ஆன்மிகம்

வார ராசிபலன் 26-2-2015 முதல் 4-3-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் கேதுவும் 10-ல் வக்கிர குருவும் உலவுவதால் வார ஆரம்பத்தில் சிறு மனக்குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 27-ம் தேதி பிற்பகலிலிருந்து நல்ல திருப்பம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் ஏற்படும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் கிடைக்கும். தர்ம குணம் வெளிப்படும். வாரப்பின்பகுதியில் தொழில் ரீதியாக ஓர் அதிர்ஷ்ட வாய்ப்புக் கூடிவரும். சத் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

நண்பர்கள், உறவினர்களது சந்திப்புப் பயன்படும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். 5-ல் சூரியன் இருப்பதால் பிள்ளைகளால் சில இடர்பாடுகள் ஏற்படும். சுக்கிரன் 6-ல் இருப்பதால் கணவன்-மனைவி உறவு நிலை பாதிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் கூடும். ஆடவர்களுக்குப் பெண்களால் பிசூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் சங்கடம் ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சுமுகமாகப் பழகுவது நல்லது. 4-ம் தேதிமுதல் புதன் 5-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பிள்ளைகளால் செலவுகள் அதிகமாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 1, 2, 4.

திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், வான் நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 7, 9.

பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும். ஸ்ரீமகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 9-ல் குருவும், 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். வாழ்வில் முன்னேற நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். எதிர்ப்புகள் குறையும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். புதியவர்களது நட்புறவு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். பணப் புழக்கம் கூடும்.

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். தெய்வ தரிசனம் கிடைக்கும். 4-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுகள் குவியும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு பயன்படும். வாரக் கடைசியில் முக்கியமானதொரு காரியம் இனிது நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 2, 4.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: செவ்வாய், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்து வருவீர்கள். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். பேச்சில் திறமை வெளிப்படும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் கூடும். மாணவர்கள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். அரசு உதவி கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும்.

கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பெண்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகமும் தொழிலும் லாபம் தரும். 4-ல் செவ்வாயும் கேதுவும் இருப்பதால் தாய் நலனில் கவனம் தேவை. சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும். 4-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 1 (பகல்), 4.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், பச்சை, வெண்மை.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: செவ்வாய், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சனி 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பாகும். செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் மனதிற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிடைக்கும். வழக்கில் சாதகமான போக்கு நிலவிவரும். சிலருக்கு வெற்றியும் கிடைக்கும். பெரியவர்களும் தனவந்தர்களும் உதவுவார்கள்.

பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். உழைப்பு வீண்போகாது. பணப் புழக்கம் அதிகரிக்கவே செய்யும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். 4-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரம், கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். கடனாகக் கேட்டிருந்த பணம் கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். தர்ம சிந்தனை பெருகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 1, 2.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, மெரூன்.

எண்கள்: 6, 7, 8, 9.

பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது. ஸ்ரீரங்கநாதரை வழிபடவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். சுக்கிரன் 2-ல் உலவுவதும் நல்லது. சனியையும், சுக்கிரனையும் குரு பார்ப்பதும் சிறப்பாகும். இதனால் பொருள் வரவு அதிகரிக்கும். குடும்ப நலம் சீராகும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான பாதை புலப்படும். பெண்களால் அனுகூலம் ஏற்படும்.

புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவை சேரும். அவற்றால் வருவாய் பெறவும் வாய்ப்பு உண்டாகும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கூடும். நிலபுலங்கள் லாபம் தரும். ஜன்ம ராசியில் சூரியனும் 2-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் பேச்சில் நிதானம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. பொறுப்புணர்ந்து கடமை ஆற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 1, 2, 4.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம்.

எண்கள்: 6, 8.

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் தரும். திருமாலுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் குரு 5-ல் உலவுவது சிறப்பாகும். புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் வெற்றி வாய்ப்புகள் கூடும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு அமையும். சுப காரியங்கள் நிகழும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும்.

பெண்களின் நிலை உயரும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். கணவன்-மனைவி உறவு நிலை திருப்திதரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பரம்பரைத் தொழில் லாபம் தரும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உஷ்ணாதிக்கத்துக்கு இடம் தரலாகாது. தந்தை நலனில் கவனம் தேவை. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடவும். 4-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 1, 2, 4.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது.

SCROLL FOR NEXT