ஆன்மிகம்

லீலை செய்த சிவன்

யுகன்

திருமுருகன் பூண்டியில் எழுந்தருளியுள்ள திருமுருகநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வேடுபறி திருவிழா பிரசித்தமானது. இந்தாண்டு மார்ச் 7-ம் தேதி இந்தத் திருவிழா நடக்கின்றது.

பழமையான கோயில்

தொல்லியல் துறையின் ஆய்வுகளின்படி திருமுருகன் பூண்டியை புராதன நகரமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் அவினாசி சாலையில், திருமுருகன்பூண்டியில் புராதன திருமுருகநாத சுவாமி கோயில் உள்ளது. கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில் உள்ளார்.

சூரபத்மனை வதைத்த முருகன் தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்க, தன் கையாலேயே லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்ட தலம் இது. இறைவியாக முயங்கு பூண் முலை வள்ளியம்மை அருள் பாலிக்கும் ஆலயம் இது. தேவார மூவர்களில் ஒருவரான சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இக்கோயில்.

நிந்தா ஸ்துதி என்பது இறைவனை நிந்தனை செய்வது. இறைவனே தன்னிடம் நட்பு பாராட்டிய பெருமைக்கு உரியவர் சுந்தரர். அப்படிப்பட்ட சுந்தரரே தன்னுடைய நண்பரான சிவபெருமானை, நிந்தனை செய்து திட்டி பதிகம் பாடுகிறார். இதுவும் இறைவனின் திருவிளையாடல் தான்.

திட்டு கேட்பதற்காக திருடிய இறைவன்

தன்னுடைய காதலுக்கு சிவபெருமானையே தூதாகச் செல்லச் சொன்னார் சுந்தரர். பெருமானுக்கும் சுந்தரருக்கும் இடையே அப்படியொரு அன்யோன்யமான நட்பு இருந்தது. பெருமானின் பெருமைகளை ஒவ்வொரு ஆலயத்திலும் பாடிவருகிறார் சுந்தரர்.

சுந்தரர் தனக்கு என்ன தேவையோ அதை தன்னுடைய நண்பரான பெருமானிடமே நேரடியாக கேட்டுப் பெறுபவர். இந்த வழக்கத்துக்கு மாறாக, சுந்தரருக்கு மன்னர் ஒருவர் பொன்னும், அளவிடமுடியாத பரிசுகளும் அளித்து அவரை வழியனுப்புகிறார். பெரும் பொருட் செல்வத்தோடு கோவை, அவினாசியில் இருக்கும் `கூப்பிடு பிள்ளையார்’ கோயிலில் இரவு தங்கினார் சுந்தரர்.

தன்னுடைய நண்பர் சுந்தரர் தம்மை இதுவரை திட்டிப் பாடவில்லையே என நினைத்த பெருமானார் அதற்காக ஒரு திருவிளையாடல் புரிகிறார். தம்முடைய பூத கணங்களுடன், வேடனாகச் சென்று சுந்தரர் அறியாவண்ணம் அவரிடம் உள்ள பொருட்களை கவர்ந்தார்.

மறுநாள் கண் விழித்த சுந்தரர், தம்மிடம் இருந்த பொருட்கள் அனைத்தும் களவாடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சிவபெருமானை நோக்கி, நீ இருக்கும் சந்நதியிலேயே இப்படியெல்லாம் நடக்குமா? என கோபத்தோடு கேட்டார்.

`எந்துற்கு எம்பிரான் நீரே…’ எனத் தொடங்கி பத்து பதிகங்களால் வசை பாடுகிறார். உடனே அவரின் முன் தோன்றிய இறைவன், “நண்பரே நீர் என்னைத் திட்டிப் பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்” என்று கூறியதோடு, களவாடிய பொருட்களைப் போல் இரண்டு மடங்கு அதிகம் செல்வத்தைக் கொடுத்து, சுந்தரருக்கு அருள் பாலித்தார்.

கதை சொல்லும் சிற்பங்கள்

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் இந்தச் சம்பவத்தை விளக்கும் வகையில், சிவன் வேட்டுவனாக வில்லோடு நிற்பதைப் போலவும், சுந்தரர் கோபமாக இறைவனுடன் வாதிடுவது போலவும், பின் மகிழ்ச்சி தவழும் முகத்தோடு சுந்தரர் இருப்பதையும் போன்றும் சிற்பங்கள் உள்ளன. இந்த புராணச் சம்பவத்தை ஒட்டியே ஆண்டுதோறும் இக்கோயிலில் வேடுபறி திருவிழா விமரிசையாக நடத்தப்படுகின்றது.

பரிகார ஆலயம்

இன்றும், சிவன், பொருட்களைத் திருடி வந்து மறைத்து வைத்த, வேடுவ பறிகுழி கோவிலில் உள்ளது. திருட்டு, மனநோய், திருமணத் தடை என எத்தகைய இடர்களையும் தீர்க்கும் ஆலயமாக இது உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார், சிவனை திட்டிப் பாடிய பத்துப் பாடல்களையும், பாடி வணங்க, நினைத்த காரியம் கைகூடும் என்பதும் ஐதீகம்.

SCROLL FOR NEXT