மகேந்திரன் என்ற முதலை கவ்வ, கஜேந்திரன் என்ற யானை ஆதிமூலமே என்று அலறியது. பகவான் அவசரமாகக் கிளம்பி ஓட, இன்னதென்று புரியாமல் ஒருகணம் திகைத்து போனார்களாம்,
கருடனும் மகாலஷ்மியும். சுதாரித்துக்கொண்ட கருடன் கிளம்ப முயல, தாயாரோ பெருமாள் அவசரத்தில் விட்டுச் சென்ற பீதாம்பரத்தை, கருடனிடம் கொடுத்து பெருமாளிடம் சேர்க்கச் சொல்கிறார்.
அதிவேகமாகப் பறந்த கருடன், பெருமாளின் பாதப் பகுதியை அடைந்து அவரைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டாராம்.
இன்னும் வேகத்தை அதிகரித்ததால், கஜேந்திரனை நெருங்கிய பெருமாள், சக்கரத்தாழ்வாரைக் கொண்டு மகேந்திரன் என்ற அம்முதலையின் கழுத்தைச் சீவ, அது பல காலத்திற்கு முன்னர் சாபம் பெற்ற தேவனாகத் தோன்றி பெருமாளை வணங்கிய பின் மறைகிறது.
தன் பதியின் வாகனமான கருடனைத் தனக்கும் வாகனமாகக் கொண்டு, திருச்சாணூர் பத்மாவதி தாயார் ஆண்டுதோறும் கருட சேவை சாதிக்கிறார். இவர் ஸ்ரீநிவாசப் பெருமாளின் பதியாக மாறுவதற்கு முன்னர் அரசன் ஆகாசராஜனின் மகள்.
பெருமாளே தனக்கு மாப்பிள்ளையாக வரவிருக்கிறார் என்பதை அறிந்த அரசன் ஆகாசராஜன் சம்மதம் தெரிவித்தான். ஆனால் அரசனின் மகளை மணப்பதால் சீனிவாச பெருமாளுக்கு கல்யாணச் செலவு அதிகமாக இருந்தது.
எனவே நாரதரின் அறிவுரையின்படி குபேரனிடம் கடன் வாங்கினார் சீனிவாசன். கலி முடியும் தருவாயில் கடனை முழுமையாக அடைப்பதாகவும், அதுவரை வட்டி அளிப்பதாகவும் உறுதியளித்து குபேரனுக்குப் பத்திரம் எழுதிக் கொடுக்கிறார் சீனிவாச பெருமாள்.
ஐஸ்வர்யத்தைப் பெற்ற அவர் தனது திருமணத்தை விமரிசையாக நடத்திக்கொண்டார். ஆகாசராஜனும் அரசனானதால் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்திக் கொடுத்தான். இன்றும் குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியை பெருமாள் செலுத்திவருவதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.
அன்பினாலும் பூர்வ ஜென்ம வாசனையாலும் தாயாரிடம் கட்டுண்ட பெருமாளும் தாயாரும் கீழ் திருப்பதியிலும் மேல் திருப்பதியிலும் பிரிந்திருக்க, இந்த திருக்கல்யாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று காரணமாகிறது. அரசரோ அள்ளி அள்ளி சீர் கொடுத்திருந்தார்.
ஆனால் சமையல் பொருட்களில் கருவேப்பிலை கொத்து இல்லை. இதனைக் கவனித்துவிட்ட பெருமாள், தாயாரிடம் இவ்வளவு சீர் செய்த அரசனுக்குக் கருவேப்பிலை வாங்குவதற்குப் பணம் இல்லையா எனக் கேட்டார். உடனே தாயாரும் சூரிய அஸ்தமனத்திற்குள் வாங்கிவருவதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றார். ஆனால் அவர் வருவதற்குள் இருட்டிவிட்டது.
இருட்டுவதற்குள் வராத தாயாரை, பாதுகாப்புக் கருதி, கீழ்த் திருப்பதியிலேயே தங்கிவிடச் சொல்கிறார் பெருமாள். இன்றும் நள்ளிரவில் திருமலைக் கோவில் நடைசாற்றிய பின், பெருமாள் தானே வேக வேகமாக மலையில் இருந்து இறங்கி தாயாரைக் காண வருவதாகக் கூறப்படுகிறது.
தாயாரின் கருணை விரைவில் கிடைக்க, கருட சேவையில் தாயாரை வணங்கினால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.