ஆன்மிகம்

தெற்கே ஒரு காளஹஸ்தி

ஆர்.செளந்தர்

தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் புண்ணிய நதியான சுரபி நதி முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

தல வரலாறு

கி.பி.1689-ம் ஆண்டு முதல் 1706-ம் ஆண்டு வரை மதுரை நாயக்கர் அரசியாக இருந்த ராணி மங்கம்மாளுக்கும், திருவிதாங்கூர்(கேரளா) மன்னர் ரவிவர்மனுக்கும் எல்லைத் தகராறு காரணமாகப் போர் நடைபெற்றது. போரின்போது கெங்கப்ப நாயக்கர், சாமிநாத நாயக்கர், விசுவநாத நாயக்கர் ஆகியோர் படைத் தளபதிகளாகவும், பிச்சை பிள்ளை என்பவர் கணக்குப் பிள்ளையாகவும் இருந்துள்ளனர். பிச்சை பிள்ளை திருப்பதிக்கு அருகில் உள்ள காளஹஸ்தியில் எழுந்தருளியிருக்கும் காளாத்தீஸ்வரரின் தீவிர பக்தர்.

மகாசிவராத்திரி அன்று ஆண்டுக்கு ஒரு முறை அங்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். முதுமைப் பருவமெய்திய பிச்சைக் கணக்கரால் காளஹஸ்தி சென்று இறைவறை வழிபட முடியவில்லை, மகாசிவராத்திரி நெருங்கியது. தன்னால் காளஹஸ்தி செல்ல முடியவில்லையே என மனம் வருந்திப் பல நாட்கள் உண்ணா நோம்பு இருந்தார். பிச்சைக் கணக்கரின் வேண்டுதலை ஏற்று இறைவன் கனவில் தோன்றி அந்தணக் குழந்தை வடிவில் காட்டூரில் அமைந்துள்ள வில்வ வனத்தின் வெள்ளை அரளி பூத்திருக்கும் மரத்தடியில் என்னை நீ கண்டு தரிக்கலாம் என்றார். விரும்பும் இடத்தில் கோயில் அமைத்து வழிபடலாம் என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் பிச்சைக் கணக்கர் தான் கண்ட கனவினைக் காட்டூர் மக்களிடம் கூறினார். வெள்ளை அரளி பூத்திருந்த மரத்தடியில் பார்த்தபோது இறைவன் லிங்க வடிவில் காட்சி தந்தார். ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி சிவபெருமானை வண்டியில் எழுந்தருளச் செய்து ஊருக்குள் கொண்டுவந்தனர். இடையில் வண்டியில் அச்சு முறிவு ஏற்பட்டது. எவ்வளவோ முயன்றும் வண்டியை அவ்விடத்திலிருந்து நகர்த்த முடியவில்லை. மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.

அப்போது அருகில் ஆறுமுகர் உருவில் முருகன் அவ்விடத்தில் எழுந்தருளி இருந்ததைப் பார்த்த மக்கள் பரவசப்பட்டனர். பின்னர் அனைவரும் ஒன்று கூடி அவ்விடத்திலேயே கோவில் அமைப்பது என முடிவு செய்தனர். தற்போது கோவில் அமையப்பெற்றுள்ள இடத்திலேயே திருக்காளாத்தீஸ்வரருக்கும் ஆறுமுகப்பெருமானுக்கும் வேத மந்திரம் முழங்க திருக்கோவில் அமைத்தனர்.

அம்மன் வந்த கதை

ஒரு வெள்ளிக்கிழமை அன்று பிச்சைக் கணக்கர் கனவில் தோன்றி திருக்காளாத்தீஸ்வரர் முல்லை பெரியாறு ஆற்றில் நுங்கும் நுரையுமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். வெள்ளத்தில் மூங்கில் கூடையில் அமர்ந்து அம்மன் பவனி வருவாள் என்று கூறி மறைந்தார். சில நாட்களிலேயே பெரும் வெள்ளம் ஓடியது. இறைவன் அருளியபடி அம்மன் சிலையுடன் செல்வ வினாயகர் சிலையும் ஆற்று வெள்ளத்தில் மிதந்தபடி மூங்கில் கூடையில் எழுந்தருளினார்கள். அப்போது அம்மன் சிலை கரை ஒதுங்கியது.

திருக்கோவில் அமைப்பு

கோவில் உட்பிராகாரத்தில் 200-க்கும் மேற்பட்ட கல்தூண்கள் உள்ளன. கோவிலின் முன்புறம் 16 தூண்கள் கொண்ட அலங்கார மண்டம் உள்ளது. மா, பலா, தென்னை கொண்ட நந்தவனமும், கிழக்குப் பக்கம் தெப்பமும் அமைந்துள்ளது. கோவில் முன்புறத்தில் விஷராஜா என்ற சிறிய கோவில் உள்ளது. விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆற்றில் மூழ்கி ஈரத்துணியுடன் விஷராஜா சன்னிதியைச் சுற்றி வந்தால் நோயின் தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ராஜகோபுரம் ஐந்து கலசங்களாகக் கட்டப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் கொடி மரமும் அதனையடுத்து அதிகார நந்தியும் அதன் தேரில் திருக்காளாத்தீஸ்வரர் சன்னிதியும் அமைந்துள்ளன. நந்திக்கு எதிரே 12 ராசிகள் அதற்குரிய நட்சத்திரங்கள், மிருகங்கள், நடுவில் வாஸ்து புருஷர் பொறிக்கப்பட்டுள்ள காலச் சக்கரம் அமைந்திருப்பது தனிச்சிறப்பாக உள்ளது. வடபுறம் முருகன் சன்னிதி அதற்கு அடுத்து ஞானாம்பிகை அம்மன் சன்னிதி, காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் சன்னிதிகளுக்கு நடுவில் ஆறுமுகர் சன்னிதி உள்ளதால் முருகன் சோமாஸ்கந்தராகிறார்.

முருகன் சன்னிதி முன்புறம் நவவீரர்கள் எனப்படும் ஆறுபடை தளபதிகள் சிலைகள் உள்ளன. துவார பாலர்கள் எனப்படும் காவலர்களும் முருகனுக்கு அரணாக உள்ளனர். வலது பக்கம் வடக்காக துர்க்கை அம்மன் அதனையடுத்து சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. நாள்பட்ட காய்ச்சல், தீராத வியாதி உள்ளவர்கள் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் சுரதேவரை வழிபாடு செய்தால் சகலநோய்களும் குணமாகி விடும் என பக்தர்களுக்கு நம்பிக்கை உள்ளது.

இராகு-கேது தோஷ நிவர்த்தி

இராகு, கேது தலமான இங்கு ஞாயிறு தோறும் இராகு காலத்தில் சர்ப்பதோஷ நிவர்த்தி, சாந்தி பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் கலந்துகொண்டு பரிகார சாந்தி செய்து கொள்கின்றனர். ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நிகரான ஸ்தலமாகக் கருதப்படுவதால் இது தென் காளஹஸ்தி எனப் போற்றப்படுகிறது. இங்கு வந்து வழிபடுவோருக்கு ஜாதகத்தில் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், இராகு திசை, கேது திசை நடந்தால், ராகு புத்தி, கேது புத்தி நடந்தால் களஸ்த்திரதோஷம், புத்ர தோஷம் இருந்தால் இத்தலத்தில் பரிகாரம் செய்து தடை நீங்கி வளம் பெறுவர் என்பது ஐதீகமாக உள்ளது.

SCROLL FOR NEXT