ஆசிய அளவில் மிகவும் சிறப்பு பெற்ற குதிரை சிலையுடன் கூடிய அய்யனார் கோயில் புதுக்கோட்டைக்குக் கூடுதல் சிறப்பாகும். பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பரந்து விரிந்த இடப்பரப்பில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் வாசலில் தென்திசை நோக்கி தாவும் விதமாக அமைக்கப்பட்டுள்ள குதிரை சிலையானது சுமார் 33 அடி உயரமுடையது. இந்தக் குதிரைக்கும், அங்குள்ள சுயம்பு அய்யனாருக்கும் நீண்ட வரலாறு உள்ளது.
அய்யனார் கோயில் அமைந்துள்ள பகுதியில், ஒரு காலத்தில் காரைச் செடிகள் நிறைந்திருந்தன. அந்த இடத்தில் ஆடு, மாடு மேய்த்த சிறுவர்கள் விளையாட்டாக வில்லுனி ஆற்றில் இருந்து களிமண் எடுத்து வந்து கோயில் கட்டியுள்ளனர். அதன்பிறகு குதிரை, யானை ஆகியவற்றின் சிலைகளைச் செய்து அங்கு வைத்துள்ளனர்.
களிமண்ணால் செய்த அரிவாளைக் கொண்டு ஒருநாள் ஒரு ஆட்டுக்கிடாவை விளையாட்டாக வெட்டியபோது அந்த ஆடு துண்டானது. யாரும் எதிர்பாராத இந்த நிகழ்வு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதன்பிறகு, ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து யானை, குதிரை ஆகிய சிலைகளோடு சுமார் 1574- ம் ஆண்டில் கோயில் கட்டியுள்ளனர்.
ஆற்றில் போன யானை சிலை
ஒரு முறை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் கோயிலில் இருந்த யானை சிலை தண்ணீரில் அடித்துக்கொண்டு போய்விட்டது. ஆனால், குதிரை சிலை பத்திரமாக இருந்தது. இந்தக் கோயிலுக்கு மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்றும் அதற்கு அடுத்த நாளும் திருவிழா நடத்தப்படுகிறது.
திருவிழாவின்போது வேண்டுதலை நிறைவேற்ற சிலைக்கு காகித மாலைகள் அணிவிக்கப்பட்டுவந்தது. தற்போது குதிரைக்குக் காகித மாலைக்குப் பதிலாக ஜிகினா மாலை அணிவிக்கப்படுகிறது.
மிகவும் சிதிலமடைந்திருந்த சிறப்புக்குரிய இக்கோயில் மற்றும் குதிரையைப் பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ள முடிவெடுத்து கடந்த 2003-ல் திருப்பணி தொடங்கி 2010-ல் கும்பாபிஷேகம் நடந்தது.
கேட்டால் கேட்டதைக் கொடுப்பார், கேட்காவிட்டால் தன்னையே கொடுப்பார் என்பதற்கு ஏற்ப வேண்டுதலை நிறைவேற்றுவதால்தான் வருடாவருடம் குதிரைக்கு அணிவிக்கப்படும் ஜிகினா மாலைகளின் எண்ணிக்கை நூறிலிருந்து ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. மாசிமகத் திருவிழாவுக்கு வர இயலாதவர்கள் பங்குனி உத்திரத்துக்கு வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
கீரமங்கலம் வழியாக அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அறந்தாங்கியில் இருந்து 12-வது கிலோ மீட்டரில் இக்கோயில் உள்ளது.