பெருமாள் என்றாலே திருமலை வாசனான ஸ்ரீநிவாசப் பெருமாள் தான் உடனடியாக நினைவிற்கு வருவார். திருமலையில் பெருமாளுக்கு இணையாகப் பிரசித்தி பெற்றது அவருக்கான சுப்ரபாதம். இந்த சுலோகம் தோன்றிய விதம், இதனைப் பெருமாள் கோயில்களில் காலையில் பாட வேண்டிய காலக்கிரம நிர்ணயம் ஏற்பட்ட விதம் ஆகியவற்றைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.
மாதந்தோறும் பெருமாள் கோயில்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் பல கோயில்களில் நடைபெறும் வைபவங்கள் இப்புத்தகத்தில் விளக்கத்துடன் பட்டியலிடப்பட்டுள்ளன. பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி, திருப்பதி பிரம்மோத்ஸவம், கருட சேவை, கைசிக மற்றும் வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, மாசி மகம் ஆகிய விழாக்கள் குறித்த விளக்கங்கள் மிகவும் பலனுள்ளவை. பவித்ரோத்ஸவம் பற்றிய விளக்கம் அருமை.
நவக்கிரகங்களினால் ஏற்படும் நன்மைகளையும் பெருமாளே அருள்வார் என்பது வைணவ சம்பிரதாயம். விஷ்ணுவின் அவதாரங்கள் மற்றும் அதற்குரிய நவக்கிரகங்கள் ஆகியவற்றை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ராமன் – சூரியன், கிருஷ்ணன் – சந்திரன், நரசிம்மர் – செவ்வாய், கல்கி – புதன், வாமன – வியாழன், பரசுராமன் – சுக்கிரன், கூர்மம் – சனி, வராஹ – ராகு, மத்ச்ஸய அவதாரம் - கேது, பலராம அவதாரம் – குளிகன் போன்றவை அரிய தகவல்கள். புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கும் பெருமாளின் படங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சி. மனதுக்கு ஆனந்தம்.
பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்.
ஆசிரியர்: எம்.என்.ஸ்ரீநிவாசன்.
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம்
விலை: ரூ.125.