தட்சிணாமூர்த்திக்கு தனி ஆலயமாக தேனி முல்லைநகர் அருகே வேதபுரீயில் ஆதி குரு ஸ்ரீப்ரஜ்ஞா தட்சிணாமூர்த்தி வித்யாபீடம் என்ற பெயரில் அமைந்துள்ளது. பூர்வ காரணாகம ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்தாபன விதிப்படல சாஸ்திரத்தின்படி, ஊரின் தெற்கு பகுதியில், நதிக்கரையில் இயற்கையாக அமைந்துள்ள கற்பாறைகளின் இடையில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்குரிய கல்லால மரத்தின் முன்பு வித்யாபீடம் (கோவில்) அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஒன்பது அடி உயரம் கொண்ட தஷிணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நமசிவாய எனும் பஞ்சாட்சர மஹாமந்திரத்தைக் குறிக்கும் வகையில் ஐந்து விமானக் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவரையும் விமானத்தையும் இங்கு ஒரு சேர தரிசிக்கலாம். பொதுவாக மக்கள் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை நவக்கரஹங்களில் ஒன்றான ஸ்ரீ குருபகவானாக கருதி வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் குருவுக்கும் கருவானவர் ஆதிகுரு தனித்தனியானவர் என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு ஆதிகுரு ஸ்ரீ ப்ரஜ்ஞா தட்சிணாமூர்த்தியை ஸ்ரீப்ருஹஸ்பதி வணங்கி கொண்டிருக்கும் நிலையில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் அணையா விளக்கு உள்ளது. பக்தர்கள் கணிக்கையாக வழங்கும் பசுநெய் ஊற்றப்பட்டு 24மணிநேரமும் தொடந்து எரிந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி அன்று ஸ்ரீ குருபகவான் ப்ருஹஸ்பதிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஸ்ரீ விநாயகர் முதலான ஷண்மத தெய்வங்களுக்கு தனித்தனியே சன்னதி அமைக்கப்பட்டு தினசரி வழிபாடுகள் நடந்து வருகிறது. பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களுக்கு உரிய மூலமந்திரங்கள் பக்தர்களால் கோடிக்கணக்கில் எழுதி சேகரிக்கப்பட்டுள்ளது.
அந்த லிகித மந்திரங்கள் அடங்கிய பெட்டிகள் அந்தந்த தெய்வத் திருவுருச்சிலையில் பீடத்தின் கீழ் முறைப்படி பாதுகாப்பாக மந்திரபூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேலும் வித்யாபீடம் முன் மண்டபக் கதவில் தமிழக திருக்கோவில்களில் அமைந்துள்ள பல்வேறு விதமான தஷிணாமூர்த்தியின் 48 திருவுருங்கள் செதுக்கப்பட்டுள்ளது. என்பது இன்னும் கூடுதல் சிறப்பு.
இங்கு அதிகாலை முதல் இரவு வரை ஐந்து கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை, பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மற்றும் உலக நலனுக்காக பொதுமக்கள் கலந்துகொள்ளும் கூட்டு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது.
இது தவிர பாரதப் பண்பாட்டின் சிறப்பு பண்டிகைகளான தமிழ் வருடப்பிறப்பு, ஸ்ரீராமநவமி, ஸ்ரீங்கரஜயந்தி, ஸ்ரீவ்யாஸ பூஜை (குரு பூர்ணிமா), ஸ்ரீக்ருஷ்ணஜயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த ஷஷ்டி, அந்நாபிஷேகம், பரணி தீபம், கார்த்திகை தீபம், தனுர் (மார்கழி) மாத பூஜை, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் மரபு வழிப்படி சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகின்றன.