது நண்பரும் சேர்ந்து விநாயகருக்கு கோயில் கட்டத் தீர்மானித்தோம். ஒரு குடிசை அளவில் கோயில் எழுப்பி, 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்சார்ச்சனை தொடங்கப்பட்டது.
2000-ம் ஆண்டு ராஜ கோபுரம், சுப்பிரமணியர், துர்கை, லட்சுமி நாராயணர் விக்கிரகங்கள், காஞ்சி மகாஸ்வாமிக்கு நவீன சிலை உள்ளிட்டவற்றை பிரதிஷ்டை செய்தோம்.
ஏகதின லட்சார்ச்சனையின் 14-ம் ஆண்டு சமயத்தில் (2002-ம் ஆண்டு) அரசமரத்தில் சுயம்புவாக விநாயகர் தோன்றினார். அன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரசமர சுயம்பு விநாயகருக்கு ராகுகால திரிசதி அர்ச்சனை செய்து வருகிறோம்.
குருஜி சுப்பிரமணியன்
2004-ம் ஆண்டு கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. 38-வது லட்சார்ச்சனை விழா ஜன.20-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கியது. ஜன. 21-ம் தேதி (ஒருநாள் மட்டும்) மாலை 4.30 மணி அளவில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒரு லட்சம் ஆவர்த்தி நடைபெறும்.
ஜன.23-ம் தேதி ஸ்ரீஸூக்த ஹோமமும், ஜன.26-ம் தேதி மேள வாத்தியங்கள் முழங்க, கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ரத உற்சவமும் நடைபெறும் என்றார். கூடுதல் விபரங்களுக்கு 044-23652017, 9940053464 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.