பிரம்மா, படைக்கும்போதே அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பத் தலை எழுத்தை எழுதி அனுப்புகிறார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சிவனின் அடி முடி காணும் போட்டியில் இவர் பொய் சொன்னதால், இவரது தலையெழுத்தை சிவன் தீர்மானித்தார். கோயில் இல்லாக் கடவுளாக இருக்கும்படி சபித்தார். ஆனாலும் பிரம்மாவுக்குப் பல சிவன் கோயில்களில் சிறு மாடச் சன்னிதிகள் உண்டு.
திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தனிச் சன்னிதியில் உயரமாக கம்பீரமாக வீற்றிருக்கிறார் பிரம்மா. இவரை வணங்கினால் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றி எழுதுவார் என்ற ஐதீகம் நிலவுகிறது. சிவனுக்கு இங்கே திருப்பெயர் பிரம்மபுரீஸ்வரர். பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி எழுதியதால் இப்பெயர் பெற்றார் என்கிறது தல புராணம்.
ஐந்து நான்கானது
சிவனுக்கும், பிரம்மனுக்கும் ஆதி காலத்தில் ஐந்து தலை இருந்தனவாம். தானும் சிவனும் சமம் என்ற மமதையில் இருந்திருக்கிறார் பிரம்மன். இதனை அறிந்த சிவன், பிரம்மனின் ஐந்தாம் தலையைப் பூக்கொய்வது போலக் கிள்ளி எடுத்துவிட்டார். இதனால் அவரது படைப்பாற்றல் நின்று போனது.
பன்னிரு லிங்கம்
இந்தத் துன்பம் தீர திருப்பத்தூரில் பன்னிரு லிங்கங்களை நிறுவி வழிபட்டார் பிரம்மா. அந்தப் பன்னிரு லிங்கங்கள்: பிரம்மபுரீஸ்வரர், பழமலைநாதர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டுக நாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ் வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்திநாதர், சப்தரிஷிஸ்வரர், சுத்த ரத்தினேஸ்வரர்.
பிரம்மனின் பூஜையால் மகிழ்ந்த சிவன் படைக்கும் ஆற்றலைத் திருப்பித் தந்தார். அதோடு வரம் ஒன்றையும் வழங்கினார். பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அவரே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதுதான் அதுவரையிலான விதி. ஆனால், தான் எழுதிய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றக்கூடிய வல்லமையைத் திருப்பட்டூரில் பிரம்மன் சிவனருளால் பெற்றார். “விதியை மாற்றிக்கொள்ளும் விதியிருப்பின் விதி கூட்டி அருள்க” என்று சிவன் வரமளித்ததாகத் தல புராணம் தெரிவிக்கிறது.
நவக்கிரகங்களின் குரு
நவக்கிரகங்களில் உள்ள குருவுக்கு அதிதேவதை பிரம்மா. இவரது அருட்பார்வை பெற்றால், குரு பார்க்கக் கோடி நன்மை விளையும் என்பதற்கு ஏற்பக் கோடி நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பதஞ்சலி முனிவர், சப்த மாதாக்கள், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, முருகன், வள்ளி, தெய்வானை, கஜ லட்சுமி, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னிதிகள் உள்ளன.
பக்தர்கள் தங்கள் வருகையைப் பதிவுசெய்ய வேண்டிய இடம் சண்டிகேஸ்வரர் சன்னிதிதான். இவரே நாம் வந்து போனதைச் சிவனிடம் சொல்லக்கூடியவர். இவரது சன்னிதி அருகே செல்லும்பொழுது அமைதியாகச் செல்ல வேண்டும்.
சன்னிதியின் வாசல் துவாரத்தில் மேலே தொட்டு ‘கொம்பைத் தொட்டேன்` (துவஜஸ்தம்பத்தைத் தொட்டேன்) என்று மெதுவாகச் சொல்ல வேண்டும். பின்னர் வாயிலின் பக்கவாட்டுச் சுவரைத் தொட்டு `கொடியைத் தொட்டேன்` - என்று முணுமுணுப்பாய்ச் சொல்ல வேண்டும்.
வாயிலின் கீழ் பகுதியைத் தொட்டு `கோபுர வாசற்படியைத் தொட்டேன்` எனக் கூற வேண்டும். இடப்புறப் பகுதியைத் தொட்டு, `சேவிச்சுப் போனேன்` எனக் கூற வேண்டும். `சிவனுக்குச் சொல்` என்று மூன்று முறை சொல்லிக்கொண்டே மூன்று முறை மென்மையாகக் கை விரல்களால் சிட்டிக்கை இட வேண்டும். அனைத்து சிவத்தலத்திலும் இவ்வாறு செய்து சிவனருள் பெறலாம்.