பங்குனி உத்திரப் பெருவிழா
சைவ சமய அருளாளர்கள், திருக்கோயில்தோறும் சென்று ஈசனைப் பாடி வழிபட்டனர். அப்படி அவர்கள் பாடிய தலம் பாடல் பெற்ற ஸ்தலம் எனும் சிறப்பினைப் பெறுகிறது. அவ்வாறு பாடல் பெறாத சிறப்புமிகு தலங்களும் இம்மண்ணில் மிகுதியாக உண்டு.
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை போகும் நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருவாலங்காடு, ஸ்ரீ வடாரண்யேசுவரர் திருக்கோயில் பாடல் பெறாத ஆலயமாகும்.
புத்திரப்பேறு பெற்ற பரதன்
பரதன் என்பவன் திருமணம் ஆகி, நீண்ட காலமாகியும் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்தினான். எல்லாம் வல்ல சிவனை வழிபட்டால் அப்பேறு கிட்டும் என்று நம்பினான். அதன்படி சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
தவத்திற்கு இரங்கிய சிவன் அசரீரியாக ‘நீவீர் திருவாலங்காடு தலம் சென்று அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி புத்திரகாமேஸ்வரரையும், ஆலங்காட்டீசனையும் வழிபட்டு வா’ என்று அருளினார். பரதனும் அவன் மனைவியும் அவ்வாறே வழிபட்டனர். வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.
அம்பாளின் அருள்திறம்
திருவாலங்காடு திருக்கோயிலில் உறையும் அம்பாள் திருநாமம் ஸ்ரீ வண்டார்குழலியம்மை. கண்டோர் வியக்கும் எழில்மிகு தோற்றம் கொண்டவள். தம்மை நாடி வருபவர்க்கு அருளும் வல்லமை கொண்டவள். ஒரு சமயம் பருந்து ஒன்று தமது சிறகை இழந்து வருத்தமுற்றது. அப்பருந்தினைக் காப்பாற்றத் திருவுளம் கொண்டாள் அம்பிகை. அவளது அருள்திறத்தால் உருவம் மாறிய பருந்து தேவர்களுடைய செல்வத் திருமகள்போல் எழில் உருவம் பெற்றுத் திகழ்ந்தது.
சோழ மன்னனின் பக்தி
மூன்றாம் குலோத்துங்கன் என்ற சோழ மன்னன் இத்தலத்தில் உறைந்துள்ள ஈசன் மீது மிகுந்த பக்தி கொண்டவன். அந்தப் பக்தி மேலீட்டை யாவர்க்கும் உணர்த்தும் பொருட்டு தன் தலையில் திருவாலங்காட்டுப் பெருமான் திருவடியைச் சூடிக்கொண்டான். இத்திருக்கோயிலில் உள்ள குலோத்துங்க சோழன் திருவுருவம் இதை உணர்த்துகிறது.
தலபுராணம் தரும் தகவல்
திருவாலங்காடு திருக்கோயிலுக்குத் தனியே தலபுராணம் இல்லை. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள், குத்தாலம் என வழங்கும் திருத்துருத்திப் புராணம் இயற்றியுள்ளார். அதனுள் வரும் திருவாலங்காட்டுப் படலத்தில் இத்திருக்கோயில் வரலாறு இடம்பெற்றுள்ளது.
“திருவாலங்காடு ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் புத்திரகாமேஸ்வர தீர்த்தம் உள்ளது. அந்தத் தீர்த்தத்தில் பங்குனி மாதம் அமாவாசை நன்னாளில் நீராடி புத்திரகாமேசுவரரையும் ஆலங்காட்டீசரையும் வழிபட்டால் நீண்ட நாள் குழந்தைப் பேறு இல்லாத பெண்ணும் மகப்பேறு எய்துவாள்” என்கிறது புராணம்.
பங்குனி பெருவிழா
இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது ஸ்ரீ லஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்கள் அருளாணையின் வண்ணம் 25.3.2015 முதல் 06.04.2015 வரை 13 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் சென்றால் திருவாலங்காடு தலத்தை அடையலாம்.