அழகுக்கும் ரம்மியமான தோற்றத்துக்கும் பெயர் பெற்றவர் ராமர். அவருக்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. கெளசல்யா சுப்ரஜா ராமா என்று சுப்ரபாதம் தொடங்குகிறது. அந்தக் கோசலை மைந்தனை பக்தர்கள் இன்னும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர்.
அழகிய ராமர்
பக்தர்களால் எழுதப்பட்ட இருபத்தேழு கோடி ராம நாமங்கள் கொண்ட நோட்டுப் புத்தகங்கள் புதைக்கப்பட்ட அதிசய கோயில் காவேரிப்பாக்கத்தில் உள்ளது. இந்த திருக்கோயில் அழகிய ராமர் கோயிலாகும். அழகிய ராமர் சந்நிதிக்கு எதிரே புதைக்கப்பட்ட இடத்திற்கு மேலே அடையாளமாக ஸ்தூபி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலை இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் 45-ம் பட்டம் ஜீயர் சுவாமி, ஸ்ரீமன் ஆண்டவன் சுவாமிகள் மற்றும் காஞ்சிப் பெரியவர் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அழகிய ராமர் இங்கே கல்யாணராமராகக் காட்சி அளிக்கிறார்.
சீதையின் அருகில் மடப்பள்ளி நாச்சியார் முடிந்த கூந்தலுடனும், இடுப்பில் தூக்கிச் செருகிய புடவையுடனும் காட்சி அளிப்பது அபூர்வம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் இத்திருகோயிலுக்கு எழுபதுகளில் திருப்பணி நடத்தப்பட்டது.
சொர்ண ராமர்
சூரிய குலத் தோன்றலான ராமர், சூரியனைக் குறிக்கும் ஞாயிறு என்ற சென்னை கோயம்பேட்டுக்கு அருகே உள்ள தலத்தில் எழுந்தருளியுள்ளது தற்செயல் அதிசயம். இத்தல நாயகன் புஷ்பரதேஸ்வரர் அம்பாள் ஸ்வர்ணாம்பிகை. இவர்களின் அருள் பெற்றவன் சூரியன். இத்தலத்தில் பத்ராசல ராமர், கோதண்டராமர், அனுமான் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராமரின் சிறப்புப் பெயர் சொர்ண ராமர்.
கலையம்ச ராமர்
அற்புதமான கலையம்சத்துடன் ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் காணக் கிடைக்கும் கோயில் வடமதுரையில் அமைந்துள்ளது. இவர்களது கிரீடம் பல அடுக்கு கொண்டு புதுமையான கலையம்சத்துடன் இருப்பது அழகு.
ராகவனே ராமர்
ராயபுரத்தில் உள்ள பிரசன்ன ராகவப் பெருமானாகக் காட்சி அளிக்கும் ராமபிரானின் தோளில் அம்புறாத்தூணி உள்ளது. ஆனால் கரத்தில் வில் இல்லை. லட்சுமணன் அம்பரா துணியுடன் வில் இல்லாமல் கரங்கள் கூப்பிய வண்ணம் காணப்படுகிறார். அனுமன் அமர்ந்த நிலையில் கை கூப்பியவண்ணம் காட்சி அளிக்கிறார்.
கல்யாண ராமர்
ராமபிரானின் சிலாரூபத்தின் வலது பக்கம் சீதாபிராட்டி அமர்ந்திருந்தால் ராமர் கல்யாணராமர் என்றே அழைக்கப்படுகிறார்.
பட்டாபிராமன்
ராமபிரானின் சிலாரூபத்திற்கு இடதுபுறம் சீதை இருந்தால் பட்டாபிராமன். இன்னும் எத்தனையோ திருப்பெயர்கள் ராமருக்கு.
அதில் தசரதராமன், தற்கால வழக்கப்படி தந்தை பெயரைத் தன் பெயருக்கு முன் தாங்கி உள்ளான்.