அருணகிரிநாதர் காலத்தில் வில்லிப்புத்தூரார் என்னும் தமிழ்ப் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தீவிரத் தமிழ்ப் பற்று கொண்டவர். மற்ற புலவர்களை வாதுக்கு அழைப்பார். போட்டியில் அவர்கள் தோற்றுவிட்டால், அவ்வாறு தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவது அவர் வழக்கம்.
தமிழில் சிறு பிழைகூடப் பொறுக்காத அவர், தாம் கேட்கும் செய்யுள் பாடல்களுக்கு யாரேனும் தவறான விளக்கம் கூறினாலோ அல்லது விளக்கம் கூறத் தெரியாது விழித்தாலோ உடன் காதை அறுத்து விடுவது அவர் வழக்கம். தமிழின் மீது கொண்ட அளவில்லா பற்றே வில்லிப்புத்தூராரின் இச்செயலுக்குக் காரணமாய் அமைந்தது.
வில்லிப்புத்தூராரிடம் காது அறுபட்ட பல புலவர்கள் அருணகிரிநாதரைச் சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தனர். அவரது இச்செயலுக்கான காரணமும் அருணகிரிநாதரின் கவனத்துக்கு வந்தது. வில்லிப்புத்தூரார் நல்லவர்தான் என்றாலும் அவரதுஇச்செய்கை தவறானது என்பதை அவருக்கு உணர்த்த விருப்பினார் அருணகிரியார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார்.
அருணகிரியைப் பற்றி வில்லிப்புத்தூரார் நன்கறிந்திருந்தார். இருந்தாலும் தமிழ்ச் செருக்கால் அவரையும் தன்னோடு போட்டி போடும்படி வாதுக்கழைத்தார். அருணகிரியும் உடன்பட்டார்.
போட்டி நடக்கும் போது வில்லிபுத்தூரார் தம்முடைய கையில் சற்று நீளமான ஒரு துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய சிறிய கத்தி ஒன்று இறுக்கமாகக் கட்டிவைக்கப்பட்டு இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக் கொண்டு கேள்விகளைக் கேட்பார். விளக்கங்களைச் சொல்லச் சொல்வார். பதிலில் ஏதேனும் தவறு இருந்தால் சற்றேனும் தயங்காமல் உடன் துரட்டியை இழுத்துக் காதை அறுத்துவிடுவார்.
போட்டி தொடங்கியது. துரட்டியைக் கையில் பிடித்தவாறு போட்டிக்குத் தயாராக அமர்ந்திருந்தார் வில்லிபுத்தூரார். அதைக் கண்ட அருணகிரியார், சமமான இருவருக்கு இடையே நடக்கும் போட்டி என்பதால் தமக்கும் அதுபோல் ஒரு துரட்டி வேண்டுமென்றும், தாம் கேட்கும் கேள்விகளுக்கு வில்லிபுத்தூரார் சரியான பதில் கூறிவிட்டால், தாம் அவரை விட்டுவிடுவதாகவும், இல்லாவிட்டால், அவர் காதும் அறுக்கப்படும் என்றும் புதிய நிபந்தனையைக் கூறினார்.
இதுவரை யாரும் வில்லிபுத்தூராரிடம் அவ்வாறு எதிர்வாதம் செய்ததில்லை. அதனால் சற்றே துணுக்குற்றார் வில்லிபுத்தூரார். இருந்தாலும் தம் புலமை மீதிருந்த நம்பிக்கையால் அதற்கு உத்தரவிட்டார்.
உடனே `ஏகாக்ஷரச் செய்யுள்’ என்ற அமைப்பில் ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தார் அருணகிரியார். அருணகிரியாரின் பாடலைக் கேட்டு அப்படியே திகைத்துப் போய்விட்டார் வில்லிபுத்தூரார். அதன்பின் அருணகிரிநாதரிடம் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டவர், நிபந்தனைப்படி தம் காதை அறுத்துவிடுமாறு வேண்டிக் கொண்டார்.
ஆனால் அருணகிரியார் அதற்கு ஒப்பவில்லை. வில்லிபுத்தூராரின் காதைக் கொய்வது தமது நோக்கமல்ல என்றும், புலவர்களின் காதை அறுத்து அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை இனி வில்லிபுத்தூரார் நிறுத்த வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் கூறினார்.
வில்லிபுத்தூராரும் தமது தவறை உணர்ந்து மனம் திருந்தினார். தாம் இனி அவ்வாறு செய்ய மாட்டேன் என்றும், பிறரை விமர்சிப்பதை விடுத்து, இனி புதிய செய்யுள் வகைகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறி, அருணகிரியாரிடம் மன்னிப்பு வேண்டினார். பின்னாட்களில் அவ்வாறு அவரால் இயற்றப்பெற்றதே `வில்லிபுத்தூரார் மகாபாரதம்’ ஆகும்.
திருவண்ணாமலை மகான்கள்
பா.சு.ரமணன்
வெளியீடு: சேலம் புக்ஸ், 119, முதல் மாடி,
கடலூர் மெயின் ரோடு, அம்மாப்பேட்டை,
சேலம் 636 003. தொடர்புக்கு: 89255 54467.
ஆன்மிக நூலகம்