மன்னிக்கும் குணத்தை கடவுளிடமிருந்தே மனிதர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிரபஞ்சத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டவராக அவர் இருக்கிறார். பெரும்பாலான மனிதர்கள் மனக்கசப்பை வளர்த்துக்கொண்டு, தங்கள் மரணம் வரையிலும் கூட பிறரை மன்னிக்காமல் வாழ்ந்து மறைகிறார்கள்.
ஆனால் பூலோகவாழ்வில் மரணத்தைப் படைத்த கடவுள் ‘தாராளமாக மன்னிக்கிறவர்.’ என ஏசாயா தீர்க்கதரிசி எடுத்துக் காட்டுகிறார். அவ்வளவு ஏன் நம்முடைய பாவங்களை அடியோடு துடைத்தெறியும் விலைமதிப்பற்ற ‘பலி’யாக தன் அருமை குமாரன் இயேசுவையே இந்தப் பூமிக்கு கடவுள் அனுப்பினார். இது அவருக்குப் பெரும் இழப்பாக இருந்தபோதிலும் கடவுள் அதைச் செய்தார் என யோவான் சுட்டிக்காட்டுகிறார்.
கப்பர் நகூம் அற்புதம்
பாவங்களைச் செய்த மனிதருக்கு பூலோகவாழ்வில் மரண தண்டனையைக் கடவுள் கொடுத்தாலும், சரியான சமயத்தில் கடவுள் அவர்களை உயிர்த்தெழுப்புவார். “எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்” என இயேசு கூறினார். ‘கடவுளே மன்னிக்க முடியாத அப்பேர்ப்பட்ட கொடிய பாவம் என்ன?’ என நீங்கள் கேட்கலாம். அது கடவுளையே அவதூறாகப் பேசும், அவரது சக்தியை கேலி செய்யும் பாவம் என்கிறார் இயேசு.
அவர் பேய் பிடித்தவர்கள், தொழுநோயாளிகள், முடக்குவாதம் வந்து படுத்த படுக்கையாய் கிடந்தவர்கள் என அனைத்து விதநோயாளிகளின் பாவங்களை மன்னித்து, அவர்களை குணமாக்கினார். கலிலேயா கடல்பகுதியை ஒட்டிய கப்பர்நகூம் நகரில் சிலகாலம் தங்கியபடி அவர் போதனைகளும் அற்புதமும் செய்து வந்தபோது நடந்த சம்பவம் இது.
அன்று காலை இயேசு தங்கியிருந்த வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டார்கள். வாசற்கதவு பக்கத்தில்கூட நிற்க முடியாதளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது; அவர்களிடம் கடவுளுடைய வார்த்தையை அவர் பேச ஆரம்பித்தார். அச்சமயத்தில் சிலர் அங்கே வந்தார்கள், அவர்களில் நான்கு பேர் பக்கவாத நோயாளி ஒருவனைச் சுமந்து வந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவுக்கு அருகில் அவனைக் கொண்டுபோக முடியவில்லை. எனவே, அவர் இருந்த இடத்திற்கு மேலாகக் கூரையை உடைத்து, திறப்புண்டாக்கி, அந்தப் பக்கவாத நோயாளியைக் கட்டிலோடு கீழே இறக்கினார்கள்.
அவர்களுடைய விசுவாசத்தை இயேசு கண்டபோது அந்தப் பக்கவாத நோயாளியிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன” என்று சொன்னார். அங்கே கூடியிருந்த கூட்டத்தில் இயேசுவை நோட்டமிடுவதற்காக கலந்திருந்த பரிசேயர் குருமார்கள் சிலர், “இந்த மனிதன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் தெய்வ நிந்தனை செய்கிறான். கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்கள் இருதயங்களில் யோசித்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களுடைய யோசனைகளை இயேசு உடனடியாகத் தமக்குள் உணர்ந்து, “நீங்கள் ஏன் இப்படி உங்கள் இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? இந்தப் பக்கவாத நோயாளியிடம், ‘உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிட்டன’ என்று சொல்வது எளிதா அல்லது ‘எழுந்து உன் கட்டிலை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வது எளிதா? பூமியில் பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் மனிதகுமாரனுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர்களிடம் கூறி, சில நொடிகளில் பக்கவாதம் குணம்பெற்ற அந்த மனிதனை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்து உன் கட்டிலை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போ” என்றார்.
உடனடியாக அவன் எழுந்து, தன் கட்டிலை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக வெளியே நடந்துபோனான்; அதைக் கண்டு அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டு, “இப்படிப்பட்ட ஒன்றை நாங்கள் பார்த்ததே இல்லை” என்று சொல்லிக் கடவுளை மகிமைப்படுத்தினார்கள். ஆனால் பரிசேரியர்கள் இயேசுவை கேள்விகளால் துளைத்தார்கள். நீர் செய்வது தெய்வ நிந்தனை என்றார்கள். பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் மனிதராகிய உமக்குக் கிடையாது என்று குரல் எழுப்பினார்கள்.
நல்ல கனி தரும் மரம்
அதற்கு இயேசு “ எல்லா விதமான பாவமும் நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமான நிந்தனை மன்னிக்கப்படாது. உதாரணமாக, மனித குமாரனுக்கு விரோதமாக எவனாவது ஒரு வார்த்தை பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படும்; ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமாக யாராவது பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படாது; இந்தக் காலத்திலும் சரி, இனிவரும் காலத்திலும் சரி, அது மன்னிக்கப்படாது.”
“நீங்கள் நல்ல மரமாக இருந்தால் நல்ல கனியைக் கொடுப்பீர்கள்; கெட்ட மரமாக இருந்தால் கெட்ட கனியைக் கொடுப்பீர்கள்; ஒரு மரம் அதன் கனிகளாலேயே அறியப்படும். பொல்லாதவர்களான உங்களால் எப்படி நல்ல காரியங்களைப் பேச முடியும்? இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது.
நல்ல மனிதன் தன் உள்ளத்தில் புதைத்து வைத்திருக்கிற நல்ல விஷயங்களையே பேசுகிறான்; கெட்ட மனிதனோ தன் உள்ளத்தில் புதைத்து வைத்திருக்கிற கெட்ட விஷயங்களையே பேசுகிறான். நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதர்கள் தாங்கள் பேசுகிற ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்;
ஏனென்றால், உங்களுடைய வார்த்தைகளால்தான் நீதிமான்கள் என அங்கீகரிக்கப்படுவீர்கள்; உங்களுடைய வார்த்தைகளால்தான் குற்றவாளிகள் எனத் தீர்க்கப்படுவீர்கள்” (மத்தேயு 12:31-36) என்றார். எனவே வார்த்தைகளை கவனித்துப் பயன்படுத்துங்கள். கடவுளை நிந்தனை செய்யும் பாவத்தை எந்தச் சூழ்நிலையிலும் செய்துவிடாதீர்கள். அந்தப் பாவம் என்றும் மன்னிக்கமுடியாத பாவம் என்பது உங்கள் நினைவில் இருக்கட்டும்.