கடவுளை எப்படிக் காண முடியும் என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? “அவர் என் கனவில் வந்தார்” என்று சிலர் பதில் கூறலாம். இன்னும் சிலர் “ ஏழைகளின் சிரிப்பில் அவரைக் கண்டேன்” என்று சொல்லலாம். இப்படி ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் கடவுளைக் கண்டிருக்கலாம். உண்மையில் கடவுள் நம் மீது அன்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் அல்லவா? அதையேதான் அவர் நம்மிடமும் திரும்ப எதிர்பார்க்கிறார்.
தன்னிடம் அன்பு செலுத்துகிறவர்களுக்கு அவர் பல்வேறு வழிகளில், வாழ்வின் எல்லாக் கணங்களிலும் தரிசனம் தந்து நம் மீது கரிசனமாக இருக்கிறார்.
ஒருமுறை இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது “எது தலைசிறந்த கட்டளை?” என்று அவரிடம் ஒருவர் கேட்டார். அதற்கு இயேசு, “உன் கடவுளாகிய பரலோகத் தந்தை மீது உன் முழு இதயத்தோடு அன்பு காட்ட வேண்டும்” என்றார்(மத்தேயு 22:37). ஆனால், கடவுள்மீது மக்கள் அன்பு காட்ட வேண்டுமென்றால் முதலாவது அவரைப் பற்றித் தெளிவாகவும் திருத்தமாகவும் தெரிந்துகொள்ள வேண்டும்.” “ உலகைப் படைத்துக் காக்கும் பரலோகத் தந்தையையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்” என்கிறார் யோவான். பலர் தங்கள் வாழ்நாளில் பரலோகத் தந்தையை முழுமையாக அறிந்துகொள்ள தவறிவிடுகின்றனர். கடவுள் நம் கையில் கொடுத்துச் சென்ற பொக்கிஷத்தை மறந்துவிட்டனர்.
வழிகாட்டும் வார்த்தைகள்
பிரபஞ்சத்தின் தந்தையைப் பற்றிய அறிவைப் பெற உதவும் முக்கிய நூல் பைபிள். “ வேத வசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன. அவை கற்பிப்பதற்கும், கடிந்துகொள்வதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி கண்டித்துத் திருத்துவதற்கும் பயனுமுள்ளவையாக இருக்கின்றன”(2 தீமோத்தேயு 3:16) என்று பைபிளில் மனிதப் பிரச்சினைகளுக்கு இல்லாத தீர்வே இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார் தீமோத்தேயு.
இன்று பலருக்கும் பைபிள் சுலபமாகக் கிடைக்கிறது. பைபிள் மூலம் கடவுளைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொள்ள, பெரியவர் முதல் சிறியவர்வரை அனைவருக்கும் அதில் எளிய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. எனவே, நாம் பைபிளைக் கற்றுக்கொள்ள அதனைப் பகுதி பகுதியாக வாசிக்கத் தொடங்குவது வாழ்நாள் கடமையாகும்.
பிள்ளைகளுக்குக் கட்டளை
“பிள்ளைகளே, நம் தந்தையாகிய கடவுள் விரும்புகிறபடி உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது; உன் தகப்பனுக்கும் உன் தாய்க்கும் மதிப்புக் கொடு” என்பது முதலாம் கட்டளை. அந்தக் கட்டளையுடன் ஒரு வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. “நீ சீரும் சிறப்புமாக இருப்பாய், பூமியில் நீண்ட காலம் வாழ்வாய்” என்பதே பைபிள் வழியே தந்தை உங்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதி. அதேபோல் பெற்றோர்களைப் பார்த்து “ தகப்பன்மார்களே, உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்; மாறாக, பரலோகத் தந்தைக்கு ஏற்ற முறையில் அவர்களைக் கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்த்து வாருங்கள்” (மத்தேயு 28:19) என்று வழிகாட்டுகிறது.
பரலோகத் தந்தையின் மீது நாம் அன்பு செலுத்துதல் என்பது அவரது வார்த்தையின்படி நடப்பதே. அதை வேதாகமம் நமக்கு வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே வருவதை பைபிளை வாசிக்கும்போது உணரமுடியும்.
சூழல் இல்லையா?
ஆனால் பலருக்கு வாசிக்கும் சூழல் அமைவதில்லை. உதாரணமாக, சில குழந்தைகள் அன்பின் வாசம் இல்லாத சூழ்நிலையில் வளர்ந்திருக்கலாம், பெற்றோரின் பாசத்தையே பெறாமல் இருந்திருக்கலாம். பல பெற்றோர்கள் பொருள் தேடுவது ஒன்றே வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருக்கலாம். இதுபோன்ற சூழலில் வாழ்பவர்களுக்கும் வளர்ந்தவர்களுக்கும் கடவுளை ஓர் அன்புள்ள தந்தையாகப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.
இன்னும் அநேகருக்குப் போதுமான கல்வியறிவு கிடைக்காததால் பைபிளை வாசிக்க முடியாமல் போகலாம். கடவுளை நேசிப்பதற்கும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கும் சிலருடைய சூழ்நிலைகள் தடையாக இருக்கலாம் என்பதை இயேசுவும் ஒத்துக்கொண்டார். ஆனால் சில தடைகள் மனிதப் பார்வையில் மலைபோல் தோன்றினாலும் “கடவுளால் எல்லாமே முடியும்” என்றும் தம் சீடர்களுக்கு இயேசு நினைவுபடுத்தினார்.
கடவுள் தரும் வாய்ப்பு
பைபிளை வாசிக்க முடியாதவர்களும் கூடக் கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். “கடவுளுடைய படைப்புகளைக் கண்ணாரக் காண்பதன் மூலம்; அவற்றுக்குத் தீங்கிழைக்காமல் நேசிப்பதன் மூலம்”(ரோமர் 1:20) அது சாத்தியம் என்கிறது ரோமர் புத்தகம். அதுமட்டுமல்ல, “பரலோகத் தந்தைக்கும் நம் ஒவ்வொருவரின் மனதில் என்ன இருக்கிறது என்பது நன்றாகவே தெரியும். நீ நினைக்கிற அனைத்தையும் அவர் புரிந்துகொள்வார். நீங்கள் உதவிக்குத் தந்தையிடம் சரணடைந்தால் அவர் பதில் தருவார்” என்று நாளாகமம் (28:9) சான்று பகர்கிறது.
எனவே, தன்னைப் பற்றி அறிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் பரலோகத் தந்தை ஒரேமாதிரியான வாய்ப்பை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை; ஆனால் நல்ல இதயம் படைத்தவர்களுக்கு நிச்சயம் ஒரு வாய்ப்பு கிடைக்கும்படி செய்வதாக உறுதியளிக்கிறார்.
அதுமட்டுமா, தம்மைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இறந்து போனவர்களுக்கும்கூடப் பரலோகத் தந்தை இறுதி வாய்ப்பு அளிப்பார்;
ஆம், “நீதி தவழும் புதிய உலகில் அவர்களை உயிரோடு எழுப்பித் தம்மைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு கொடுப்பார்” என்று அப்போஸ்தலர் (24:15) புத்தகம் திடமாக அறிவிக்கிறது. நீங்கள் கடவுள் தரும் கடைசி வாய்ப்பையா பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்? இனியும் தயங்காமல் உங்கள் கையிலிருக்கும் பைபிளை எடுத்து வாசிக்கத் தொடங்குங்கள். அதன்படி வாழ்வை நடத்திச் செல்லுங்கள். நீங்கள் கடவுளைக் காண்பீர்கள்.