பெருமாளுக்கு ஏற்றம் தருவது, அவரது திருமார்பில் விளங்கும் திருமறு. இதன் அம்சமாகப் பிறந்தவர் கூரத்தாழ்வார். இவரும் தனது மார்பில் திருமறு கொண்டி ருந்தார். இவர் காஞ்சிக்கு அருகே உள்ள கூரம் என்ற கிராமத்தில் பிறந்ததால், கூரேசர் என்று அழைக்கப்பட்டார்.
இவரது இயற்பெயர் ஸ்ரீ வத்சாங்கமித்சர். தமிழில் இதன் பொருள் திருமறுமார்பன். ஸ்ரீ வைணவ நெறிகளில் சிறந்து விளங்கியதால், கூரத்துக்கு அரசர் எனப் பொருள்படும் வகையில் கூரேசர் என்ற பெருமைப் பெயரும் பெற்றார்.
இவர் வைணவ சித்தாந்தங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். செல்வச் செழிப்பு மிகுந்த குலத்தில் பிறந்த இவரது சிறு வயதிலேயே, இவரது தாயார் இறந்துவிட்டார். தந்தைக்கு மறுமணம் பேசினார்கள். ஆனால் இரண்டாம் தாயின் கட்டுத்திட்டங்களால் கூரேசரின் வைணவப் பற்றில் ஏதேனும் குறை ஏற்பட்டுவிடுமோ என எண்ணி அவரது தந்தை மறுமணம் செய்துகொள்ளவில்லை.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கூரேசர் மட்டுமல்ல, அவரது ஸ்ரீ வைணவக் கொள்கைகளும் வளர்ந்தன. செல்வக் குடியில் பிறந்த அவர் தான தர்மங்களைச் செய்தார். காஞ்சியில் குடி கொண்ட பேரருளாளப் பெருமாள் திருக்கோவிலில் இரவு நிவேதனம் முடிந்து, கதவைச் சாத்தும்வரை, கூரத்தாழ்வான் இல்லக் கதவும் மூடுவதில்லை. தொடர்ந்து வந்தோருக்கு இல்லையெனக் கூறாமல் அன்னம் அளித்துவந்தார்.
ஸ்ரீ ராமானுஜரின் அருமை பெருமைகளைக் கேள்விப்பட்ட, கூரேசர் அவரையே ஆச்சாரியனாகக் கொள்ள வேண்டி, தன் மனைவி ஆண்டாளுடன் கிளம்பினார். கிளம்புவதற்கு முன் தன் சொத்துக்களை எல்லாம் தானமாக வாரி வழங்கினார்.
அவர் வழக்கமாக உணவு உண்ணும் அழகிய தங்கத் தட்டை மட்டும் ஆண்டாள் கையில் எடுத்துக்கொண்டார். ஆனால் கூரேசரோ அதனை வாங்கிக் கண் காணாமல் விட்டெ எறிந்தார். செல்வங்களில் அவரது மனம் ஈடுபடவில்லை.
இவர் சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி ஒன்று, பின்னாளில் அவருக்கு ஆச்சாரியரிடம் பாராட்டைப் பெற்றுத் தந்தது. ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்ட இவர் முதல் நாள் பள்ளிக்குச் சென்றார். மறு நாள் பள்ளிக்குச் சென்றவுடனே இல்லம் திரும்பி விளையாடத் தொடங்கினார்.
ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று தந்தையார் கேட்டார். நேற்று நடத்தியதையே இன்றும் நடத்துகிறார் என்று இவர் கூறினார். நேற்று நடத்திய பாடத்தை அவரால் சொல்ல முடியுமா என்று கேட்க, கடகடவென்று அனைத்தையும் விளக்கத்துடன் கூறினார்.
இந்த சக்தியைப் பெற்ற இவர், பின்னாளில் ஸ்ரீ ராமானுஜருடன் காஷ்மீரம் சென்றார். அங்குள்ள வ்ருத்திக் கிரந்தம் என்ற நூலைப் படித்தறிய விரும்பினார். கால அவகாசம் போதாமையால் அதனைப் படியெடுத்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆச்சாரியர் ஒய்வு எடுக்கும் நேரத்திற்குள் அந்த கிரந்தத்தைப் படித்துவிட்ட அவர், அதனை முழுமையாகத் திருப்பிக் கூறி ஸ்ரீ ராமானுஜரின் பாராட்டைப் பெற்றார்.