உண்மையாக, இயல்பாக இறைவனைத் தேடுவதே பக்தி யோகம். இந்தத் தேடல் அன்பில் தொடங்கி, அன்பில் தொடர்ந்து, அன்பிலேயே நிறைவுறுகிறது. இறைவனிடம் தீவிர அன்பு நம்மிடம் கணப்பொழுது தோன்றினால் போதும், அது அழிவற்ற முக்தியைத் தந்துவிடும்.
நாரதர் தமது பக்தி சூத்திரங்களில், `இறைவனிடம் நாம் பூணும் ஆழ்ந்த அன்பே பக்தி’ என்கிறார். அதைப் பெறுகின்ற ஒருவன் அனைவரையும் நேசிக்கிறான். யாரையும் வெறுப்பதில்லை.
என்றென்றைக்குமாகத் திருப்தியுற்று விடுகிறான். உலகப் பொருட்களை அடைவதற்குரிய ஒரு சாதனமாக இந்த அன்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் ஆசைகள் இருக்கும்வரை இத்தகைய அன்பு வராது.
பக்தி நமது ரிஷிகளின் முக்கியக் கருத்தாக இருந்து வந்துள்ளது. பக்தி ஆச்சாரியர்களான சாண்டில்யர், நாரதர் போன்றோர் மட்டுமின்றி, ஞானத்தையே சிறப்பித்துப் பேசுபவர்களும், வியாச சூத்திரங்களின் உரையாசிரியர்களுமான ஆச்சாரியர்களும் பக்தியைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இறைவனை அடைவதற்குரிய நெறிகளில் பக்தி எளிமையானதும் மனித இயல்புக்கு ஏற்றதுமான நெறியாகும். இது பக்தி நெறியினால் வருகின்ற பெரியதொரு நன்மை. ஆனால் பக்தியின் ஆரம்ப காலங்களில், அதாவது கீழ்நிலைகளில், அது அருவருக்கத்தக்க கொள்கைவெறியாக மாறித் தாழ்ந்து போகின்ற ஆபத்தும் பலவேளைகளில் ஏற்பட்டுவிடுகிறது.
இந்து மதத்திலும் சரி, முகமதிய, கிறிஸ்தவ மதங்களிலும் சரி, மதவெறியர்களின் கூட்டம், பக்தியின் கீழ்மட்ட நிலைகளில் இருப்பவர்களிலிருந்தே உருவாகியிருப்பதைக் காணலாம்.
இறைவனை மன ஏக்கத்துடன் நாடும்போதுதான் உண்மையான பக்தி உண்டாகிறது. உண்மையான பக்தி அது யாரிடம் உள்ளது? இதுதான் கேள்வி. இறைவனைத் தவிர மற்ற அனைத்தையும் நாம் விரும்புகிறோம். உங்களைச் சுற்றி நீங்கள் காண்பது மதமே அல்ல.
`என் மனைவி உலகம் முழுவதிலுமிருந்தும் சாமான்களை வரவழைத்து வரவேற்பறையில் வைத்திருக்கிறாள். இப்போதெல்லாம் ஜப்பானியப் பொருள் சிலவற்றை வைத்திருப்பதுதான் நாகரிகம். எனவே அழகிய ஜப்பான் ஜாடி ஒன்றையும் வாங்கி அங்கே வைக்கிறாள்’ பெரும்பாலோருக்கு மதமும் இத்தகையதாகவே உள்ளது.
இன்ப நுகர்ச்சிக்கான எல்லாம் அவர்களிடம் உள்ளன. ஆனால் சிறிது மத வாசனையும் சேராவிட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது. சமூகம் அவர்களைக் குறை கூறும், எனவே சிறிது மதமும் இருக்க வேண்டும். இன்றைய உலகில் மதத்தின் நிலை அதுவே.