ஆன்மிகம்

வண்ணமயமான வசந்த விழா- ஹோலி

ஜி.விக்னேஷ்

இளவேனிற் காலம் என்னும் வசந்த காலம் தொடங்கும் நேரம் மரங்கள் துளிர் விடும், பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும். பூமி முழுவதும் புது வண்ணம் போர்த்திக்கொள்ளும்.இந்தச் சூழ்நிலையில் விருப்பு, வெறுப்புகளைக் களைந்து அனைவரையும் ஒன்றாகக் கூட்டிவைக்கிறது ஹோலிப் பண்டிகை.

ஒருவர் மீது மற்றொருவர் வண்ணத்தைப் பூசி வயது வித்தியாசமின்றி விளையாடுவது இவ்விழாவில் மட்டுமே நடைபெறும்.

ஹோலிப் பண்டிகை ரங்குபஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. ரங்கு என்றால் வண்ணம். பஞ்சமி என்றால் ஐந்து. பெளர்ணமிக்கு ஐந்தாம் நாள் வருவது இறுதிப் பண்டிகை நாளான ரங்கு பஞ்சமி.

ஹோலி வந்த கதை

ஹிரண்ய கசிபு, நாராயண நாமத்தைக் கூறிய தன் மகன் பிரஹல்லாதனைப் பல கொடுமைகள் செய்துவந்தான். அதில் ஒன்று தன் சகோதரி ஹோலிகா மடியில் பிரஹல்லாதனை அமரச் செய்து தீ மூட்டுவது. பிரஹல்லாதனுக்காக மூட்டும் தீ தன்னைச் சுடாமல் இருக்க, ஹோலிகா தீப்பற்றாத போர்வையைப் போர்த்திக்கொண்டிருந்தாள்.

பிரஹல்லாதனைத் தீயினால் சுட்டுத் துன்புறுத்தி இறை நாமத்தை விடச் செய்வதே இரணியன் நோக்கம். அதன் பிறகு பிரஹல்லாதன் தன்னுடைய நாமத்தைச் சொல்வான் என்பது இரணியனின் எண்ணம்.

தீ மூட்டப்பட்டது. பிரஹல்லாதன் தன் அத்தை ஹோலிகா மடியில் அமர வேண்டும். நாராயணனைப் பிரார்த்தித்து அவள் மடியில் அமர முற்பட்டான். அப்பொழுது இறைவன் அருளால், ஹோலிகா போர்த்தியிருந்த தீப்பற்றாத போர்வை நழுவிப் பிரஹால்லாதனைச் சுற்றிக்கொண்டது.

தீ நாக்குகள் ஹோலிகாவை விழுங்கின. தீய எண்ணம் கொண்ட ஹோலிகாவின் மரணத்தை பக்தர்கள் கொண்டாடினார்கள் என்று சொல்லப்படுகிறது. ஹோலிகாவின் பெயரால் இந்தக் கொண்டாட்டம் ஹோலி என வழங்கப்படுவதாக வடநாட்டில் சொல்லப்படுகிறது.

ஹோலிப் பண்டிகை உருவானதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. சிவபெருமான் தவத்தில் இருந்தபோது பார்வதி தேவி அவரை மணப்பதற்கு விரும்பினார். சிவனின் தவத்தைக் கலைத்தால்தானே மணம் செய்ய முடியும். அதற்கு உதவும் பொருட்டு மன்மதனைப் பார்வதி தேவி நாட, அவன் சிவபெருமானின் மீது தன் ஆயுதத்தைச் செலுத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.

தவம் கலைந்து எழுந்த சிவன் சினத்துடன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து காமதேவனைப் பார்க்க, அவன் உடல் எரிந்தது. மன்மதனின் மனைவி ரதியின் வேண்டுதலுக்கு இரங்கிச் சிவபெருமான் காமனை உயிர்ப்பித்தார். காம தேவன் உயிர் பிழைத்த நாளையே ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடுவதாகச் சொல்லப்படுகிறது.

மரபு சார்ந்த பண்டிகைகளில் இளைஞர்களைக் கவர்ந்த பண்டிகைகளில் ஒன்று ஹோலி. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தை விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கான விழாவாக ஹோலி விளங்குகிறது.

SCROLL FOR NEXT