ஆன்மிகம்

மறுபேச்சின்றி கீழ்ப்படிதல்: விவேகானந்தர் மொழி

செய்திப்பிரிவு

யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள்.

இந்த மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது. நாமெல்லாம் மமதையுள்ளவர்கள். இந்த அகங்காரம் எந்த வேலையையும் நடக்க விடாது.

மகத்தான துணிச்சல், வரம்பில்லாத தைரியம், அபாரமான சக்தித் துடி துடிப்பு இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பரிபூரணக் கீழ்ப்படிதல் இந்தக் குணங்கள் தனி மனிதனையும் தேசத்தையும் மறுமலர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள். கீழ்ப்படிய எவருமில்லை. பெரிய வேலைகளைச் செய்யும்போது, தலைவனின் கட்டளைகளை மறுபேச்சின்றிக் கீழ்ப்படிந்து நிறைவேற்ற வேண்டும்.

மடத்தின் சாக்கடையைச் சுத்தம் செய்வதில், எஞ்சியுள்ள எனது வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்று எனது `குரு பாயி’ சகோதரர்கள் கூறினால் அந்தக் கட்டளையை எவ்வித எதிர்ப்பு முணுமுணுப்புமின்றி கீழ்ப்படிந்து கட்டாயமாக நிறைவேற்றுவேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பொது நன்மையைக் கருதி வருகிற கட்டளையை, எவ்விதமான சிறு முணுமுணுப்புமின்றிக் கீழ்ப்படிந்து நிறைவேற்ற யாருக்குத் தெரிகிறதோ அவன் மட்டுமே உயர்ந்த தளபதியாக ஆகமுடியும்.

கீழ்ப்படிதலாகிற நல்ல குணத்தைப் பழக்கிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் உங்களது சொந்த நம்பிக்கையைக் கைவிட்டுவிடக் கூடாது. மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காவிட்டால் எந்த வேலையையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவர, ஒரு மையப் புள்ளியில் திரட்டி ஒற்றுமைப்படுத்த முடியாது. தனிப்பட்ட சக்திகளை இப்படித் திரட்டி ஒரு மையத்தில் இணைக்காமல், எந்தப் பெரிய காரியத்தையும் நிறைவேற்ற முடியாது.

குறைகளை இதமாக எடுத்துச் சொல்லுங்கள்

எந்த ஒருவருடைய வழித்துறைகளையும் குலைக்காதீர்கள். குறை கூறுவதை அடியோடு விட்டுவிடுங்கள். வேலை செய்கிறவர்கள் சரியாக வேலை செய்து வருவதாக உங்களுக்குத் தெரிகிற வரையில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

அவர்கள் தவறிழைப்பதாகத் தோன்றும் போது, சாவாதானமாக அவர்களது பிழைகளை அவர்களுக்கு உணர்த்திக் காட்டுங்கள். எல்லாக் குழப்பங்களுக்கும் விஷமங்களுக்கும் மூலகாரணம் ஒருவரையொருவர் குற்றங் குறை கூறுவதுதான். பல இயக்கங்கள் நிலை குலைந்து வீழ்ச்சியுறுவதில் இதுவேதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT