ஆன்மிகம்

ராமாயணம் என்பது என்ன?

சுவாமி விவேகானந்தர்

எந்த வேதத்தில் எந்த ஸூக்தத்தில் வெளி நாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? காடுகளில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளை அவர்கள் வெட்டி வீழ்த்தியதாக உங்களுக்கு எங்கிருந்து தெரியவந்தது?

இதுபோன்ற மடமைப் பேச்சுக்கள் பேசுவதால் உங்களுக்கு என்ன லாபம்? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகிவிட்டதே. அதிலிருந்து பெரிய அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?

அதுசரி, ராமாயணம் என்பது என்ன? தென் பாரதத்திலிருந்த காட்டுமிராண்டிப் பூர்வீகக் குடிகளை ஆரியர்கள் தோற்கடித்ததா? ராமச்சந்திரர் நாகரிகமுள்ள ஆரிய மன்னர். யாருடன் அவர் போரிடுகிறார்? இலங்கை மன்னனான ராவணனுடன். ராமாயணத்தைச் சற்றே படித்துப் பாருங்கள். ராவணன், ராமனைவிட உயர்ந்த நாகரிகம் வாய்த்திருந்தானேயொழிய தாழ்ந்தவனாக இருக்கவில்லை.

இலங்கையின் நாகரிகம், அயோத்தியைவிட ஒரு விதத்தில் உயர்ந்து இருந்ததே தவிர, நிச்சயமாகத் தாழ்ந்திருக்க வில்லை. இதற்குப் பிறகு, இந்த வானரங்களும் மற்றத் தென் பாரத மக்களும் எப்பொழுது தோற்கடிக்கப் பட்டார்கள்? அதற்கு மாறாக அவர்களெல்லாம் ராமச்சந்திரரின் நண்பர்களாகவும், உடன் உழைப்பவர்களாகவும் இருந்தார்கள். வாலி, குகன் ஆகியோருடைய ராஜ்யங்கள் எதையாவது ராமச்சந்திரர் தம் அரசுடன் இணைத்துக் கொண்டாரா? சொல்லுங்கள்…

ஆரியர்களுக்கும் முதற் குடிகளுக்குமிடையே சிற்சில சமயங்களில் சில இடங்களில் சண்டைகள் நடந்திருக்கக் கூடும். அது சாத்தியம்தான். மற்றொரு சாத்தியக் கூறும் உள்ளது. தந்திரசாலிகளான சில முனிவர்கள், ராட்சதர்களின் காடுகளில் தமது வேள்வித் தீயின் முன்னால் உட்கார்ந்து கொண்டு தியானம் பண்ணுவது போல் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்திருக்கலாம்.

ஆனால் அதேநேரத்தில் ராட்சதர்கள் கல்லையும் எலும்புத் துண்டுகளையும் தம் மீது எப்பொழுதுதான் வீசுவார்களோ என்று எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கலாம். அவர்கள் வீசியவுடன் மன்னர்களிடம் விரைந்தோடுவார்கள். கவசமணிந்த மன்னர்கள், வாட்களுடனும், எஃகு ஆயுதங்களுடனும் தீப்போலப் பாயும் குதிரைகளிலேறி வருவார்கள்.

தமது தடிகளையும் கற்களையும் வைத்துக்கொண்டு அந்த முதற்குடிகள் எவ்வளவு நேரம்தான் சண்டையிட முடியும்? ஆகவே அவர்கள் ஒன்று கொல்லப்பட்டார்கள் அல்லது விரட்டியடிக்கப்பட்டார்கள். பிறகு மன்னர்கள் தமது தலைநகருக்குத் திரும்புவார்கள். அவையெல்லாம் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் ஆரியர்கள் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டதற்கு இது எப்படி ஆதாரமாக முடியும்? ராமாயணத்தில் அதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது?

SCROLL FOR NEXT