இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை வரையறுத்துள்ளனர் பெரியோர்.
இதில் சரியை என்பது உழவாரப்பணி முதலாக சிவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் செய்யும் தொண்டு. அதோடு சிவனடியார்களை அன்பாக உபசரிப்பதும் ஆகும்.
பெரிய புராணத்தில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே இறையருளைப் பெற்ற எண்ணற்ற நாயன்மார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்து கிரியை எனப்படுவது, உள்ளத்தாலும் புறத்தாலும் பூஜிப்பது.
நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூசை கொள்ள வாராய் பராபரமே - என்னும் தாயுமானவர் வழியில் பூஜிப்பது கிரியை ஆகும்.
சிவம் ஒன்றையே ஒருமுகப்படுத்தி வழிபடும் நிலை யோகம். புலன்களின் வழியாக வேறு எந்த சிந்தனைகளும் நமக்குள் தோன்றாதவாறு, நாம், இறைவனாகிய பரம்பொருளை தியானிக்கிறோம் என்னும் வேறுபாடு மறைந்து, நாமும் தியானமும் இரண்டறக் கலக்கும் நிலையே யோகம்.
இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தெரிவிக்கும் நூல்களைக் கற்று பெரியவர்களின் உபதேசங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறுவதற்கான ஞானத்தைப் பெறுவது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்த நான்கு வழிகளின் மூலமாக இறைவனின் அருள் கிடைக்கும்.
சிவன் அடியார்களைப் போற்றி சிவன் ஆலயங்களில் செய்யும் தொண்டால், சாலோகம் (சிவன் உலகம்), உள்ளும் புறமும் பூஜிப்பதால் சாமீபம் (சிவன் அருகில் இருத்தல்), பரிபூரண யோகத்தால் சாரூபம் (சிவ ஸ்வரூபமும்) கிடைக்கும். சிவ சிந்தனையை ஞானத்தில் தேக்கி இருப்பதால் முக்தி எனும் பலன் கிடைக்கும்.