பங்குனி உத்திர விழா
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மற்றும் அதைமுன்னிட்டு உலக நன்மைக்காக நடத்தப்பட்டு வரும் வேதபாராயண நிகழ்ச்சியின் 100-வது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மார்ச் 25-ம் தேதியிலிருந்து ஏப்.3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 19 கிலோமீட்டரில் அமைந்துள்ளது குடுமியான்மலை. இங்கு குன்றின் மீதுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோயிலானது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
தல வரலாறு
பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்கு வந்த ஒரு பெண்ணுக்கு கோயில் அர்ச்சகர் கொடுத்துவிட்டாராம். அப்போது, கோயிலுக்குள் மன்னர் வந்துவிடவே, செய்வதறியாது அந்தப்பெண்ணிடம் இருந்து மீண்டும் அந்தப் பூவை எடுத்து பூஜை செய்து மன்னருக்கு பிரசாதமாக கொடுத்தாராம். அந்தப் பூவில் இருந்த முடி குறித்து மன்னர் அர்ச்சகரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு சிவனின் தலையில் முடி இருப்பதாக விளக்கினாராம் அர்ச்சகர்.
அதன்படியே மன்னருக்கு மெய்சிலிர்க்கும் வகையில் குடுமியுடன் லிங்கம் காட்சியளித்ததால் இக்கோயில் குடுமியான்மலை, சிகாநாதசுவாமி (சிகா- குடுமி) என்ற பெயரில் அழைக்கப்படுவதாக வரலாறு கூறுகிறது.
மிகவும் அழகிய சிற்பங்களால் வடிக்கப்பட்ட இக்கோயிலில் ஆயிரக்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், அணியொட்டிக்கால் மண்டபம், தசாவதாரம் முதலிய சிற்பங்களுடன் அரிய தகவல்களை தருவிக்கும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள், குடவரைக்கோயில் என பல்வேறு சிறப்புகள் உள்ளன. இதில் குடவரைக் கோயிலின் தென்பகுதியில் உள்ள கர்நாடக சங்கீத விதிகள் குறித்த கல்வெட்டு இந்தியாவிலேயே இங்குதான் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டு திருவிழா மார்ச் 25-ல் தொடங்கி ஏப். 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் உலக நன்மைக்காக வேதபாராயணம் நடத்தப்பட்டு வருகிறது.
உலக நன்மைக்காகவும், வேதமே அறங்களின் ஆணி வேர் என்பதாலும் உலகம் இயற்கை உற்பாதங்களில் இருந்து விடுபடவும் வேத பாராயணம் மிகவும் முக்கியமானது.
இதுவரை நடத்தப்பட்ட வேதபாராயணத்தின்போது மற்ற வேதங்களோடு யஜூர் வேதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு நான்கு வேதங்களிலும் பாராயணம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியை புதுக்கோட்டையில் கிழக்கு மூன்றாம் வீதியில் உள்ள கோபாலகிருஷ்ண பாகவதர் பஜன் ஹாலில் மார்ச் 25-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளன.