அவர் ஒரு பள்ளி ஆசிரியை. துப்பாக்கி, வாள்கள், டாங்கிகள் வடிவிலான பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடுகின்றனர் என்று கவலையுடன் சொன்னார். போர் ஆயுதங்களைப் பொம்மைகளாகப் பயன்படுத்துவதை எப்படி தவிர்ப்பது என்று கேட்டார்.
இந்தக் காட்டுமிராண்டித்தனமான விளையாட்டில், உலகம் முழுக்க ஈடுபட்டிருக்கும்போது சில குழந்தைகளை மட்டும் எப்படி நிறுத்தமுடியும்?
அவர்கள் மீண்டும் தங்களைவிட வயதில் மூத்தவர்களைப் பார்த்து திரும்பவும் தூண்டப்படுவார்கள். வேறுவிதமான தீங்கற்ற, அறிவுப்பூர்வமான பொழுதுபோக்குகளை நோக்கி அவர்களது கவனத்தைத் திருப்புவதற்குக் கூடவே ஒரு ஆசிரியர் தேவை என்றும் சொன்னேன்.
ஒன்றிரண்டு குழந்தைகளை அவரால் தொடர்ந்து வழிநடத்த முடியுமென்றாலும், இந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் பின்விளைவுகளை அவர்களுக்கு ஒழுங்காகச் சொல்லித்தராவிட்டால் அவர்கள் மீண்டும் சமூகத்தால் உள்ளிழுக்கப்பட்டு விடுவார்கள்.
சமூகம் என்பது தனிப்பட்ட நபர்கள் சேர்ந்த அல்லது வெவ்வேறு தனிப்பட்ட நபர்களின் தொகுதிகளால் உருவாக்கப்படுவதுதானே. இங்கே போர் உருவாவதற்கான காரணத்தை ஒரு தனிப்பட்ட நபர் அகற்ற முயலாவிட்டால், மேலோட்டமான ஒட்டுவேலைகளால் மீண்டும் போருக்கான காரணங்கள் வேறொரு ஒழுங்கில் உருவாகவே செய்யும்.
அதனால் அந்த ஆசிரியை தன்னிடமிருந்துதான் தொடங்கவேண்டும்; அவர் முதலில் தன்னை, தனது சுய அறிவிலிருந்து புரிந்துகொள்ளத் தொடங்குதல் வேண்டும். அதுதான் சரியான சிந்தனை.