பால் பிரண்டன் பத்திரிகையாளர். பிரபல எழுத்தாளர். அவர் காஞ்சி பரமாச்சாரியரின் வழிகாட்டுதலுடன் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்தார். அந்த உரையாடலிலிருந்து…
“ சுவாமி! நான் என்ன செய்ய வேண்டும்? எந்த மார்க்கம் சரி?”
“ உன் இயல்பான சொரூபத்தைப் பற்றிக்கொண்டு சிந்தித்து, இடைவிடா தியானத்தில் ஆழ்ந்திருந்தால் சத்திய ஒளியின் அருட்காட்சியைப் பெறுவாய்”
“சுவாமி! உண்மைப் பொருளைப் பற்றி நான் அடிக்கடி சிந்தித்து தியானம் செய்து வந்திருக்கிறேன். அப்படியிருந்தும் நான் ஆன்ம சாந்தி பெறுவதில் முன்னேறி யிருப்பதாகத் தெரியவில்லையே”
“முன்னேற்ற மடையவில்லை என்று உனக்கு எப்படித் தெரியும்? ஆன்மிகத்தில் முன்னேற்றத்திற்கென மைல்கல் இருக்கிறதா என்ன? ஆன்ம முன்னேற்றத்தை அளவிடுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல”
“இதற்குக் குருவருள் அவசியமா?”
“தேவையிருக்கலாம்…” “சில பக்குவிகளுக்கு ஆண்டவனே முன்வந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வான். சிலருக்குக் குருவருள் தேவைப்படலாம்.”
“ எனக்குக் குருவால் உதவமுடியுமா?”
“விசாரம் என்பது அவசியம். பயிற்சி செய்து வந்தால் குருவருள் தானே வேலை செய்யும்”
“ சுவாமி! நாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்கிறோம். உலகின் எதிர்காலப் போக்கு எப்படி இருக்கும்? இதைப்பற்றித் தங்கள் கருத்தென்ன?”
“எதிர்காலத்தைப் பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய்? அனைத்தையும் திட்டமிட்டு ஆட்டுவிப்பவன் அதைப் பார்த்துக் கொள்வான். இப்போது என்ன நடக்கிறதென்றே உனக்குத் தெரியாதிருக்கும்போது வருங்காலத்தைப் பற்றி ஏன் சிந்திக்கிறாய்? நிகழ்காலத்தை நீ கவனித்தால் எதிர்காலம் தானே சரியாகிவிடும்.”
பால் பிரண்டன் விடுவதாக இல்லை. “சுவாமி! உலகத்தில் சமரசம் நிலவி சகோதரத்துவத்தின் மகத்துவம் ஓங்குமா? அமைதியான சூழல் நிலவுமா?” என்று கேட்டார்.
“ அதான் சொன்னேன். அதையெல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான். உலகைக் காக்க உன்னால் முடியுமா?” என்று வாயை அடைத்துவிட்டார் பகவான்.
“ உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அப்படியொரு அன்புசக்தி இருப்பதாக நம்ப முடியவில்லையே” என்று பால் பிரண்டன் கேட்டார்.
“ நீ எப்படி இருக்கிறாயோ அப்படித்தான் இந்த உலகமும் இருக்கும். உன்னை அறிந்து கொள்ளாமல் உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விழைவதில் துளியும் அர்த்தமில்லை. இம்மாதிரி சிந்திப்பதால் நேரம்தான் விரயமாகும்.” என்றார்.
அப்போது அண்ணாமலையார் கோயிலில் ஒலிக்கும் ஆலயமணியன் நாதம் மெல்ல மிதந்துவந்து ஆசிரமத்தைப் புனிதப்படுத்திக் கொண்டிருந்தது.
பால் பிரண்டனுக்கு உடல் சிலிர்த்தது.
பக்தர் ஒருவர் எழுந்து ஊதுபத்தியொன்றை ஏற்றினார்.
பால் பிரண்டனும் பகவானிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு அருணாசலேசுவரர் கோயிலுக்குச் சென்றார்.
ஸ்ரீ ரமண மகரிஷி - வாழ்வும் தொண்டும்
அஜானந்தர், 32 பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை-17
தொடர்புக்கு: 044- 24331510 விலை: ரூ.40/-