“இப்போது ஒரு சொர்க்கவாசி இங்கு வரப்போகிறார்”.
மதீனா பள்ளிவாசலில் தன் தோழர்களோடு அமர்ந்திருந்த முஹம்மது நபி இவ்வாறு சொன்னார்.
நபி அவர்களே இவ்வளவு வெளிப்படையாக தம் வார்த்தைகளால் முத்திரையிட்ட அந்த சொர்க்கவாசி யார்? என நபித் தோழர்களின் முகங்களில் பேராவல்.அப்போது இடது கையில் செருப்பும், முகத்தில் தாடியுமாக, சுத்தம் செய்த நீர் சொட்டிக் கொண்டிருக்க ஒருவர் அப்பள்ளிவாசலுக்குள் நுழைகிறார். தொடர்ந்து மூன்று தினங்களும் இவ்வாறே நபிகள் கூற, அதே நபர் மதீனா பள்ளிவாசலுக்கு வந்தார்.
“ஏன் நபி அவர்கள், இவரை மட்டும் தொடர்ந்து சொர்க்கவாசி என்று சொல்கிறார்கள், அப்படி என்ன சிறப்பு இவரிடம் உள்ளது?” என அனைத்து நபித்தோழர்களுக்குள்ளும் கேள்வி பிறந்தது. இந்தக் கேள்வி அங்கிருந்த நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸின் மனதிலும் எழுந்தது.
பதிலைத் தெரிந்துகொள்ள அந்த நபரைப் பின்தொடர்ந்து சென்றார். அவரிடம், “என் வீட்டில் கொஞ்சம் பிரச்சினை. ஆகவே நான் மூன்று நாட்கள் உங்களுடன் தங்கிக்கொள்ள அனுமதிப்பீர்களா?” என்று கேட்டார். அவரும், தாராளமாக, வந்து தங்கிக்கொள்ளுங்கள் என்றார்.
மூன்று நாட்களும் அப்துல்லாஹ், சொர்க்கவாசி என்று கருதப்பட்ட அந்த நபித்தோழரின் அன்றாட நடைமுறை வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தார். ஆனால் அவரிடம் எந்த அதிகப்படியான எந்த அற்புதங்களும் தென்படவில்லை.
“நான் தங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நான் தங்களுடன் மூன்று நாட்கள் தங்கியதன் உண்மையான நோக்கம் இறைதூதர் அவர்கள் உங்களைப் பற்றி சொன்னதைத் தெரிந்துகொள்வதற்கு தான். நீங்கள் தொழுகிறீர்கள், குர்ஆனை ஓதுகிறீர்கள், உண்ணுகிறீர்கள், பருகுகிறீர்கள், உறங்குகிறீர்கள், கடைவீதிக்கு போகிறீர்கள்.
எல்லாரும் வழக்கமாக செய்யும் இந்த அன்றாட காரியங்களைத்தான் தாங்களும் செய்கிறீர்கள். இவற்றைத் தவிர வேறு எந்த சிறப்பான செயலையும் நான் தங்களிடம் பார்க்கவில்லை? ஏன் உங்களை மட்டும் நபி அவர்கள் சொர்க்கவாசி என்று சொன்னார்” என்றார் அப்துல்லாஹ்.
“ஆம், தாங்கள் சொல்வதைப் போல் வேறோன்றும் சிறப்பாக நான் செய்வதில்லை”, என அத்தோழர் ஒத்துக்கொள்ள, விருந்தினராக தங்கியிருந்த அப்துல்லாஹ் புறப்பட்டார்.
“நான் இரவில் தூங்கச் செல்லும் முன், யார் யாரெல்லாம் எனக்குத் தீங்கு செய்தார்களோ அவர்கள் அனைவரையும் மன்னித்துவிடுவேன். என் இதயத்தில் யாரைப் பற்றிய தீய நினைவுகள் இருந்தாலும் அவற்றை முழுமையாக நீக்கிவிடுவேன்” என்றார்.
உடனே அப்துல்லாஹ்வுக்கு காரணம் புரிந்தது. ஆம், யார் சக மனிதர்களை மன்னிக்கிறாரோ அவருக்கு மறு உலகம் மட்டுமல்ல, இந்த உலகமும் சொர்க்கம்தான்.