சித்ரகுப்தன் ஜெயந்தி மே 3
சித்ர குப்தனுக்கான பெருவிழாவாகக் கொண்டாடப்படுவது சித்ரா பெளர்ணமி. இவ்விழா சித்திரை மாதம் கொண்டாடப்படுவதால், சித்திரை மாதத்திற்கு ஏற்றம் உண்டு. சித்ரகுப்தனுக்கு அதி தேவதை கேது.
கேதுவுக்கு அதி தேவதை விநாயகர். பொதுவாக விநாயகரை வணங்கினால் நவகிரகங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் சித்ரா பெளர்ணமியன்று அதிகாலையில் குளித்து விநாயகரை வழிபட வேண்டும்.
விநாயகருக்கு இந்த நன்நாளில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், கொண்டைக் கடலை சுண்டல் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் நாமும் உண்டு, பிறருக்கும் வழங்க வேண்டும். இந்த மாதத்தில் மா, பலா ஆகியவை நிறைந்து விளையும். இவற்றுடன் வாழை பழத்தையும் சேர்த்து முக்கனியாக விநாயகருக்கு நிவேதனம் செய்து வழிபடுதல் விசேஷம்.
அன்றைய தினம் நிலவு முழுமையாக தோன்றும் நேரத்தில் கடல் உள்ள ஊர்களில் கடலுக்கும், நதியுள்ள ஊர்களில் நதிக்கும் சென்று, மக்கள் உறவினர்களுடன் கூட்டமாகச் செல்வார்கள். சித்ரா பெளர்ணமியன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத் துடன் பௌர்ணமியும் இணைந்த நன்னாள் அது. கயிலையில் பார்வதி தேவி, அழகிய ஓவியம் ஒன்றை வரைந்தார். அது ஒரு அழகிய ஆண் குழந்தை படம். பெளர்ணமியன்று வரையப்பட்டதால் முகமெல்லாம் பொலிவுடன் காணப்பட்டது. அது நிஜம் போலவே காணப்பட்டது. பார்வதி தேவி வரைவதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஈசன், இந்த ஓவியம் உருவம் பெற்றால் அழகாக இருக்குமே என்று கூறினார்.
அன்னையோ ஒவியம் எப்படி உயிர் பெறும் என்று கேட்டார். ஈசன் அந்த ஓவியத்தைத் தன் முகத்தருகே கொண்டு சென்று முத்தமிட, அந்தக் கணமே கண்ணை இமைத்துக்கொண்டு, கை, காலை அசைத்து சிணுங்கிச் சிரித்தது அக்குழந்தை.
அற்புதங்களைச் செய்யவல்ல ஆடல் வல்லான் ஆயிற்றே ஈசன். இந்த அற்புதத்தையும் நிகழ்த்த, ஆச்சரியமடைந்த அன்னை அக்குழந்தைக்கு, சித்திரத்திலிருந்து வெளிவந்ததால் சித்திரகுப்தன் என பெயரிட்டு அழைத்தார். குழந்தை அழகாய் வளர்ந்து அதி உன்னதமான அறிவுச் செல்வத்துடன் வளர்ந்தது.
சித்திரகுப்தனின் வேலை
ஜீவன்களின் பாவ புண்ணியத்தை கணக்கிட, திறமையான ஒருவர் தேவையாக இருப்பதாக ஈசனிடம் கேட்டார் யமதர்ம ராஜன். இந்த வேலையைத் துல்லியமாகச் செய்யக்கூடியவர் சித்திரகுப்தன்தான் என்று கூறினார் ஈசன். சித்திரகுப்தன் ஒரு கையில் எழுதுகோலும், மறு கையில் எழுதுகோலுக்குத் தேவையான மையும் கொண்டு காட்சி அளித்தார்.
இவர் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டே மக்களுக்கு இன்ப, துன்பங்கள் வாழ்வில் ஏற்படும். இவர் பாவங்களைத் தள்ளுபடி செய்யும் அதிகாரமும் பெற்றவராம். எனவே இவரைத் தொழுதால் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
சித்ரகுப்தனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வணங்க வேண்டும். சித்திரகுப்தன் ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது. வெயில் அதிகரிக்கும் மாதமான சித்திரையில் இவரது ஜெயந்தி வருவதால் அன்னதானம், விசிறி, குடை, செருப்பு உட்பட பல தானங்களைச் செய்தால் புண்ணியம் கூடிப் பாவம் குறையும் என்பது நம்பிக்கை.